8/30/13

அவள் கூந்தலின் பாடல்கள் 14

ஒவ்வொரு இரவும் 
உன் கூந்தலை வாசித்தபடி தூங்கிபோகிறேன்.
சலிப்பதுமில்லை ...
முடிவதுமில்லை...

6/8/13

இனியாவது குண்டிகளில் சாதி முளைத்த சிம்பன்சிகள் பிரிக்காதிருக்கட்டும்

மனமொத்த இருவர் மணந்து கொள்ள
குண்டிகளில் சாதி முளைத்த
தமிழக சாதி வெறி சிம்பன்சிகளுக்கு
இருப்பு கொள்ளவில்லை
நெருப்பு வைக்கும் வரை...


வெந்து தணிந்தது நாடு
பின்னணியில்
ஆயிரம் ஆண்டுகள் பழைய சாதிய சாக்கடையில்
கண்கள் சிவக்க மொண்டு குடித்து
போதை ஏறி சிம்பன்சி சாத்தான்கள் 

வேதமும் பேதமும் ஓத.

செம்புல பெயல் நீர் போல 

கலந்த அன்புடை நெஞ்சங்களுக்கு
ஒத்தடம் கொடுத்திட வேண்டிய
அன்பை மறுத்து
அந்த நெஞ்சகளை பொரிப்பதா அவிப்பதா
என நரமாமிச ருசியர்கள் கூடி பேசி
தீய எண்ணங்களோடு கூடி புணர்ந்து
சிதைத்தே விட்டார்கள்
கடற்கரையில் இரு குழந்தைகள்
நடந்து போன கால்தடத்தை...


இனியாவது கடவுள் இணைத்ததை
குண்டிகளில் சாதி முளைத்த
தமிழக சாதி வெறி சிம்பன்சிகள் பிரிக்காதிருக்கட்டும்
முயன்றாலும் 
கடவுள் இணைத்தவர்கள்  பிரியாதிருக்கட்டும் ..3/30/13

அவள் கூந்தலின் பாடல்கள் - 13

முன்பொரு வருடம் 
ஒரு நாளின் மதிய வேளையில் 
என் தாய் இட்ட அன்னத்தில் 
சுருண்டு கிடந்த அந்த முடியை 
இன்று அசைய கண்டேன் உன் காதோரத்தில். 
                                                                                                    - ஜெயசீலன்.

3/25/13

அவள் கூந்தலின் பாடல்கள் - 12

உன் கூந்தலில் மிதக்கும்
தூசை குறித்து உன்னிடம் சொல்கிறேன்...
இடமும் வலதுமாய் 
உன் முகத்தை அசைகிறாய்...
இலையுதிர்கால பழுப்பு இலையென அந்த தூசி 
உன் பாதம் நோக்கி விழ 
வசந்த காலம் வருகிறதா என்று 
முன்னும் பின்னும், இடமும் வலதுமாய் 
நான் தேட தொடங்குகிறேன். - ஜெயசீலன்

3/18/13

பன்னி மேய்பவனை "நல்ல ஆயன்" என்று சொல்லும் மடையன்கள்(1)

பன்னி மேய்பவனை "நல்ல ஆயன்" என்று சொல்லும் மடையன்கள்(1)


 

ஒரு படைப்பு எப்படி நிகழ்கிறது? ஒரு படைப்பாளி தனது வாழ்வில் நிகழ்ந்த,நினைத்த, பார்த்த, மறைத்த விசயங்களை பகிர நினைக்கும் போதும் அல்லது தன் வாழ்வில் இது நிகழ்ந்து இருக்க கூடாதா, நினைத்திருக்க கூடாதா, பார்த்திருக்க கூடாதா, மறைத்திருக்க கூடாதா என்று ஏங்கும் போதும் ஒரு படைப்புக்கான உத்வேகம் கிடைக்கிறது. இதில் பெரும்பான்மையான படைப்பாளிகள் குறிப்பாக திரைப்பட இயக்குனர்கள் அல்லது எழுத்தாளர்கள் இரண்டாம் முறையையே தேர்ந்து எடுப்பார்கள். ஏனென்றால் திரைபடத்தின் மிக பெரும் ஆச்சர்யமே நிகழ மறுத்த/நிகழாத ஒன்றை திரையில் நிகழ்த்தி காட்டுவதுதான்.இங்கு நாம் பேசும் திரைப்படம் என்பது கலை அல்லது இயல்பான அல்லது தீவிரமான திரைப்படங்களை பற்றி. இது போன்ற படங்களை கையாள்வதற்கும் எடுபதற்க்கும் ஒரு அரசியல், சமூக பார்வை தேவை. இது இரண்டும் இல்லாமல் எடுத்தால் படம் எப்படி இருக்கும் என்பதற்கு சமிபத்திய உதாரணம் ஆஸ்"கார்" நாயகன் கமலின் "விஸ்வரூபம்". இதன் அடிப்படையில் தொடர்ந்து அரசியல், சமூக பார்வை அற்று தியட்டரில் வெங்காயம் உரித்து எல்லோரையும் அழ வைத்து வீட்டுக்கு அனுப்பும் பாலாவை நான் எப்படி புரிந்து கொண்டு உள்ளேன் என்று பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் ...

 

மனோதத்துவத்தில் நேர்மறை வலியுறுத்தல்/வலுவூட்டல்"Positive reinforcement" என்று ஒரு பதம் ஒன்று. விலங்கோ மனிதரோ எந்த செய்கைக்கு தொடர்ந்து நேர்மறை விமர்சனங்கள்/பாராட்டுகள் /பரிசுகள்/நல் விளைவுகள் ஏற்படுகிறதோ அந்த செய்கையை செய்ய அவைகளின்/அவர்களின் மூளையால் தூண்டபடுவர்கள் என்பதுதான் அந்த பதத்தின் பின் உள்ள பொருள். இதன் அடிப்படையில் எவரை பாராட்டும் போதும் நாம் எதற்காக அவரை பாராட்டுகிறோம், அவரின் எந்த செய்கை/செயல் நமக்கு பிடித்தது, எதனால் பிடித்தது என்று அவருக்கு புரியுமாறு சொல்லவேண்டியது அவசியம். அப்படி சொன்னால்தான் அவர்கள் அந்தசெயலின் விளைவான நேர்மறை வலியுறுத்தலின்பால் ஈர்க்கப்பட்டு அந்தசெயலை தொடர்ந்து செய்ய முயல்வார்கள். நாம் அவர்களுக்கு புரியாதவன்னம் சொல்லி விட்டால் என்ன நிகழும் என்பதற்கு தமிழ் சினிமாவில் "வாய் இல்லை என்றால் நாய் கூட உங்கள மதிக்காது" என்று சொல்ல தகுந்த வகையில் ஊரை ஏமாற்றி கொண்டு இருக்கும் தமிழ் சினிமா இயக்குனர்கள் சாட்சி.


 

கமலஹாசன் தொடக்க காலத்தில் மாறுவேட கோமாளித்தனங்களில் ஈடுபட்ட போது கமலை போன்ற ஒரு நடிகன் இனிமேல் யானைகளை போல் 21 மாதத்தில் பிறந்து வந்தால் தான் உண்டு என்று சொல்ல போக அது இன்னும் 100 வருடம் ஆனாலும் மறக்க முடியாத "தசாவதாரம்" என்னும் கோமாளித்தனத்தில் வந்து விட்டது. இது தவறான நேர்மறை வலியுறுத்தலால் நிகழ்ந்த அவலம். மொக்கை படங்களை சீரியஸ்சாக எடுத்து கொண்டிருந்த thank you jesus பிரபு சாலமன் "மைனா" எடுத்த போது கோபமும், கோபத்தில் எடுக்கும் முடிவுகளும் இட்டு செல்லும் மோசமான விளைவுகளை தெரிந்தோ தெரியாமலோ நல்ல கதை ஆக்க, அது வெற்றியும் அடைய, விமர்சனங்களில் மிக கடுமையாக உழைத்து அவர் காடுகளிலும் மலைகளிலும் படமாக்கி உள்ளார் என்று சொல்ல போக, பிரபு சாலமன் "மிக கடுமையாக உழைத்து அவர் காடுகளிலும் மலைகளிலும் படமாக்கி உள்ளார்" என்ற ஒரு விமர்சனத்தை மட்டுமே தனது படைப்புக்கான நேர்மறை வலியுறுத்தல் என்று அவர் எடுத்து கொண்டதன் விளைவுதான் அவரது அடுத்த படத்தில் கதை கருவையும், கதையையும் இரண்டாம் பட்சமாக்கிவிட்டு காடுகளையும், மலைகளையும், அருவிகளையும், யானை ஒன்னுக்கு போவதையும் பார்த்து பார்த்து அவர் எடுத்த "கும்கி". இது நேர்மறை வலியுறுத்தல் தவறாக புரிந்து கொள்ள படும்போதும் அல்லது புரியாதவன்னம் சொல்லப்படும் போது நிகழும் அவலம். இப்படி நேர்மறை வலியுறுத்தல் தவறானதாக, புரிந்து கொள்ள முடியாததாக போனதால் நிகழ்ந்த ஒரு முக்கியமான தமிழ் சினிமாவின் சாபம் மற்றும் அவலம் தான் அர்னோல்ட் பாலா.


 

பாலா. இவரை பற்றி விமர்சகர்கள் முக்கியமாக சொல்வது என்ன? அழுத்தமான படங்களை இயக்குபவர் , யாரும் நினைத்து பார்க்காத கதாபாத்திரங்களை தனது படத்தில் உலவ விடுபவர், சமுகத்தில் புறக்கணிக்கபட்ட கடைநிலை மனிதர்களின் வாழ்வை சொல்பவர், வணிக ரீதியாக எந்த சமரசமும் செய்து கொள்ளாத உன்னத கலைஞன். இது எல்லாம் பாலாவிற்கு சேதுவில் தொடங்கி இப்பொழுது வந்து உள்ள "பரதேசி" வரை அவருக்கு கிடைத்துள்ள நேர்மறை வலியுறுத்தல். ஆனால் உண்மையில் பாலா என்ற இயக்குனர் மேல் சொன்ன வரிகளுக்கு தகுதி ஆனவரா என்றால் "கிடையாது" என்பது எனது ஆணிதரமான வாதம்.அவருடைய படங்களின் உள் கருத்துகளை மிக விரிவாக அவை எவ்வளவு பொருக்கிதனத்துடனும் சுத்தமாக அறிவோ பொறுப்புணர்ச்சியோ இல்லாமல் கையாளபட்டுள்ளன என்று ஒரு 100 பக்கம் எழுத ஆசைதான். ஆனால் தமிழ் தட்டச்சு தெரியாமல் கூகுளின் உள்ளீட்டு கருவியின் உதவியுடன் தட்டச்சு செய்வதாலும் நாம் ஊதும் சங்கு யார் காதில் விழ போகிறது என்று நன்றாக தெரிவதாலும் எனக்கு அவருடைய "படைப்பின்" மேல் இருக்கும் முக்கியமான குற்றச்சாட்டுகளை மட்டும் முன் வைக்கிறேன்.


 

நமது தமிழ் சினிமாவில் அழுத்தமான படங்கள் என்று சொல்லப்படும் படங்களின் பொது தன்மை என்ன? ஒன்றே ஒன்றுதான். படம் முடியும் போது பார்வையாளன் அழ வேண்டும். இதுதான் அழுத்தமான சினிமாவிற்கான அடையாளமா என்றால் நிச்சயமாக இல்லை. இதை அளவு கோளாக வைத்து பார்த்தால் "Life is beautiful" போன்ற அதி உன்னத திரை படங்கள் கூட வெறும் நகைச்சுவை படங்கள் என ஆகிவிடும்.அழுத்தமான படம் என்பது பார்வையாளனுக்குள் தீவிரமான கேள்விகளையோ அல்லது தீவிரமான முடிவுகளையோ அல்லது தீவிரமான விவாதத்தையோ அல்லது பெரும் மன நிறைவையோ அளிக்கும். சுருக்கமாக சொன்னால் நீங்கள் பார்த்த அந்த ரெண்டு மணி நேரப்படம் என்பது உங்கள் வாழ்கையின் அறமாக நீங்கள் அதுவரை கொண்டிருந்த நம்பிக்கையில் ஒரு நல்ல சலனத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். பாலாவின் எந்த படமும் என்னை பொறுத்த வரையில் அழுத்தமான படங்கள் கிடையாது. எப்படி ஒரு murder mystery genre படங்களில் திட்டமிட்டு பார்வையாளனை திரைகதை ஆசிரியர் ஏமாற்றி படத்தின் முடிவில் கடலை பொரி வித்து கொண்டிருந்த ஒரு கதாபாத்திரம்தான் கொலையாளி என்று சொல்லி முடியுமோ அதே போல அர்னோல்ட் பாலாவின் எல்லா திரை படங்களும் பார்வையாளனை அழ வைக்க வேண்டும் என்ற ஒரே லட்சிய வெறியோடு நகர்வதை காணலாம். இது ஒரு நிஜ கலைஞனால் ஒரு போதும் செய்யவே முடியாத விரும்பாதா படைப்புக்கு எதிரான துரோகம். இதை விளக்குவதை மிகவும் கடினமானதாக உணர்கிறேன். ஒரு உதாரணம் தருகிறேன் ."முள்ளும் மலரும்" படத்தின் முடிவில் உங்களுக்கு துளிர்க்கும் கண்ணீருக்கும் நீங்கள் "பிதாமகன்" அல்லது "சேது" வின் முடிவில் சிந்திய கண்ணீருக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. முந்தய கண்ணீர்  ஒரு நிஜமான  உன்னத கலைஞன் தன் படைப்புக்கு நேர்மையாக நாம் அதுவரை அதிகம் கவனித்திராத/உணராத/அறியாத நமது ஒரு நுண் உணர்வை தொடும் போது நிகழ்வது. இரண்டாவதாக சிந்திய கண்ணீர் என்பது ஒரு தற்குறி "நல்ல படம் என்பது படம் முடிந்து போபவர்கள் மூக்கை சிந்தி கொண்டு போக வேண்டும்"  என்ற நம்பிக்கையில் ஒரு தேர்ந்த தொடர் கொலைகாரன் கொலையை திட்டமிடுவதை போல் திட்டமிட்டு பார்வையாளனை அழ வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கலையின் எந்த சாத்தியங்களையும் பரிசீலிக்காமல்,ஏற்று கொள்ளாமல் கடைசி இருபது நிமிடங்களை கடத்தி இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அவருடைய ஏதாவது ஒரு படம் முடிந்து வெளியே வந்தவன் தான் கொண்ட நம்பிக்கையில்,அறத்தில் எதாவது ஒரு நல்ல மாற்றத்தை,சலனத்தை,மனிதம் குறித்த நம்பிக்கையை அடைந்து இருப்பான் என்று சொல்ல முடியுமா??? மற்றவர்களுக்காக நான் பேச முடியாது. ஆனால் அவருடைய ஒரு படத்தில் கூட எனக்கு அது நிகழ்ந்ததில்லை. மாறாக பெரும் அயர்ச்சியையும் வெறுப்பையும் தான் விதைத்தது. இது அந்த படைப்பை உருவாக்கியவனின் பெரும் தோல்வி ( அவருடைய படங்களை படைப்பு என்று சொல்வது எனக்கு சங்கடமாக உள்ளது..ஆனால் என்ன செய்வது.நம் ஊரில் புண்ணாக்கு விய்ப்பவன், குண்டூசி விய்ப்பவன் எல்லாம் கலைஞரகள் , படைபாளிகள்..). 


யாரும் நினைத்து பார்க்காத கதாபாத்திரங்களை தனது படத்தில் உலவ விடுபவர், சமுகத்தில் புறக்கணிக்கபட்ட கடைநிலை மனிதர்களின் வாழ்வை சொல்பவர் என்று  "பாராட்டப்படும்"  அர்னோல்ட் பாலாவை பாராட்டி பேசுபவர்கள் பல விசயங்களை தெரிந்தோ தெரியாமலோ கவனிக்க மறுகின்றனர்.

 

அர்னோல்ட் பாலாவின் "சேது" படம் வரும் வரையில் நான் பார்த்த எந்த திரைப்படங்களிலும் கதையின் நாயகன் நாயகியை மிரட்டும் தொனியில் காதலித்து நான்  பார்த்ததில்லை. "சேது"வுக்கு முன் வந்த எல்லா படங்களிலும் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் ஊடல் பின் அது காதலாதல் அல்லது கதாநாயகனை கதாநாயகி துரத்தி துரத்தி காதலிக்க ஒரு கட்டத்தில் கதாநாயகனும் இறுக்கம் தளர்ந்து காதலிக்க தொடங்குதல் அல்லது கதாநாயகன் கதாநாயகியை வெறிதனமாக காதலித்தும் அவள் அதை ஏற்று/ புரிந்து  கொள்ளாமல் போக கதாநாயகன் தண்ணியை போட்டு விட்டு தாடி வளர்த்து கொண்டு இரவில் தூங்கி கொண்டிருக்கும் நாய்களை பாட்டு பாடி தொந்தரவு செய்தல் என்பதை சுற்றியே இருந்தது(சுத்தமாக பெண்களை மதிக்காத, பெண் பார்க்கும் படலம் என்னும் அயோக்கியத்தனம் நடக்கும் நம் சமுகத்தில் வெளிவந்த காதலை பற்றிய படங்களில் பெண்ணின் விருப்பம் பிரதானமாக பார்க்க பட்டத்தின் நல்ல முகைநரனை இங்கு கவனிக்கலாம்).இப்படி இருந்த சூழலில்தான் "சேது" வருகிறது. அர்னோல்ட் பாலாவின் பள்ளி கல்லூரி பருவம் எப்படி இருந்தது என்று எனக்கு தெரியாது. ஆனால் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று அவர் ஆசை பட்டார் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒன்றுக்கும் லாயக்கி இல்லாமல் ஊரை மேய்ந்து கொண்டிருக்கும் ஒருவன் அவனைவிட அழகிய பெண்ணை( கல்லூரி போகும் பெண்ணாய் இருத்தல் நலம்) கன்னத்தில் அப்பி, முடியை பிய்த்து ஆட்டி, எட்டி உதைத்து, குட்டிகரணம் போட சொல்லி லவ் செய்கிறான். இவனது காதலை அந்த பெண்ணும் நாளடைவில் புரிந்து கொண்டு காதலிக்க தொடங்குகிறாள். அல்லது ஐரோப்பியர்களை போல் சிவப்பு கலர் அல்லது மஞ்சள் நிறத்தில் முடியுள்ள,மனிதர்க்கும் தவளைக்கும் பிறந்த ஒரு வினோதமான ஜந்துவை போல இருக்கும் , ஒருவனை ஒரு பெண் "ஐயோ பாவம்" என்று சில்க் ஸ்மிதா போல தனக்குள் சொல்லி கொண்டு காதலிக்க தொடங்குவது. அர்னோல்ட் பாலாவின் எல்லா படத்தில் வந்த காதல் காட்சிகளும் இதை சுற்றியே அமைந்திருப்பதை காணலாம். இது அர்னோல்ட் பாலாவின் வாழ்கையில் நடந்தது கிடையாது. அவர் காண்பிப்பதை போல் பொருக்கி தனம் செய்யும் எவனையும் அவர் காண்பிப்பதை போன்ற பெண்கள் விரும்ப கிட்டத்தட்ட வாய்ப்பே இல்லை என்றே சொல்லலாம் அல்லது அவர்கள் விரும்பவே கூடாது என்று சொல்லலாம் . ஆனால் அர்னோல்ட் பாலா தன் வாழ்கையில் நிகழ மறுத்த அதை( அதாவது ஒரு பொறுக்கியின் காதலை ஒரு பெண்  ஏற்றுக்கொண்டு  அவனை காதலிக்க தொடங்குவது) தனது திரைப்படங்களில் நிகழ்த்தி பார்த்து கொண்டார். இது ஒரு மிக மோசமான விளைவை தமிழ் சினிமாவிலும் தமிழ் சூழலிலும் ஏற்படுத்தியது. "சேது" வரும் வரையில் பெண்களை தொடர்ந்து சென்று காதலிக்குமாறு தொந்தரவு செய்பவன் கெட்டவனாகவும் அவனை தூக்கி போட்டு மிதிப்பவன் நாயகனாகவும் இருந்த template மாற்ற பட்டு ஒரு பெண்ணை தொடர்ந்து சென்று காதலிக்குமாறு தொந்தரவு செய்பவன் நாயகனாகவும் ("புரிஞ்சிக்கோ..மனசு வலிக்குது") அதை தட்டி கேட்பவன் வில்லனாகவும் ஆனது( இந்த template சென்னையை நியூயார்க் மாதிரி காட்டும் அதாவது ஹாலிவுட் பாணியில் படம் எடுக்கும் கவ்தம் ஓனான் சீ மேனன் இயக்கிய "விண்ணை தாண்டி வருவாயா" வில் கூட பார்க்கலாம்). ஏன் ஒரு பெண்ணை தொடர்ந்து சென்று காதலிக்குமாறு மிரட்டுவதை, சீண்டுவதை காண்பித்தால் என்ன தவறு என்று கேட்டால் மாபெரும் தவறு என்பதுதான் பதில்.பெண்களை முலைகள் முளைத்த யோனிகளாய் பார்க்கும் சமுகத்தில் இது போன்ற கருத்தாக்கங்கள் மிக மிக மிக தவறானவை. கே.ஸ்.ரவிக்குமார், பேரரசு போன்றவர்கள் இதை செய்தால் சின்ன பசங்க என்று ஒதுங்கி போகலாம். "பாஸ் அவரு ஒரு கலைஞன் பாஸ்..ஒன்லி உலக சினிமா மட்டும்தான் எடுபாப்ள" என்று சொல்லி கொண்டு இருக்கும் போது அர்னோல்ட் பாலா இது போன்ற சில்பான்ஸ் கில்பான்ஸ் வேலைகளை பண்ணுவதுதான் கோபமூட்டுகிறது. ஏனென்றால் சமிபத்தில் வினோதினியின் மீது ஆசிட் அடித்தவனின் மன நிலையும் இது போன்ற கருத்துகளை  பரப்புவர்களின் மன நிலையும் ஒன்றுதான். அதாவது ஒரு பெண் வேண்டாம் என்று சொன்னால் கூட "அவள் புரிந்து கொள்ளாமல் சொல்கிறாள் அவளுக்கு புரிய வைத்து அவள் வாழ்வில் ஒளியேற்றுவது நமது கடமை" என்று உலகின் எந்த நாட்டிலும் ஆண்களுக்கு தோன்றாத கருத்து இவர்களுக்கு தோன்றுவதும் அதை காதலென்று சொல்வதும் .

 

 

அர்னோல்ட் பாலாவின் திரைப்படங்களில் இழையோடும் மேல் சாதி ஹிந்துத்துவ நுண் அரசியல் மிக நுட்பமானது. "மதுரை வீரன்" திரைபடத்தில் எப்படி நிஜத்தில் அருந்ததியர் சமூகத்தில் பிறந்த  மதுரை வீரன் ,படத்தில் மேல்சாதியில் பிறந்த ஆனால் அருந்ததிய சமூகத்தில் வளர்ந்தவராக காடப்பட்டோரோ அதே போல்தான்  ஐரோப்பியரை ஒத்த நிறத்தில் முடிகொண்ட(ஒருவேளை ஐயர்லாந்தில்  இருந்து  தேனி பக்கம் சுற்றுலா வந்த ஒருவர்தான்  சித்தனின் அப்பாவா என்று அர்னோல்ட் பாலாதான் விளக்க வேண்டும் )  சித்தன் இடுகாட்டை தாண்டி செல்லும் "யாரோ" ஒரு தாயிற்கு பிறந்து வெட்டியானாக மாறுகிறான். அங்கு இருக்கும் பெரியவரும் "தம்பி நீ சிவனின் குழந்தை" என்கிறார் . ஏன் சித்தன் ஒரு வெட்டியான் சாதியில் தான் பிறந்தவர் என்று நேரடியாக சொன்னால் அவருடைய உலகத்தரமான பிதாமகன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு தேர்ந்தெடுக்கபடாது என்ற நெருக்கடியா ? அல்லது சித்தனின் சாதி அடையாளம் தெளிவாக புரியுமாறு வைத்தால் அவன் சிவன் குழந்தை என்று சொல்லும் வசனம் வீழ்ச்சி அடைந்து விடுமா?  இந்த மன்னர்கள் பண்ணையார்கள் ஜமின்தார்களை போன்ற திருட்டு பயல்களை போல் ஜனநாயக,சமத்துவத்திற்கு எதிரானவர்கள் யாரும் இருந்து இருக்க முடியாது. ஏதோ அப்போது இருந்த சமூக சூழலில் இந்த மண்டயன்கள் இருந்து விட்டு போனார்கள் என்று விட்டு தொலைக்கலாம். ஆனால் அர்னோல்ட் பாலா "நந்தா" படத்தில் சுதந்திர இந்தியாவில் மன்னர்களும் ஜமின்தார்களும் நாட்டின் நலன் கருதி தாங்களே முன்வந்து தங்கள் நிலம் சொத்துகளை எல்லாம் நாட்டிற்க்கு அர்பணித்த தியாகிகள்  போலவும், கல்வி சுடர் ஏற்றும் கல்வி தந்தைகள்  போலவும், தமிழ் இன  உணர்வாளர்களாகவும், அகதியாய் வரும் ஈழ தமிழர்களை  எல்லை தாண்டி படகில் போய் மீட்பவர்களாகவும்(பார்ரா) காண்பிப்பதில் உள்ள அயோக்கியத்தனம் மன்னிக்க முடியாதது. ராஜ்கிரண் கதாபாத்திரம் பேசும் வசனங்களும்("நாச்சியா.....") அந்த கதாபாத்திரத்திற்கு  அர்னோல்ட் பாலா முதலில் "நடிகர் திலகம்"  கணேசனை அணுகியதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  -- தொடரும் 


 

பி.கு :

பன்னி மேய்பவனை "நல்ல ஆயன்" என்று சொல்லகூடாதா என்று கேட்பவர்களுக்கு....பன்னி மேய்ப்பதில் எந்த தவறோ இழிவோ கிடையாது...நான் சொல்ல வருவது ஆடுகளை மேய்ச்சல் நிலத்திற்கு அழைத்து சென்று மேய விட்டு நீர் பருகவிட்டு பாதுகாத்து திரும்ப அழைத்து வரும் சிரமம் பன்னி மேய்ப்பதில் இருக்காது...நல்ல குட்டையாக பார்த்து விட்டு விட்டால் பன்றிகளே மற்றவற்றை பார்த்து கொள்ளும்....

 

3/1/13

உன்னை மறப்பதற்கென என்னிடம் உள்ள திட்டங்கள்
மது அருந்தும் போது 
வாந்தி வரும் வரையில் 
எதுவும் பேசாமல் குடித்து விட்டு 
உடனே தூங்கி விடுவது.


புகை பிடிக்கும் போது 
கேன்சரை பற்றி மட்டும் சிந்தித்து கொண்டிருப்பது.


உனது செல்போன் எண்ணை மீண்டும் மீண்டும் 
மூன்றால் பெருக்கி
ஏழால் வகுப்பது.


வழி தவறி கூட 
உனது முக நூல் பக்கம் போகாமல் இருப்பது.


உன் கூந்தலின் நினைவு வரும் பொழுது 
பச்சை நிறத்திலான எதையாவதை
பத்து பதினைந்து நிமிடம் உற்று நோக்குவது.


மூளையில் உனது நினைவுகள் 
படர்ந்துள்ள பகுதிகளை
லேசர் கற்றை கொண்டு பொசுக்குவது.


உனது வாசம் வீசாத 
ஒரு பாலைவனத்திலோ, பனி பொழியும் மலையிலோ
இரவில் நிலவும்,நட்சத்திரங்களும் தெரியாவண்ணம்
பதுங்கு குழி அமைத்து தங்கி விடுவது.


உன்னோடான நாட்கள் புதைந்த 
ஆங்கில காலண்டரை கைவிட்டு
சீனத்து காலண்டரை பின்பற்ற துவங்குவது.


ஒரு கணமும் நீங்காமல் 
என் தாயோடு இருப்பது.


கால எந்திரத்தில் ஏறி 
பின்னோக்கி ஓடி
விந்தனுவாகி பின் புரதமாகி
ஒரு இலையிலோ அல்லது
ஒரு அழகிய கருப்பு முயலின் காதிலோ உறைந்து விடுவது.


எனதிந்த திட்டங்களை 
வரிசையாய் தாளில் எழுதி 
கவிதை என்று சொல்லி 
யாரிடமும் பகிராமல் இருப்பது.


                                             --- ஜெயசீலன்

1/28/13

விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் சுயரூபம்

விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் சுயரூபம்

நான் தெருவில் விளையாடிய கிரிக்கெட் ஆட்டத்தில் யாரோ அடிக்கும் அடியில்  பேட் உடைந்து விடும் பொழுது எல்லோரும் சேர்ந்து புது பேட் வாங்குவது என்று முடிவாகும். காரணம் எல்லோரும் அதில் விளையாடி  இருக்கிறோம், கொஞ்சம் கொஞ்சமாக அது விரிசல் விழுந்து  உடையும் நிலைக்கு வந்ததில் அதை பயன்படுத்திய எல்லோருக்கும் பங்கு உள்ளது என்ற புரிதலே. 90களில் தொடங்கி தமிழ் சினிமாவில் தொடர்ந்து கொஞ்சம் கூட சலிக்காமல் மனசாட்சியோ, அரசியல் அறிவோ, சமூக பொறுப்புணர்ச்சியோ இல்லாமல் இந்திய முஸ்லிம்கள் என்னும் பேட்டை வைத்து சிக்ஸர் அடித்து கொண்டிருந்த தமிழ் சினிமா இன்று பேட் உடைந்த உடன் கடைசியாக அதை வைத்து ஆடி கொண்டிருந்த தமிழ் சினிமாவுக்கு ஆஸ்கார் வாங்கி தருவதற்கென்றே கடவுள் செய்து அனுப்பி உள்ள  "பத்மஸ்ரீ " "உலக நாயகன்" "டாக்டர்"  கமல் ஹாசனை மட்டும் மாட்டி விட்டுவிட்டு எஸ்ஸாகி விட்டது கண்டனத்துக்கு உரியது.

கோமாளிகளின் கூடாரமாய் போய்விட்ட இந்திய தேசத்தில் தனிக்கை துறையும் அதற்க்கு விதிவிலக்கு அல்ல. பல்வேறு தரப்பட்ட மதம், இனம், சாதி, மொழி சார்ந்த மக்கள் வாழும் இந்தியாவில் தனிக்கை துறையின் பங்கு மிக முக்கியமானது என்பதை யாரும் சொல்ல தேவை இல்லை. ஆனால் அந்த மண்டயன்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்தார்களா? அதற்கான உலகளாவிய சினிமா குறித்த அறிவு அவர்களுக்கு இருகிறதா ? அவர்களை நியமிப்பதில் அரசியல் இல்லாமல் இருகிறதா போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை என்பதாகத்தான் இருக்க முடியும். இவர்கள் செய்து வரும் முட்டாள்தனத்தை நாம் தொடர்ந்து பார்த்து கொண்டுதான் இருக்கிறோம் "ஆரண்யகாண்டம் " போன்ற ஒரு படத்திற்கு தமிழக சென்சார் போர்டு தனிக்கை சான்றிதழ் தர மறுத்தது உட்பட . அந்த மண்டயன்களின் சமிபத்திய கோமாளிதனம்தான் விஸ்வரூபம் படத்திற்கு U/A certificate கொடுத்தது. அம்மனகுன்டியா வந்தால் மட்டும்தான் A certificate தர வேண்டும் என்று நினைத்தார்களோ என்னவோ விஸ்வரூபம் படத்திற்கு A certificate தரவில்லை. இஸ்லாமிய பயங்கரவாதம், தீவிரவாதம் , கொலைகள், சர்வதேச அரசியல் இவை எல்லாம் கையாள படும் ஒரு படத்தை adult content என்று அந்த மாங்கா மண்டயன்கள் உணராமல் விட்டது எப்படி என்பது விஸ்வரூபம் படத்தை விட பெரிய சஸ்பென்ஸ் த்ரில்லெர். இப்படி நம்பகத்தன்மை சிறிதும் அற்ற censor board சொல்லி விட்டால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்று எதிர்பார்பதோ கேள்வி கேட்க கூடாது என்று சொல்வதோ சரியாக எனக்கு தோன்றவில்லை. அரசியல் அமைப்பு சட்டத்தை தவிர ஜனநாயகத்தில் அனைத்தையும் கேள்விக்கு உள்ளாக்க மக்களுக்கு குறிப்பாக சிறுபான்மையினருக்கு உரிமை உள்ளது. எனவே censor board சொன்ன பிறகு எதிர்ப்பு தெரிவிப்பது தவறு என்ற வாதம் சரி அல்ல. இந்த பிரச்சனையின் ஊற்றுக்கண் சென்சார் அமைப்பே. இந்த எதிர்ப்பின் தொடக்கம் சென்சார் போர்டின் தொடர்ந்த தோல்வியினால் வந்ததே என்பதை உணர்வது மிக அவசியமானது.
கமலுக்கு கருத்து சுதந்திரம் இல்லையா? இந்தியாவில் கருத்து சொல்ல உரிமை இல்லையா ? என்று கேட்டால் இருக்க வேண்டும் என்பதுதான் பதில்.ஆனால் உண்மையில் இந்தியாவில் கருத்து சுதந்திரம் என்பது "உண்மையானதாக " "பொதுவானதாக " இல்லை என்பதுதான் உண்மை. கருத்து சுதந்திரம் என்பது என்னை பொறுத்த வரையில் ஒரு கருத்து சொல்லபடுவதோடு முடிவது இல்லை. அதை விட முக்கியமாக அந்த கருத்துக்கு எதிர் கருத்து சொல்லும் வாய்ப்பு, உரிமை  திறந்த மனதோடு மற்றவருக்கு அளிக்கப்பட்டதா என்பதுதான். தேவர்மகன் படம் எடுக்க கமலுக்கும், சின்ன கௌண்டெர் எடுக்க உதயகுமாருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது. அதே நேரத்தில் பறையர் மகன் என்றோ அல்லது சின்ன பள்ளர் என்றோ யாரவது அந்த சாதி மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து படம் எடுத்தால் அந்த படம் வெளிவரும் என்று நினைகிறீர்களா ?? அப்படியே வெளிவாந்தால் திரை அரங்கு கிடைக்குமா ? அப்படியே கிடைத்தால் தேவர் மகனை திறந்த மனதோடு சென்று பார்த்த "தமிழர் " பறையர் மகன் படத்தை சென்று பார்பார்களா ?? இந்திய அரசியல் அமைப்பின் தந்தை அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய படம் மம்முட்டிக்கு தேசிய விருது கிடைத்த படம் தமிழகத்தில் வெளியாக 5,6 ஆண்டுகளுக்கு மேலானது என்பதையும் அதை திரையிட பல இயக்கங்கள் போராட வேண்டி இருந்தது என்பதையும் நாம் பார்த்தோம். உண்மையான கருத்து சுதந்திரத்திற்கு உதாரணம் சமிபத்தில் வெளியாகி உள்ள ஹாலிவுட் திரைப்படம் "Django". கருபினத்தவரை அடிமைகளாக நடத்திய காலத்தில் ஒரு கறுப்பின கதாநாயகன் அந்த தீய வெள்ளையர்களை தேடி சென்று மிக கொடூரமாக கொலை செய்வது போன்றபடத்தை ஒரு வெள்ளையின இயக்குனரால் சிந்திக்க, எடுக்க முடிகிறது , முக்கியமான வெள்ளையின நடிகர்களால் நடிக்க முடிகிறது, உலகம் முழுக்க வெளியிட முடிகிறது, வெள்ளையர்கள் அதிகமாக வாழும் அமெரிக்காவில் வசூல் சாதனை செய்ய முடிகிறது, ஆஸ்கார் விருதுக்கு 4,5 பிரிவுகளில் போட்டியிட முடிகிறது. மனசாட்சி உள்ள எல்லாருக்கும் தெரியும் இந்த மாதிரியான சரி சமமான கருத்து சுதந்திரம் இந்தியாவில் உள்ளதா என்று. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக "முஸ்லிம் தீவிரவாதிகள்" என்ற சொற்றொடர் தொடர்ந்து செய்திகளிலும், திரைப்படங்களிலும், விவாதங்களிலும் பயன்படுத்த பட்ட போது சலனமற்று இருந்த இந்தியா ஷிண்டே "ஹிந்து தீவிரவாதம்" என்ற சொல்லை பயன்படுத்திய உடன் எம்பி எம்பி குதிப்பது ஏன் ? இந்த நிலையில் தான் முன்  எப்போதும் இல்லாத அளவிற்கு தலித்துகளும் இஸ்லாமியர்களும் மிகுந்த விழிப்போடும்,அரசியல் அறிவோடும், யாரையும் நம்பாமல் இருக்க வேண்டிய வரலாற்று தேவையை நோக்கி தள்ளபட்டு இருகிறார்கள். அவர்களுக்கு அவர்கள் கருத்தை சொல்வதற்கு சரியான வாய்ப்போ சந்தர்பமோ தராமல் திட்டமிட்டு ஒடுக்கியதின் விளைவாக அவர்கள் பிறர் சொல்லும் கருத்துக்கு எதிரான கலகத்தின் மூலம் தங்கள் கருத்தை சொல்ல முயலுகிறார்கள் என்பதே உண்மை. கருத்து சுதந்திரம் என்ற அடிப்படை உரிமை இந்தியாவில் அனைவருக்கும் குறிப்பாக தலித், சிறுபான்மையினருக்கு கிடைக்கும் வரை இது போன்ற எதிர்பரசியல் நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும், இருக்கும். அது வரையில் "உலக நாயகன்" கமல் போன்றவர்கள் தாங்கள் சூடி உள்ள பட்டத்தில் உள்ள உலகில் பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள், குறிப்பாக சிறுபான்மையினர் இருகிறார்கள் என்று நினைத்து, உணர்ந்து, யோசித்து முஸ்லிம்களே பாராட்டி பிரியாணி போட கூடிய அளவுக்கான அவருடைய மேலான நல்ல கருத்தை ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து படங்களில் சொல்வது நலமாய் அமையும் அவருக்கும் அனைவருக்கும்.
சரி. யாரிந்த உலக நாயகன் ? அவருடைய திரைப்படங்களின் அரசியல் என்ன? அவருடைய திரைப்படங்களில் அரசியல் என்று ஒன்று உள்ளதா ? எனக்கு தெரிந்து "ராஜா பார்வை" படம் வரும் வரையில் அவர் நேத்து ராத்திரி யம்ம்ம்ம்மா தான். ராஜா பார்வை படம் கமலை ஒரு நடிகனை தாண்டிய கலைஞனாக மேட்டுக்குடி பத்திரிக்கைகளால் வடிவம் தரபட்டதாக நான் உணர்கிறேன். நட்சத்திர அந்தஸ்தில் ரஜினியை ஒரு போதும் நெருங்க முடியாது என்று முட்டி மோதி அடிபட்டு ரத்த காயத்தோடு கமல் எடுத்த முடிவுதான் நாயகனில் இருந்து ஒரு கலைஞனாக அறிவு ஜீவியாக தன்னை நிலை நிறுத்தி கொள்ளும் ஆசை. இந்த அறிவுஜீவி பிம்பம் கமலுக்கு தேவை பட்டதில் உள்ள உளவியலை என் பார்வையில் என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. மெத்த படித்த குடும்பத்தில் பிறந்த கமல் தான் பள்ளி படிப்பை தாண்டாமல் போன வருத்தமும் ஏக்கமும் இயல்பாக கொண்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி இருக்கையில் அவரை ஒரு அறிவுஜீவியாக ஊடகம் பிம்பம் தந்த போது அவர் அதில் அடைந்து இருக்க கூடிய மகிழ்ச்சியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் கமல் குறித்தான கலைஞன், அறிவி ஜீவி போன்ற பிம்பங்கள் ஒரு comparative opinion என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். கமலை ரஜினி, விஜயகாந்த் , பிரபு , கார்த்திக் , ராமராஜன் , மோகன் , ராஜ்கிரண் இவர்களோடு நிறுத்தி "பய்யன் ரொம்ப சுட்டியா இருக்கான்டா " என்று சொல்ல ஆரம்பித்தது பின் அந்த ஒப்பீட்டு தத்துவம் மறைந்து இவர் தனி ஆளுமையாகவே ஒரு கலைஞனாக ஒரு அறிவு ஜீவியாக முன்னிறுத்த பட்டார். அதை கமல் எந்த சந்தேகமும் இல்லாமல் "உனக்கு என்னாட ராஜாடா நீ" என்று தனக்கு தானே சொல்லி கொள்ள நம்ப ஆரமபித்ததாகவே நான் நினைக்கிறேன். இப்படி கலைஞன் , அறிவி ஜீவி என்று காக்டெயில் சரக்கை கமல் சப்பி குடித்து கொண்டிருந்த போதுதான் அவர் தலையில் அவரே வைத்து கொண்ட பகுத்தறிவுவாதி பட்டம்.
கடவுளை ஒருவன் மறுத்து விட்டாலே, கடவுளை பற்றி கொஞ்சம் கிண்டல் செய்து விட்டாலே அவர்கள் பகுத்தறிவுவாதிகள் என்று மாங்க மண்டயன்கள் நிரம்பிய இந்தியாவிலும் தமிழகத்திலும் ஒரு கருத்து கட்டமைக்க பட்டு இருக்கிறது. இதை பயன்படுத்திதான்  சத்யராஜ் சிமான் எல்லாம்  பகுத்தறிவுவாதி ஆகிறார்கள். கடவுளை மறுக்க ஒரு 20 பக்கம் இயற்பியலும் விலங்கியலும் படித்தாலே விளங்கி விடும். அதற்க்கு பகுத்தறிவே தேவை இல்லை. கொஞ்சூண்டு தர்க்க அறிவு மட்டும் இருந்தால் போதுமானது. பகுத்தறிவு என்பது புத்தத்தைபோல ஒரு வாழும் முறை. Being a rationalist is a way of life. அதற்க்கு முடிவே இல்லை . இது ஒரு முக்கியமான அடிப்படை கருத்து. இதை அறியாத முட்டாள்கள் கமல் கடவுளை நம்பாதவர் அதனால் அவர் ஒரு பகுத்தறிவுவாதி என்று சொல்ல பரப்ப ஆரம்பித்தார்கள். இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் புத்தத்தை தழுவிய அம்பேத்கரை விட கமல் சிறந்த பகுத்தறிவுவாதி என்று ஆகிவிடும். அது முற்றிலும் தவறு. அப்போ கமல் ஒரு கலைஞனோ, அறிவுஜீவியோ, பகுத்தறிவுவாதியோ இல்லையா என்ற கேள்விக்கு ஒ ஒ ஒ ஒ போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே என்று பாடி கொண்டு கொண்டு தேவர் மகனில் பதில் சொல்லவந்தார் உலக நாயகன்.
தேவர் மகன் வெளியான காலம் தென் தமிழகம் மிக பெரிய சாதி காலவரம் எந்த நேரத்திலும் நிகழும் என்ற very volatile state என்ற நிலையில் இருந்ததாக நாம் அறிகிறோம். இந்த நிலையில்தான் கமல் எழுதிய திரைகதை வசனத்தில் அவரே தயாரித்து நடித்த தேவர் மகன் படம் வெளியானது. மாங்கா மண்டயன்கள் நிரம்பிய சென்சார் போர்டு குறைந்த பட்சம் பெயரை கூட மாற்ற சொல்லாமல் வெளியிட "கருத்து சுதந்திரத்தின்" அடிப்படையில் அனுமதிக்கிறது. இப்பொழுது ஒரு பகுத்தறிவுவாதிக்கு அன்றைய சூழ்நிலையில் தேவர் மகன் படம் கல்வி அறிவு மிக குறைவாக இருந்த இன்றளவும் உள்ள தென் தமிழகத்தில் தவறான விளைவுகளை உண்டாக்கும் என்று தெரியுமா தெரியாதா ? ஒரு பகுத்தறிவுவாதி எப்பொழுதும் ஒடுக்க பட்டோரின் பக்கம்தான் நிற்பான். உதாரணம் பெரியார், அம்பேத்கர், சே குவேர. பகுத்தறிவு கமல் தேவர் மகனில் தேவர் சாதி பக்கம் நின்று சொன்ன மைய கருத்து என்னவென்றால் " வேல் கம்பும் வெட்டருவாலும இருந்த பசங்க மெதுவாகத்தான் வருவாங்க ". அதற்க்கு கமலே ஒரு நல்ல கேள்வியை கேட்டு இருப்பார்." மெதுவான எம்புட்டு மெதுவாய?" என்று . உலகத்தின் ஒப்பற்ற ஈடு இணையற்ற உன்னத  வீரர்களாய் அறியப்படும் சாமுராய்களே இன்று வேல் கம்பும் வெட்டருவாலும் என்பதில் இருந்து மாறி வேறு வேலை  பார்த்துகொண்டு sake குடித்து கொண்டு அமைதியாய் இருக்கையில் கமல் சொல்கிறார் அவர்கள் மெதுவாதான் வருவார்கள் என்று. அவர்கள் மெதுவாதான் வருவார்கள் என்று சொன்ன முட்டாள்தனமான வசனத்திற்கு பதிலான  "எம்புட்டு மெதுவாயா அதுக்குள்ள நான் செத்துருவேன் போல இருக்கே  ?" என்ற நேர்மையான விரக்தியான கேள்விக்கு விதை கொட்ட பழம் என்று பேசி மழுங்கடித்து இருப்பார். கடைசியில் எல்லோரும் போய் படிங்க என்று அறிவொளி இயக்க ஊழியர் போல் கருத்து சொல்லி முடித்திருப்பார். இன்று வரை படம் வன்முறைக்கு எதிரான படம் என்று சங்கடமே இல்லாமல் ஷகீலா படம் கிட்னி பிரச்சனை பற்றிய விழிப்புணர்வு படம் என்று சொல்வதை போல் மனசாட்சியே இல்லாமல் ஊடகங்களும் கமலும் சொல்லி கொண்டு இருகிறார்கள். ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால்  தேவர் மகன் வெளியான பின்பு தங்கள் மீதான ஒடுக்குமுறை புதிய உத்வேகம் பெற்றதாக பாதிக்க பட்ட மக்கள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்து இருகிறார்கள். அப்பறம் ஏன் பகுத்தறிவுவாதி கமல் இப்படி எடுத்தார் என்றால் தசவதாரம் எடுக்க கூடிய கமலின் ஒரு முக்கிய பிரதான அவதாரமான வியாபாரி கமல் பகுத்தறிவுவாதி கமலை பார்த்து "மூடிகிட்டு இரு...இப்படி எடுத்தாதான் நாலு காசு பார்க்க முடியும்" என்று சொல்லி விட்டத்தின் விளைவு தான் கொஞ்சம் கூட சமூக பொறுப்புணர்வு அற்ற தேவர் மகன். தமிழில் காட்சி ஊடகத்தில் தேவர் மகன் அளவிற்கு தலித் மக்களை ஒடுக்குவதற்கும், ஆள்வதற்கும், வழி நடத்துவதற்கும் சட்டத்திற்கு அப்பாற்பட்டு  தங்களுக்கு உரிமை இருப்பாதாக மேல் சாதியினராக அவர்களே நினைத்து கொள்பவர்களுக்கு சொல்லி குடுத்த படம் இன்று வரை இல்லை என்பதுதான் உண்மை. தலித்துக்கள் அரசியல் அறிவு பெரும் போது கமல் என்னும் பெயர் அவர்களால் ஒரு போதும் மன்னிக்கபடாது என்பது  என்னுடைய கருத்து . கமலின் தலித் விரோத அரசியல் கருத்துக்கள் பற்றிய விரிவான கட்டுரைகள் நிறைய இணையத்தில் உள்ளன. எனவே அதை பற்றி அதிகம் பேச விரும்பவில்ல.
கமலின் திரைபடங்களில் குறிப்பாக எழுதி, இயக்கிய திரைப்படங்களில் எப்படி தலித் விரோத அரசியல் கருதுக்கள் தொடர்ந்து பரப்பட்டதோ அதற்க்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் இஸ்லாமிய வெறுப்பு அரசியல் பரப்பபட்டது. ஹேராம் திரைபடத்தில் சாகேத் ராம் ஐயங்கார் விடுமுறையில் தன் வங்காள காதலியை பார்க்க வருகிறார். "சாப்பிடுவதற்க்கு என்னைத்தவிர ஒன்றும் இல்லை" என்று செல்லம் கொஞ்சும் காதலியுடன் சேர்ந்து ஹாலிவுட் பாணியில் ஒன்றாய் சேர்ந்து பியானோ எல்லாம் வாசித்து விட்டு சாப்பாடு வாங்க போகிறார். போற வழியிலேயே நீண்ட கத்திகளோடு துரத்தும் முஸ்லிம்களிடம் இருந்து ஒரு ஹிந்து பெண்ணை காப்பற்றி விட்டு எம்ஜீயார் போல கடமையை தான செஞ்சேன் என்று சொல்லி விட்டு வீட்டுக்கு வருகிறார். அப்பொழுது அவரிடம் வேலை பார்த்த ஒரு முஸ்லிம் நண்பர்களோடு வந்து சாகேத் ராமின் வங்காள காதலியை மிககொடுரமாக இவருடைய கண் முன்னே வன்கலவி செய்து கொன்று விடுகிறார்கள். இப்பொழுது சாகேத் ராம் தீவிரவாதியாக மாறுவானா மாட்டானா? ஆமா அப்பறம் மாறாமல் என்ன செய்வான் என்று கேட்க தோன்றுகிறதா? இவ்வாறு கேட்கும் படியான காட்சியை அமைக்க தோன்றிய கமலுக்கு முஸ்லிம்களுக்கும் காதலிகள் குடும்பம் இருந்து இருக்கும், சிருபான்மையினரான முஸ்லிம்கள் இதை விட கொடுருமான பாதிபுகளுக்கு பிரிவினையின் போது உள்ளானார்கள் என்று தெரிந்து இருந்தும் அதை பற்றி நேர்மையான ஒரு காட்சி கூட வைக்காமல் கடந்து போவதை அன்று முளைக்காமல் இருந்த  சிறபான்மையினரின் அரசியல் விதை பெருந்தன்மையோடு அனுமதித்தது. அப்பட்டமான அரசியல் காழ்புனர்ச்சியோடு சாகேத் ராம் ஐயங்கார் அம்ஜத் கானை கைபர் கால்வாய் வழி வந்தவன் என்று சொன்னது, உன்னுடைய ஜின்னாவின் பாகிஸ்தானுக்கு போ என்று சொன்னது தொடங்கி ஏராளமான வன்மங்கள். நான் பேசிக்கொண்டு இருப்பது பாபர் மசூதி இடிக்க பட்டத்திற்கு பின்பான ஹிந்து முஸ்லிம் நல்லுறவு பெரும் அச்சத்தை சந்தித்து கொண்டிருந்த நிலையிலான இந்தியாவில் வெளியான ஒரு திரைபடத்தில் உள்ள கருத்துக்கள். வழக்கம் போல்  கமல் காந்திய கருத்துகளை பற்றி படம் எடுத்து உள்ளார் என்று பொய் பரப்பப்பட்டது. உண்மையை தழுவி எடுக்கும் போது சில விஷயங்களை பேசினால் என்ன என்று கேட்க  பட்டது. இது முற்றிலும் தவறான வாதம். ஆங்கிலத்தில் கருப்பின Spike Lee இயக்கிய Denzel Washington என்ற கருபினத்தவர்  நடித்த Malcolm x என்ற கருப்பின தலைவரை பற்றிய படம் இந்த விஷயத்தில் மிக சிறந்த உதாரணம். Malcolm X மிக தீவிர வெள்ளை இன எதிர்ப்பாளராக தன் அரசியலை தொடங்கிய ஒரு மாபெரும் போராளி. வெள்ளையர்களை பூமியில் வாழும் பேய்கள் என்று சொல்லும் அளவிற்கு அவருடைய தொடக்க கால அரசியல் இருந்தது. அப்படிபட்டவரின் வாழ்க்கையை படம் ஆக்கும் போது கூட இயக்குனர் எவ்வளவு கவனமாக தற்கால அரசியல் சூழலை கருத்தில் கொண்டு வெள்ளையரை காயபடுத்தாத வகையில் படம் ஆக்கி இருப்பார் என்று  படம் பார்த்தவர்களுக்கு தெரியும்.இதுதான் பகுத்துஅறிவு உள்ள நல்ல கலைஞர்கள் செய்வார்கள். கமலிடம் இது ரெண்டையும் எதிர் பார்ப்பது தவறு. அவர் என்ன வச்சிகிட்ட வஞ்சனை பண்ணுகிறார் ? anyway கமலுக்கும் பகுத்தறிவுக்கும், நல்ல கலைஞன், சமூக பொறுப்பு போன்ற வார்த்தைகளுக்கும் சமந்தம் இல்லை என்பது எனது உறுதியான கருத்து.சரி கமலுக்கு என்று அரசியல் கருத்து என்று ஒன்று  உள்ளதா என்று கேட்டால் "தெரியலயேப்பா" என்று நாயகன் கமலை போன்றுதான் சொல்ல தோன்றுகிறது. கமலை பொறுத்த வரைக்கும் ஒகேனக்கல் போராட்டத்தில் பேசியதை போன்று அவருக்கு " குல்ஸாரும் வேண்டும் கும்ளேயும் வேண்டும்". இது சினிமாவுக்கு வெளியேயான அரசியல் நிலைப்பாடு என்று கொள்ளலாம். அவரது சினிமாவில் எதாவது அரசியல் இருகிறதா என்று கேட்டால் "அட போங்க தம்பி ..புள்ள குட்டிய படிக்க வைங்க " என்றுதான் சொல்ல தோன்றுகிறது. ஒரு உண்மையான சித்தாந்த ரீதியான அரசியல் நிலைப்பாடு என்பது உங்கள் வாழ்கையின் ஒவ்வொன்றையும் உங்கள் முடிவுகளையும் தீர்மானிக்க கூடியது. அது போன்றதொரு அரசியலை தமிழ் சினிமாவில் கருணாநிதியை போன்று சிலர் தவிர்த்து கமல் உட்பட யாருமே முன்னெடுக்க துணிந்ததும்  இல்லை அதற்கான அரசியல் அறிவும் இல்லை என்பதுதான் எனக்கு தெரிந்த வரைக்குமான உண்மை. கமல் எழுதி இயக்கிய படங்களை மட்டுமே பார்த்தாலும் ஓவொன்றும் ஒவ்வொரு அரசியலை, வெவ்வேறு கருத்துகளை கொண்ட படங்கள். அன்பே சிவம் ஆந்திரா ஸ்டைல் மாங்கா ஊறுகாய் என்றால் விருமாண்டி என்பது குடல் கறி  குழம்பு. அதாவது ரெண்டுக்கும் அரசியல் கருத்து ரீதியாக எந்த சம்மந்தமும் இல்லை. அட  போங்க  ரெண்டும் வேறு வேறு subject matterஐ கையாளும் படங்கள் என்று சொல்லலாம். இருந்தாலும் அரசியல் நிலைப்பாடு உடைய ஒருவர் வெவ்வேறு subject கையாண்டாலும் அவர்களது மைய கருத்து அவர்களின் அரசியல் நிலைபாட்டை மீராததாக இருக்கும். உதாரணம் kim ki duk எடுத்த எல்லா படங்களிலும் மைய கருத்து புத்த தத்துவங்கள் சார்ந்தே எல்லா subject matter அனுகபடுவதை பார்க்கலாம். ஏனென்றால் அவர் சொந்தமாக தனக்கு உள்ள அரசியல் நிலைபாடு சார்ந்து ஒரு படத்தை தானே யோசித்து எடுக்கிறார். இது ஒரு அரசியல் நிலைபாடு உள்ள கலைஞனின் நிலை. ஆனால் கமல் போன்று அரசியல் நிலைப்பாடே இல்லாத dvdயில் பார்க்கும் ஹாலிவுட் படங்களினால் உந்தப்பட்ட வியாபாரிகளின் படங்கள் எப்படி இருக்கும் என்பதற்குத்தான் வெவ்வேறு அரசியலை மாற்றி மாற்றி ஒவ்வொரு subject matterகும் முன்னிறுத்தும் கமலின் படங்கள் உதாரணம். காரணம் அரசியல் நிலைப்பாடு என்று எப்படி பேரரசுக்கு ஒன்று கிடையாதோ அதே போன்றுதான் கமலுக்கும் கிடையாது . அப்பறம் ஏன்தான் கமல் இந்த மாதிரி எடுக்கிறார் என்றால் கமல் என்னை பொறுத்த வரையிலும் உயரத்தில் தொங்கும் ஹாலிவுட் வாய்ப்பை வாயில் உமிழ்நீர் ஒழுக பார்த்து கொண்டிருக்கும் ஒரு பரிதாபத்துக்கு உரிய ஓநாய். கமல் மட்டும்தான் தமிழ் சினிமாவுக்கு கஞ்சியோ கூழோ ஊற்றி காப்பாற்ற வேண்டும் என்று திட்டமிட்டு கட்டமைக்க பட்ட பொய்யான பிம்பம் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் உடைய ஆரம்பித்திருகிறது. கமல் செய்த அவ்வை சண்முகி உள்ளான மாறுவேட கோமாளி தனங்களை நடிப்பின் உச்சம் என்று புளுகிய நம் ஊடகங்களின் கேனைதனங்கள் பலருக்கும் விளங்க ஆரம்பித்து இருக்கிறது. இந்நிலையில் தான் அவர் எடுக்ககூடிய சிறந்த அவதாரங்களில் ஒன்றான வியாபாரி கமல் வெளியே வருகிறார். இப்போ ஹாலிவுட் ஸ்டைல் என்ன? ஈரான், ஈராக் , ஆப்கானிஸ்தான் போரில் வீரமாக போரிடும் அமெரிக்க வீரன் இல்லன முஸ்லிம் தீவிரவாதிகளின் சதி அதை முறி அடிக்கும் நல்ல தங்கமான அமெரிக்க C.I.A நாயகன். வியாபாரி கமல் இது போன்றதொரு கதையை ஆங்கிலத்தில் எடுத்து வெளியிட்டால் அவரே போய் பார்க்க மாட்டார். அப்படி என்றால் என்ன செய்வது? இருக்கவே இருகிறார்கள் இந்திய தலித்துகளும் சிறுபான்மையினரும் என்ன சொன்னாலும் முளைக்காத விதைகளாய் அரசியல் எதிர்ப்பை காட்ட திராணியற்று. முஸ்லிம் தீவிரவாதத்தை " கக்கூசில் இருக்கும் கரப்பான் பூச்சியை அடித்து கொள்வதில்லையா" என்று எப்படி கையாள வேண்டும் என்று அதன் எந்தபின்னனியும் பார்க்காமல் விளக்காமல் வசனம் வைத்த போதே பேசாமல் இருந்தவர்கள் இப்பொழுது என்ன செய்ய போகிறார்கள் என்று எடுத்துள்ள படம்தான் விஸ்வரூபம் என்பது எனது குற்றச்சாட்டு .கமலின் ஹாலிவுட் அரிப்பை சொரிந்து கொள்ள முன்பே சொன்னதை போல் தமிழ் சினிமா கம்மர்சியல் சிக்ஸர் அடித்து கொண்டிருந்த முஸ்லிம் தீவரவாதிகள் என்னும் பேட்டை வைத்து இந்த முறை விளையாட முயல அது உடைந்து விட்டது.  "உன் பின்னால் இருக்கும் கூட்டம் சினிமா பார்த்து வளர்ந்த பலகீனமான கூட்டம்" என்று குருதிப்புனலில் கமல் எழுதிய வசனத்தை போல  ஒரு கூட்டம் தற்பொழுது இந்த பிரச்சனையின் எல்லா பரிமாணத்தையும் அணுகாமல் சென்சார் சொல்லிட்ட கேட்டுக்கணும், கருத்து  சுதந்திரத்தை தடுக்க கூடாது, கமல் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெருமை அது இல்லாம அவரு பகுத்தறிவுவாதி வேற அதனால அவரு சொல்றத நம்பனும் , முஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை கிடையாது என்று தட்டையான எந்த விதமான பரிமானங்களையும் உள்வாங்காமல் சொல்லி கொண்டு இருகிறார்கள். நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் "விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் சுயரூபம்" என்ற விஸ்வரூப பாடல் வரிகளை போல் ஒடுக்க பட்டோரின் அரசியல் முதிர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் தற்சமயத்தில் இது போன்ற எதிர்பரசியல் தவிர்க்க முடியாததாகிறது. " ஒரு போர் எங்கு தொடுங்குகிறது ? ஒரு புன்னகை மறுக்கபடும் போது " என்று கமலின் குரலில் விஸ்வரூபம் ட்ரைலரில் ஒலிக்கும் அற்புதமான வரிகளை போல  ஆயிரகணக்கான ஆண்டுகளாய் இந்தியாவில் புன்னகை மறுக்கபட்ட தலித்துகளும் சிறுபான்மையினரும் ஒரு போரை தொடங்காவண்ணம் நேர்மையான ஜனநாயகத்தோடு செயல்பட வேண்டியது கமல் மட்டும் அல்ல மனிததிலும் அன்பிலும் நமிக்கை உள்ள எல்லோரின் கடமை.1/4/13

பாப்லோ நெருடா sonnet 1


பாப்லோ நெருடா sonnet 1

மடில்டே என்பது 
ஒரு தாவரத்தின், அல்லது ஒரு தொன்ம பாறையின், அல்லது திராட்சை மதுவின்,
பூமியில் பிறந்து அழிவற்று இருப்பவைகளின் பெயர்:
அந்த வார்த்தையில்தான் காலை சூரியனின் முதல் கற்றை விழுகிறது 
அதன் கோடை வெளிச்சத்தில்தான்  எலுமிச்சை பூக்கிறது.

மரகலன்கள் அந்த பெயரின் மீது மிதந்து செல்கின்றன
தீப்பற்றி  எரியும் நீல அலைகள் அதை சூழ்ந்து கொள்கின்றன.
அந்த பெயரில் உள்ள எழுத்துக்கள் நதியின் நீரென 
எனது வறண்ட இதயத்தில் கொட்டுகிறது.

அந்த பெயர் அடர்ந்து படர்ந்த கொடிகளுக்கிடையில் கண்டடையபடாமல் உள்ளது 
உலகின் நறுமணத்தை நோக்கி செல்லும் 
ரகசிய பாதாள சுரங்கத்தின்  வாயிலை  போல.

உனது வெம்மையான வாயை கொண்டு என்மீது போர் தொடு; உனது இரவு கண்களால் 
என்னை விசாரணை செய், நீ விரும்பினால் மட்டும் 
என்னை ஒரு கப்பலென உனது பெயரின் மீது நீந்த  விடு; 
அங்கேயே என்னை ஓய்வெடுக்க விடு.
                                                        - மொழிபெயர்ப்பு ஜெயசீலன்