10/19/10

ஒரு காதல் நிராகரிக்கப்படும் போது..

சிலுவையாக போகும்
ஒரு மரத்தின் நிழலை
ஒரு நாள் கடந்து போகிறது..

அருவியில் விழுந்த
ஒரு குழந்தையின் குரல்
இன்னமும் கேட்பதான
ஒரு பொய் வடிவம் கொள்கிறது..

எழுத்து பிழைகளை போல் அல்லாமல்
ஒரு சொல் உச்சரிக்கபடுகையில்
ஒரு பிழையும் சுட்டி காட்ட
முடியாத உண்மை புரிந்து போகிறது..

ஒரு துர்கனவு திடுக்கிட்டெழுந்து
நீர் அருந்தி
ஒரு வேண்டுதலோடு தூங்க போகிறது..

ஒரு உடலின் அந்தரங்கமான
ஒரு உறுப்பு
வசவு சொல்லாக்கபடுகிறது..

ஒரு சாமுராயின் கத்தி
கடந்த காலத்திற்க்கும் எதிர் காலத்திற்க்கும்
மத்தியில் கீறலிட்டு
ஒரு சபதமேர்க்கிறது..

ஒரு நொடியில்
ஒரு சொல்
ஒரே ஒரு அர்த்தத்தை
வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லி பார்க்கிறது..

ஒரு காதல் நிராகரிக்கப்படும் போது
காதல்
ஒரு டிராகுலாவை போல் வேடமிட்டு
ரகசியம் சொல்ல வேண்டுமென்று சொல்லி
காதினருகில் நகரும் பாவனையில்
கழுத்தினருகில் நகர்கிறது...

ஒரு காதல் நிராகரிக்கப்படும் போது..

ஒரு நூற்றாண்டை கடந்த
ஓவியத்தில் கண்ணீர்
கரை படிகிறது..

ஒரு நீண்ட கவிதை
கற்பனையிலேயே தீயிடபடுகிறது..

ஓராயிரம் இசை
மீட்டிய ஒரு யாழின் நூல்
அறுபடுகிறது..

ஒரு அடையாள சிற்பம்
புதை மணலின் மேல்
வைக்கப்படுகிறது..

ஒரு இன்பவியல் இலக்கியம்
கல்லறையில் தூங்க
வைக்கப்படுகிறது...

ஒரு கலை
கண்கள் கட்டப்பட்டு தூக்கிலிடபடுகிறது..

ஒரு காதல் நிராகரிக்கப்படும் போது
ஒரு சாத்தானால் அக்காதல்
தத்தெடுத்துக் கொள்ளப்படுகிறது..
நிராகரிப்பு..
நிராசை..
துக்கம்..
அவமானம்..
இவைகளை கட்டித்தழுவி
முத்தமிடச் சொல்கிறது...-வெங்கடேஷ் பாபு

10/12/10

நீ என்னுடன் பேசாதிருக்கையில்

ஒரு பனிக்குடம் உடைந்து போகிறது,
ஒரு குழந்தை பேச தொடங்குகிறது,
ஒரு பிடித்த பாடல் புறக்கணிக்கப்படுகிறது,
ஒரு குறுஞ்செய்தி அழிக்கப்படுகிறது ,
ஒரு நண்பனின் தொலைபேசி அழைப்பு ஏற்கப்படுகிறது,
ஒரு போதையின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகிறது,
ஒரு வார்த்தை சொல்லி பார்க்கப்படுகிறது,
ஒரு தர்க்கம் உயிர் பெறுகிறது,
ஒரு தராசு காற்றிலாடுகிறது,
ஒரு கதவு தானே மூடிக்கொள்கிறது,
ஒரு உரையாடல் பாதியில் நிற்கிறது,
ஒரு நாள் வராமலே போகிறது,
ஒரு ஒப்பிடல் நிகழ்த்தப்படுகிறது,
ஒரு தவளை பாம்பினருகில் நகர்கிறது,
ஒரு முதுமக்கள் தாளி வெளியில் தெரிகிறது.

என்னுடன் நீ பேசாதிருக்கையில்
ஒரு மௌனம் தனிமை பற்றிய
இசை குறிப்பை பியானோவில் இசைத்து காட்டுகிறது.

10/11/10

ஒரு அழகற்ற பெண்

ஒரு அழகற்ற பெண்
ஓவியர்களால் நிர்வாணமாக்கப்பட்டு
காட்சி படுத்தப்படுவதில்லை.

சிற்பிகளால் மார்புகள் புடைக்க செதுக்கப்பட்டு
வழிபாடு தளத்திலோ, பூங்காவிலோ
நிற்க வைக்கப்படுவதில்லை.

கவிஞர்களின் பொய்நிறை
உவமைகளுக்கு உந்துதல் சேர்பதில்லை.

விபசார விடுதிகளில்
ஓய்வற்று புணர அழைக்கப்படுவதில்லை.

இன்னாரு பெண்ணின்
திருமண முறிவிற்கு காரணமாவதில்லை.

கால்பந்து வீரனுக்கோ, திரைப்பட நாயகனுக்கோ
திருமணம் நடக்கையில் மனம் உடைவதில்லை.

தன் மார்பு உற்று நோக்கப்படுவதாய்
பிரம்மை கொள்வதில்லை.

ஆசைகள் குறித்தான புத்தரின் கூற்றுக்கு
மறுப்பு சொல்வதில்லை.

ஆண்கள் நிறைந்த இடங்களில்
உரக்க பேசுவதோ,சிரிப்பதோயில்லை.

தான் காதலித்த, காதலிக்கப்பட்ட கதைகளை
யாரிடமும் பொதுவில் பகிர்வதில்லை.

அழகிய பெண்களிடம்
ஒருவனால் நேசிக்கபடுவது
வரமென்று எடுத்துரைப்பதில்லை.

இதை தவிர
அழகிய பெண்களிடம் இல்லாத ஒன்று
தங்களிடம் இருப்பது குறித்தான ரகசியத்தை
யாரிடமும் சொல்லி கொள்வதில்லை.

10/10/10

அடையாளம் துறப்பதென்பது..

மாட்டிறைச்சியோ, பன்றி இறைச்சியோ
புசிக்க தொடங்குவது..

பகை தேச குழந்தைக்கு
தூங்க கதை சொல்வது..

பால்ய தழும்பின் நுனியில்
பூக்கள் வரைவது..

அந்தரங்க மச்சங்கள் மறைய
பச்சை குத்தி கொள்வது..

மறை நூல்களின் பொருட்டு
கொல்லாமலும்,கொல்லபடாமலும் இருப்பது..

ஏளனித்த உதடுகளை
நன்றி சொல்ல வைப்பது..

ஒரு போலி தலைவனை
படுகொலை செய்வது..

பெண்னென்பது மட்டுமே அறிந்து
ஒருவளை காரிருளில் புணர்வது..

பெயரை கேட்கும்பொழுது
சிரித்துவிட்டு கடந்து செல்வது..

8/7/10

குறுஞ்செய்திகள் 4

உன் அன்பின் பரிசுத்தம்
என்னை பயம் கொள்ள செய்கிறது..
இதுவரை நான் பிறரிடம்
அன்பென உணர்ந்தவை யாவும் பொய்யா??

8/2/10

அவள் கூந்தலின் பாடல்கள் 5

பெரும் வெடிப்புக்கு பிறகு
வெந்து தணிந்து குளிர்ந்த
என் மீது பாசியென
உன் கூந்தல் மலர
அங்கிருந்தே எல்லாமும் தொடங்கியது...

7/30/10

கொசுயிசம்

பிராமனன் சத்ரியன் வைஷ்ணவன் சூத்திரன்
என அனைவரையும் கடித்து
வர்னாஸ்ரமத்திற்கு மலேரியா பரப்பி
"ரத்தத்தின் சமத்துவம்" என்னும்
கொசுயிச கொள்கைக்கு
வாழ்ந்து போராடி மடியும்
கொசுவும் ஒரு போராளி..

பரம்பொருளாய் தூணிலும் துரும்பிலும்
கொசுயிசம் பரப்ப காத்திருக்கின்றன
அதன் போராளி சந்ததிகள்..

கொசுயிசம் பரப்பும் கொசுக்கலனைத்தும்
எனக்கு தற்கொலைப்படை மகாத்மாக்கள்...

கண்ட இசங்களை விட்டு
கொசுயிசம் கண்டு கொள்ளுங்கள்,
மனிதனாவீர்கள் -- ஒரு கொசுயிஸ்ட்...

7/13/10

குறுஞ்செய்திகள் 1

கேள்விகளற்ற இரவில்
பதில்களின் சாவியை என்னிடம் தந்து
மௌனத்தை திறக்க சொன்னாய்..
சாவிகள் மட்டுமே கொண்டு
என்னை விலங்கிடுகிறது காமம்..

குறுஞ்செய்திகள் 2

பார்த்து கொண்டே இருந்தன
புகைபடத்திலிருந்து உன் கண்களும்
அதை பார்த்து கொண்டிருக்கும் என் கண்களும்...
ஒரு இமை பொழுதில்
இமைத்த இரு கண்கள்
யாருடையவை ?

குறுஞ்செய்திகள் 3

இப்பொழுதே கவிதை சொல்
என நீ சொல்ல
என் வாய்வரை வந்த
சொற்களற்ற கவிதைகள் குறித்து
பின் வரும் நாளின்
உன் இதழ் மீதான முத்தங்கள்
வாய் விட்டு சிரிக்கும்...

6/15/10

அவள் கூந்தலின் பாடல்கள் (4)

சொல்ல விரும்புவதை அதனிடம் சொல்ல,
உன் காதோர முடிகளுக்கு காது கேட்குமா??

6/8/10

Egyptல் mummyயாயிருந்தேன்

நான் Egyptல் mummyயாயிருந்தேன்..
நீ National geographic channelலாய் வந்தாய்..

என் உடலை சுற்றியிருந்த துணியிலிருப்பது
வாசனை திரவியம் என்றாய் நீ..
எப்படி சொல்ல?
அது என் காதலின் வியர்வை என்று..

என் உள்ளுறுப்புகள் எதுவும்
காணவில்லை என்றாய் நீ..
எப்படி சொல்ல?
அவை என் காதலுக்கு செலுத்தி
விட்ட காணிக்கை என்று..

நான் இறந்த காலம்
கி.மு என்றாய் நீ..
எப்படி சொல்ல?
உனை பார்த்த பொழுதென்று..

நான் பாட்டுக்கு அமைதியாய்
Egyptல் mummyயாயிருந்தேன்..
நீ ஏன் National geographic channelலாய் வந்தாய்?

--ஜெயசீலன்

6/3/10

அவள் கூந்தலின் பாடல்கள்(3 )

என் காதல் ஓய்வெடுக்க நினைத்தாலும்,
காற்றிலாடும் உன் கூந்தல் விடுவதில்லை...

5/31/10

அவள் கூந்தலின் பாடல்கள்(2 )


உன் உதிரும் முடிகளை எனக்குதா
மயிலிறகு சேர்க்கும் சிறுவன் நான்..

-- ஜெயசீலன்

அவள் கூந்தலின் பாடல்கள்(1 )

உன் கூந்தலின் இருளில்
பாரதியின் வரி..
இருள் என்பது குறைந்த ஒளி..

--- ஜெயசீலன்

5/18/10

வீர வணக்கங்கள்

சென்ற ஆண்டு ஈழ போர் அதன் உச்ச கட்டத்தில் இருந்த பொழுது,ஒரு தேசிய இனத்தின் நீண்ட நெடிய விடுதலை போர் உலக வல்லாதிக்கங்களின் துணையோடு தோல்வியை நோக்கி நகர்த்த பட்டபொழுது,நான் ஆடாவிட்டாலும் என் சதை ஆடியது...என்னை மிகுந்த வேதனைக்கும்,கோபத்திற்கும்,அவமானத்திற்கும் உள்ளாக்கிய ஈழ போரின் முடிவிற்கு பிறகு நான் எழுதியது.......


தம் மக்களுக்கான பாவ விடுதலைக்காய்
சிலுவையேறிய
நசரேத்தூர் யேசுவைபோல்,
தமிழ் பேசும் மக்களுக்கான விடுதலைக்காய்
பாஸ்பரஸ் ,க்ளஸ்டர் குண்டுகளில்
கருகிய எம் சொந்தங்களே,

"உச்சி மீது,வானிடிந்து வீழினும்
அச்சமில்லை,அச்சமில்லை " என முழங்கும்
பாரதி பாடலின்
சமகால ஈழத்து மொழிபெயர்ப்புகளே,

பாவத்தின் குறி சிலுவை,
ஓர் மரணத்தில் புனிதமானதுபோல்,
சயனைட் குப்பிகளை உங்கள்
தியாகத்தின் முத்தத்தால் புனிதமாக்கிய
எம் இன மாவீரர்களே,

ஆதியின்,எம் இனத்தின்
நிறமாம் கருப்பை
உங்கள் நிறமாக்கி கொண்ட கரும்புலிகளே,

தமிழ் இன பெண்ணின் அழகை,இயல்பை,
பெண்மையை,மொழியை,தாய்மையை
இன்னமும் மிச்சபடுத்தியிருந்த
ஒரே பூகோள பரப்பான ஈழத்தில்
நான் சந்திக்காமல் மறித்து போன
காதலியே,கிழவியே,தாயே,சகோதிரியே,

இறக்கும் தருணம் வரை
மண்ணின்,நம் பெண்ணின்,
மானத்திற்காய் போராடிய,
ஊனப்பட்ட,மரித்த,
எம் பாட்டனே,ஐயனே,அண்ணன் தம்பியே,

திரும்பி எழ,திருப்பி அடிக்க,
காரணம் கூற,
குண்டுகளின் வெடிப்பை,
பீரங்கி தடத்தை,பிணங்களின் புதைப்பை,
அர்த்தத்தோடு மௌனமாய்
உள்வாங்கி கொண்ட
ஈழத்து மண்ணே,

அப்பாவி மக்களின்
மரணத்தின் ஓலத்தை,
இயலாமையின் அழுகையை,
வலியின்,கற்பழிப்புகளின் கதறலை,
பின்னாளின்
புரட்ச்சியின் குரலுக்காய்
சாதகம் செய்து கொண்டிருக்கும்
ஈழத்து காற்றே,

தீக்குளிக்க விரும்பாத அல்லது
தீக்குளிக்க துணியாத அல்லது
தீக்குளிக்க இயலாத,
ஆயிரகணக்கான தமிழக முத்து குமரன்கள் சார்பில்
உங்களுக்கு,
ஜெயசீலனாகிய எனது

வீர வணக்கங்கள்.

5/16/10

வஞ்சிப்பூவின் மணம் வீச ...

சதுரங்க பலகையில்
எம் திசையில்
யாம் விடுதலையின் பூக்கள் நட்டு கொண்டிருந்தோம்..

மறுதிசையில் புத்தம் அறியா
புத்த தேசத்திலிருந்து வெறுப்பும் விரோதமும் வளர்த்த
குதிரைகளும்,யானைகளும்
எம் திசை நோக்கி பாய்ந்தன.

சிறியோரை இகழ்தல் இலமே
எனினும்,
சதுரங்க பலகையின் போர்
மரபு மீறி
கட்டங்கள் தாண்டிய உம்
படை குறித்து வேறென்ன செய்ய??

வரலாற்றில் விடுதலைக்காய் நிகழ்ந்த
எல்லா போர்களின் நிழலும்
எம் மண் மீது விழ,
தும்பை பூவின் மணம்
எம் தெருவெங்கும் நிறைந்தது.

உம் படையின் பிணங்களை
எம் விடுதலைக்கு எதிரான
அடுத்த ஒரு தேசம் ஆள் இட்டு நிரப்பியது..

எம் படையின் பிணங்கள் தின்ன
பருந்துகளும் பறக்கா வன்னம்
எம் நிலத்தின் மேல் குண்டு வீச்சு நடந்தது..

சதுரங்க பலகைகளும்
நான்கு திசைகளும் இருக்கும் வரை
யுத்தங்கள் ஓயா
என்பதையறியா உம் படைகள்,
எம் கல்லறைகள் நிரம்பி
உம் நிலம் நோக்கி நகர்ந்த
ஒரு பொழுதில் எமை வென்றதாய்
சொல்லி ஓய்ந்தது..

என்றோ ஒரு நாளில்
எம் திசையிலிருந்து
வஞ்சிப்பூவின் மணம் வீச,
எம் விடுதலையின் கனவு
துப்பாக்கி சத்தத்தில் கலையவில்லை
என்றறிவாய் பகைவனே.

--- ஜெயசீலன்

5/11/10

இப்படித்தான் இயற்கையில் எல்லாமும்...

பிரிவிற்கான ஒப்பந்தத்தோடு
நம் அறிமுகம் நிகழ்ந்தது..

தேவை
உனக்கும் எனக்கும் இடையிலிருந்தது.
பணம் உனக்கு,புணர்தல் எனக்கு.

நீ மறுத்தலை
பரிசோதிக்க இயலாத இடத்திலிருந்தாய்.
எனினும்,
நீ மறுத்துவிட கூடாதென்ற பயத்திலிருந்தேன்..

லௌகீக வாழ்வின்
எல்லாவற்றையும் போல்
அதற்க்கும் தொடக்கமிருந்தது..

முடிவை பற்றி எண்ணமில்லாமல்
இப்படித்தான் இயற்கையில்
எல்லாமும் தொடங்கியதா?

தேடல்
ஆப்ரிக்கா தாண்டி,
பின் கடல்கள் தாண்டிய
நம் மூதாதையரை வழிநடத்தியது போல்,
இரு உடல்களின் மீது
நம்மை வழிநடத்தியது..

பிரெஞ்சு புரட்ச்சியின்
சகோதரத்துவம் தவிர்த்து
சுதந்திரத்தையும்,சமத்துவத்தையும்
நாம் முழுதாய் பரிசோதித்தோம்.

பரிசோதனைகள்,
சத்தங்களை இசையாக்கியது,
கூர்கற்களை கொலைகருவியாக்கியது.
அதுவேதான்,
உன் பின் கழுத்து
உன் உணர்ச்சிகளின் குவியம்
என காட்டி கொடுத்தது.

இவற்றுக்கு இடையில்
சிலுவை குறித்தும்,
புத்தர் குறித்தும்,
மங்கோலியா குறித்தும் பேச
நமக்கு எப்படி நேரம் வாய்த்தது?

சாவை அஞ்சும் எல்லோரும்
பிறந்தவர்கள் என்பது போல்
முடிந்திட கூடாதென்று எண்ணினாலும்
நான் தொடங்கியிருந்தேன்..

லௌகீக வாழ்வின்
எல்லாவற்றையும் போல்
அதற்க்கும் முடிவிருந்தது..

ஒரு பழங்குடியின் சடங்குகளை போல்
பாசாங்கு எதுவுமற்று
நம் பிரிவு நிகழ்ந்து முடிந்தது..

முன் நிகழ்ந்தவை கனவென உதிர
இப்படித்தான் இயற்கையில்
எல்லாமும் முடிந்து போனதா?

---ஜெயசீலன்

5/9/10

பிடித்த பாடல் வரிகள்( 1 )

எனக்கு ஒழுங்கற்ற அழகின் மீது எப்பொழுதும் ஒரு ஈர்ப்பு உண்டு...குறிப்பாக ஒழுங்கற்ற அழகுடன் உள்ள பெண்களின் மீது நான் மிக இயல்பாக ஈர்க்க படுவதுண்டு..ஒழுங்கற்ற அழகு என்று சொல்லும் போது ஒரு உதாரணம் தருவது உதவும் என்று என்னுகிறேன்.. ஏன்ஜலின ஜோலியின் அழகு ஒழுங்கியலின் அழகு அல்ல,மாறாக ஒழுங்கற்றதின் அழகு...ஜோலியின் முகத்தில் இருக்கும் எதுவும் அழகின் முன் மாதிரியாக பொதுவில் ஒத்து கொள்ளப்பட்ட வடிவத்தை கொண்டிருக்காது..எனினும் அதுவே ஜோலியின் அழகாக எனக்கு படுகிறது...நுட்பமான நவீன ஓவியம் என்று சொல்ல படுவதை காட்டிலும் திடிரென்று தோன்றி மறையும் ஒழுங்கற்ற
மேகங்கள் அழகென தோன்றுவதை போல...ஆனால் என்னுடைய சில நன்பர்கள் ஜோலியின் கழுத்துக்கு கீழான அழகை என்னோடு சேர்ந்து அமோதித்தாலும்,முகத்தை பொறுத்த வரை கடுமையாக என்னோடு முரண் படுவார்கள்.ஒரு பாடல் பிடித்து போவதை போன்றே ஒரு பெண் பிடித்து போவதும் ஒரு அந்தரங்கமான ரசனை சார்ந்ததாக இருக்கலாம்...அப்படி ஒரு அந்தரங்கமான ரசனையாக நான் உணர்வதுதான் சொற்களின் மீதான காதல்...

சமீப காலங்களில் சொற்களின் மீதான காதல் எனக்கு அதிகமாய் கொண்டே போகிறது..சில சொற்களை இசையோடு கேட்கையிலும்,சில சொற்களை சிலர் சொல்ல கேட்கையிலும்,சில சொற்கள் வாசிக்க கிடைக்கையிலும்,சில சொற்களை வெறுமனே எண்னி பார்க்கையிலும் அவை எனக்கு மிக ஆழமான மன அதிர்வுகளை ஏற்படுத்துகின்றது...உதாரனமாக நேற்று இரவு ஒரு பெண்ணுடைய கவிதையை படித்து விட்டு அவள் குறித்தான சிந்தனை "கவிதை எழுதுபவள்" என்ற சொற்றொடருக்கு என்னை அழைத்து சென்றது.. "கவிதை எழுதுபவள்" என்பதான மிக சாதாரண இரு வார்த்தைகள் எனக்கு ஏற்படுத்திய அக உணர்வு மிக அலாதியானது.. ஜோலியின் அழகு குறித்தான ஈர்ப்பு போன்றே சில வார்த்தைகளின் மீதான ஈர்ப்பும் எனக்கு மிக அந்தரங்கமான சில மன வாசல்களை திறக்கிறது...

வார்த்தைகளை சார்ந்த என் மனவெழுச்சி அவ்வப்பொழுது சில பாடல் வரிகளை கேட்கும் பொழுது நிகழும்..அதை நான் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் போது நான் முன்பே சொன்னது போல அவை மிக சாதாரண வார்த்தைகள் என பிறர் கடந்து போய்விடுவார்கள்.எனினும் பிடித்த வரிகளை பகிர்ந்து கொள்ளும் தாகம் எனக்கு தனிந்ததே இல்லை...எனவே "பிடித்த பாடல் வரிகள்" என்னும் இந்த தொடர்பதிவை இந்த பதிவில் இருந்து தொடங்குகிறேன்..மீண்டும் ஒரு முறை இது என் அகம் சார்ந்த ஒரு பதிவு என்பதால் உங்களுக்கு இவை சுவாரசியம் மூட்ட தவறலாம் என்று சொல்லி கொள்கிறேன்........

" தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல"

இளையராஜாவின் நிறைய பாடல்கள் என்னை இசையின் உன்னதத்தை உணர வைத்தவை..அவற்றில் "அவதாரம்" படத்தில் வந்த "தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல" என்ற பாடலும் ஒன்று...வாலி எனக்கு பிடித்த பல பாடல்களுக்கு பாடல் வரிகளை எழுதி உள்ளார்..வாலியின் பாடல் வரிகள் மிகவும் ஒலியின் அழகியல் சார்ந்தவை என்று நான் என்னுகிறேன்..மிக சாதாரண வார்த்தைகளின் கோர்வைகள் இசையோடு சேர்ந்து ஒலிக்கும் போது உன்னத அனுபவம் நோக்கி நகரும் ஆச்சர்யங்களை வாலியின் பல பாடல்களில் நான் அடைந்திருக்கிறேன்...அப்படி போல் அல்லாமல் மிக ஆழ்ந்த கவிதை அனுபவமாக நான் உணர்ந்த வரி தான் " தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல" என்ற வரி.."தி போஸ்ட்மன்" என்ற இத்தாலிய படத்தில் பாப்லோ நெருடா எழுதிய "நடந்து திரிதல்"(walking around) என்ற கவிதையில் வரும் "முடி வெட்டி விடுபவனின் கடை வாசம் என்னை சத்தமிட்டு அழ செய்கின்றன"(The smell of barber shops makes me sob out loud)என்கின்ற வரியை பற்றி பாப்லோ நெருடாவிடமே அந்த கதையின் நாயகன் அதை புரியுமாறு சொல்ல கேட்பான்.அதற்க்கு நெருடா கவிதையை வார்த்தைகளில் விளக்கும் போது அது தான் எழுதிய பொருளில் இருந்து விலகி சென்று விடுவதாகவும்,அதை விட கவிதையை புரிந்து கொள்ள உணர்வுகளின் அனுபவமே உதவும் என்னும் பொருள் பட சொல்வதாய் ஒரு வசனம் வரும்.எனக்கு மிக பிடித்தமான வசனங்களில் ஒன்று.அந்த வசனம் வாலியின் " தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல" என்ற வரிகளுக்கும் முழுதாய் பொருந்தும்.

இப்பாடலை நான் முதல் முறை கேட்ட பொழுது இப்பாடலின் உன்னதத்தை நான் முழுதாக உணரவில்லை..வெகு நாட்களுக்கு பிறகு இந்த பாடலை நான் திரும்பவும் கவனித்து கேட்ட பொழுது நான் அடைந்த இன்பம் ஒரு போதை..இந்த பாடலை கேட்கும் பொழுதெல்லாம் இசை ஒரு அடர் திரவ பொருளாக வழிந்து,குலைந்து ஓடுவதான உணர்வே எனக்கு ஏற்படும்..காதலை அடைந்த இருவரின் அக எழுச்சியை பற்றியதான இந்த பாடலை இளையராஜாவும்,வாலியும் ஒரு உன்னத காதல் இசை பாடலாக மாற்றி இருப்பார்கள்..." ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது,நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலுக்குது" என்ற வரிகளும் கூட எனக்கு உன்னதமான கவிதை அனுபவத்தை தந்த வரிகள் தான்.எனினும் அதற்கு இளையராஜாவின் இசையும்,அவரின் குரலும் துணை புரிந்திருக்கும்.அது போல் அல்லாமல் " தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல" என்ற வரி இசையின் குறைந்த பட்ச துணையை கொண்டே மிக ஆழமான மன அதிர்வை எனக்கு தந்தன...

ஒவ்வொரு முறை இந்த பாடலை கேட்கும் போதும் நான் நேசித்த பெண்களின் அழகு,பெயர்.கூந்தல்,வாசம்,நினைவு எதுவுமற்று,நான் அவர்களை நேசித்த பொழுது என்னுள் உணர்ந்த பரிசுத்தமான அன்பு மட்டுமே இசை வடிவமாக ஒலிப்பதை உணர்வேன்....

-- ஜெயசீலன்

இன்னும் இருக்கிறது என்னிடம்..

இன்னும் இருக்கிறது என்னிடம்
உனக்கென தருவதற்கு..

சிரிக்கும் கரடி பொம்மை,
சிவப்பு உடை,
கருப்பு கொடை,
வெள்ளை காலனி,
மூன்று இதழ் பூ,
ஈரமில்லா முத்தம்...

இவை யாவும் தந்த பின்னும்
இன்னும் இருக்கிறது என்னிடம்
உனக்கென தருவதற்கு ...

கிரகனத்து வைர மோதிரம்,
வான வில்லின் பாதி வளையல்,
நட்சத்திரங்களின் பூ மாலை,
இரு பிறை கம்மல்,
தேவதைகளின் சிறகுகள்,

இவை யாவும் தந்த பின்னும்
இன்னமும் இருக்கிறது என்னிடம்
உன்னிடம் தருவதற்கு...

-- வெங்கடேஷ் பாபு

4/30/10

தோழியின் கணவனுக்கு சில குறிப்புக்கள்

கன்னி மரியாளின்
பாதம் தொடும்
பாவனையோடு அவள்
புடவைக்கு மடிப்பெடுக்க முழங்காலிடு.

சரியாகதாணிருக்கும்...
இல்லையென்றாலும்,சரியென்று சொல்
"உப்பு சரியா?" என்று
அன்பை பரிமாறும் அவள் கேள்விக்கு..

சிரித்திறுத்தல் அவள் தாய் மொழி.
தார் பூச மாட்டாள்
எனினும், கண்ணீரை திணிக்காதே..

பௌர்ணமி கடற்கரைகள்
அவள் விருப்பம்.
கை சேர்த்து நட.

எப்போதுமிருக்கும் சொல்ல
அவளிடம் கதைகள்.
சொல்லி சோறூட்ட சொல்.

அவள் தாய்மையின்
உன்னதத்தில்
நீ நம் ஆண்மையின்
ஆயிரமாயிரம் ஆண்டுகளின்
அபத்தங்களை பிழை திருத்து.

அவள் உலகம் சிறியது.
கிட்டதட்ட பால் வீதி பெரிதிருக்கும்.
அதற்குள் அவளை அவளாக சுழலவிடு.

-- ஜெயசீலன்

4/21/10

பேசும் நீ................

ரயிலடி ஓசைக்கு
பழகிய தண்டவாளம் போல்
உன் பேச்சுக்கு பழகி போனேன்...
உன் பேச்சின் சாளரத்தில் நீள்கிறேன்,
அதன் இடைவெளியில் குறைகிறேன்...
தீரும் போன்றதொரு
புள்ளியில் தீராமல்
நீள்கிறாய்...
முடிந்தது போன்றதொரு
தருவாயில் புது வாயில்
திறக்கிறாய்...
நடந்ததை சொல்லுகிறாய்
நடந்த,நடக்கும்,நடக்க போகும்
ஏதுமில்லா பெருவெளியில் எனை நிறுத்தி ..
முடிவற்ற ஒன்றுண்டு
அதன் வலதில் பேசும் நீ..
அதன் இடதில கேட்கும் நான்....

--ஜெயசீலன்

4/19/10

ஆயிரம் பக்க நாவல் நீ

ஆயிரம் பக்க நாவல் நீ.
உன் அழகு அதன் முன்னுரை.

திருமேனியின் நாற்றம்,
புது புத்தக வாசம்.

உந்தன் பரிபாஷை,
கதையின் மொழி.

இமைக்கும் பொழுது,
அசையும் பக்கங்கள்.

பாத சுவடு,
எழுது நடை.

உடலின் வளைவுகளில்,
கதையின் திருப்பம்.

நேற்றிபொட்டும்,விழிகளும்
இறைந்து கிடக்கும் "க்" க(அ)னா.

நீ அழுகையில்,
கதையில் குழந்தை பசியாயிருக்கும்.
சிரிக்கையில்,
கதையில் பெய்யும் மழை.

பறக்கும் கூந்தல்,
நான் லயித்த வரிகள்.

உனை புரிதலின் சிக்கல்,
நாவலின் முடிச்சு.

ஆயிரம் பக்க நாவல் நீ.
உனை திறக்காமல் அனுதினமும்
வாசிப்பவன் நான்.

ஆயிரம் பக்க நாவல் நீ.
வாசிக்க துடிக்கும்
வேற்று மொழி வாசகன் நான்.

ஆயிரம் பக்க நாவல் நீ.
உனை மட்டுமே கொண்ட
காதலின் நூலகம் நான்.

ஆயிரம் பக்க நாவல் நீ.
தொலை தூர பயணத்திற்கு
ஒரு காலி புத்தக பையுடன் ஆயத்தமாபவன் நான்.

-- ஜெயசீலன்

4/14/10

கவிஞர்களின் புகைப்படங்கள்

ஏனோ கவிஞர்களின் புகைப்படங்களை
நான் ரசிப்பது இல்லை.

ஒளி குறைவான
அறைக்குள் எதையோ
எழுதி கொண்டிருக்கிறார்கள்...

அழகிய அட்டையுடைய புத்தகத்தை
வாசித்து காட்டுகிறார்கள்...

ஆபத்துகள் நிரம்பிய
ஏதோ ஒரு தேசிய நெடுஞ்சாலையில்
பின்வருவது தெரியாமல் நடந்து போகிறார்கள்...

அழகிய ஓவியம் முன்
நின்று அதை அழகற்றதாக்குகிறார்கள்...

கட்டுமானங்களை தகர்தெறிவதாய்
சொல்ல படுபவர்கள் பெரும்பாலும்
புகை பிடித்து கொண்டிருக்கிறார்கள்...

அல்லது,
முகத்திற்கு வெகு நெருக்கத்தில்
எடுக்கப்பட்ட புகைபடத்தில்
எதையோ வெறித்து பார்கிறார்கள்...

கவிஞர்களின் புகைப்படங்களை
நான் ரசிப்பது இல்லை.

அவர்கள்,
கவிதைகளை போலவே
புகைப்படங்களிலும் தங்கள்
அகம் குறித்தான ஒன்றை சொல்ல விரும்பி
தோற்று போகிறார்கள்....

--ஜெயசீலன்.ப

தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்

கவிதை தொகுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட
கவிதைகள்,

காதலுடனான மொழிப்போர்,
நேசிச்கப்படுவதற்கான பேராசைகள்,
அந்தரங்கத்தின் அம்மணம்,
தனிமையின் ராக் இசை,
பிரிவின் குறுக்கு வெட்டு தோற்றம்,
புரிந்து கொள்ள படாததின் கலகம்,
நெற்றிகன்னுக்கு கரி பூசும் நக்கீர சாம்பல்,
கவிதை மனதின் கசடு,

சாகபோகும் பணக்கார கிழவனின்
பதின் வயது தத்து பிள்ளை.

கவிதை தொகுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படாத
கவிதைகள்,

புது நாத்திகனின் மறுக்கப்பட்ட பழைய தெய்வங்கள்,
போதும் என்று சொன்ன காதலிக்கான முத்தம்,
குழந்தை மீதம் வைத்த உணவு,
கேலிகளை தவிர்க்கும் நாகரிகம்,
எல்லை கோடுகள் போட்ட மனிதனின் கோமாளித்தனம்,
மன குரங்கு விட்டு தாவிவிட்ட ஒரு கிளை,
பிடித்து,பிடிக்காமல் போனவர்கள் மீதான வன்முறை,

சாகபோகும் பணக்கார கிழவனின்
செத்து போன
பதின் வயது தத்து பிள்ளை.

-- ஜெயசீலன்.ப