6/6/11

முடி

கருமையாய்,
செம்பழுப்பாய்,
நீண்டு சுருண்ட,
பாதி உடைந்த என
பெண்கள் வந்து போகாதா இடங்களிலும்
பெண்களின் முடி கிடக்கிறது...

பொதுவில் அதை கண்டடையும்
எல்லா ஆண்களும்
ஒரு நொடி அந்த முடியை
கண்ணிலோ கையிலோ ஏந்தி
மௌனமாகிறார்கள்..

பின் ஒரு வெள்ளை புறாவை
காற்றில் பறக்கவிடும்
மனநிறைவுடன்
அந்த முடியை காற்றில் மிதக்க விடுகிறார்கள்...

சிகரெட் புகைபோல் காற்றில் ஆடி
மெல்ல மறைந்து போகும்
அம்முடி
திசைகள் மறந்த தேசாந்திரி என
எங்கோ பயணம் போகிறது..
-- ஜெயசீலன்

5/5/11

அந்த ஓவியத்தில் யாராலும் கவனிக்கப்படாத ஒரு கோடு இருந்தது...

நூற்றாண்டுகள் தாண்டி
பலகோடி கண்களை கடந்த பின்பும்
அந்த ஓவியத்தில் யாராலும்
கவனிக்கப்படாத ஒரு கோடு இருந்தது...

கவனிக்கப்படாத அந்த கோடை தவிர்த்தே
அந்த ஓவியம் குறித்த மதிப்பீடுகள் உருவாயின..

அந்த ஓவியம் குறித்து
ஒரு நாவலும், திரைப்படமும்
தயாராகி கொண்டு இருந்தது..

கடைசியாய் அந்த ஓவியம்
ஏலம்விடப்பட்ட போதும் கூட
அந்த கோடு கணக்கில் கொள்ளப்படவில்லை..

இது போன்று
கணக்கில் கொள்ளப்படாத கோடுகளே
விபச்சாரியின் மீது வீச
கற்கள் தருகிறது...

இது போன்று
கணக்கில் கொள்ளப்படாத கோடுகளே
புணர்ச்சியின் முடிவில்
ஒரு பெண்ணுடலை கொன்று போடுகிறது..

இது போன்று
கணக்கில் கொள்ளப்படாத கோடுகளே
காதல் முற்றாய் மறுக்கபடுகையில்
தற்கொலைக்கு தூண்டுகிறது..

இது போன்று
கணக்கில் கொள்ளப்படாத கோடுகளே
பெருநகரங்களுக்கு உள்ளே
சேரிகள் பெருக காரணமாகிறது..

இது போன்று
கணக்கில் கொள்ளப்படாத கோடுகளே
ஒருவனுக்காக/ஒருத்திக்காக ஒரு தேசத்தின் மேல்
போர் தொடுக்கிறது..

இது போன்று
கணக்கில் கொள்ளப்படாத கோடுகளே
எவ்வித குற்றஉணர்ச்சியுமின்றி
ஒரு விடுதலைப்போர் குறித்த
தீர்ப்பை எழுதுகிறது..

இது போன்று
கணக்கில் கொள்ளப்படாத கோடுகளே
ஒருவனை சாத்தான் எனவும்
மற்றொருவனை மகாத்மா எனவும் வரலாற்றில் பதிக்கிறது..

சோகம் ததும்பும்
அந்த அழகிய பெண்ணின் ஓவிய முகத்தை விடவும்
காலம் தீரும் வரையிலும்
கண்டு கொள்ளபடாமலே போக போகும்
அந்த ஓவியத்தில் உள்ள
கோடு சோகம் நிறைந்தது..