1/28/13

விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் சுயரூபம்

விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் சுயரூபம்

நான் தெருவில் விளையாடிய கிரிக்கெட் ஆட்டத்தில் யாரோ அடிக்கும் அடியில்  பேட் உடைந்து விடும் பொழுது எல்லோரும் சேர்ந்து புது பேட் வாங்குவது என்று முடிவாகும். காரணம் எல்லோரும் அதில் விளையாடி  இருக்கிறோம், கொஞ்சம் கொஞ்சமாக அது விரிசல் விழுந்து  உடையும் நிலைக்கு வந்ததில் அதை பயன்படுத்திய எல்லோருக்கும் பங்கு உள்ளது என்ற புரிதலே. 90களில் தொடங்கி தமிழ் சினிமாவில் தொடர்ந்து கொஞ்சம் கூட சலிக்காமல் மனசாட்சியோ, அரசியல் அறிவோ, சமூக பொறுப்புணர்ச்சியோ இல்லாமல் இந்திய முஸ்லிம்கள் என்னும் பேட்டை வைத்து சிக்ஸர் அடித்து கொண்டிருந்த தமிழ் சினிமா இன்று பேட் உடைந்த உடன் கடைசியாக அதை வைத்து ஆடி கொண்டிருந்த தமிழ் சினிமாவுக்கு ஆஸ்கார் வாங்கி தருவதற்கென்றே கடவுள் செய்து அனுப்பி உள்ள  "பத்மஸ்ரீ " "உலக நாயகன்" "டாக்டர்"  கமல் ஹாசனை மட்டும் மாட்டி விட்டுவிட்டு எஸ்ஸாகி விட்டது கண்டனத்துக்கு உரியது.

கோமாளிகளின் கூடாரமாய் போய்விட்ட இந்திய தேசத்தில் தனிக்கை துறையும் அதற்க்கு விதிவிலக்கு அல்ல. பல்வேறு தரப்பட்ட மதம், இனம், சாதி, மொழி சார்ந்த மக்கள் வாழும் இந்தியாவில் தனிக்கை துறையின் பங்கு மிக முக்கியமானது என்பதை யாரும் சொல்ல தேவை இல்லை. ஆனால் அந்த மண்டயன்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்தார்களா? அதற்கான உலகளாவிய சினிமா குறித்த அறிவு அவர்களுக்கு இருகிறதா ? அவர்களை நியமிப்பதில் அரசியல் இல்லாமல் இருகிறதா போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை என்பதாகத்தான் இருக்க முடியும். இவர்கள் செய்து வரும் முட்டாள்தனத்தை நாம் தொடர்ந்து பார்த்து கொண்டுதான் இருக்கிறோம் "ஆரண்யகாண்டம் " போன்ற ஒரு படத்திற்கு தமிழக சென்சார் போர்டு தனிக்கை சான்றிதழ் தர மறுத்தது உட்பட . அந்த மண்டயன்களின் சமிபத்திய கோமாளிதனம்தான் விஸ்வரூபம் படத்திற்கு U/A certificate கொடுத்தது. அம்மனகுன்டியா வந்தால் மட்டும்தான் A certificate தர வேண்டும் என்று நினைத்தார்களோ என்னவோ விஸ்வரூபம் படத்திற்கு A certificate தரவில்லை. இஸ்லாமிய பயங்கரவாதம், தீவிரவாதம் , கொலைகள், சர்வதேச அரசியல் இவை எல்லாம் கையாள படும் ஒரு படத்தை adult content என்று அந்த மாங்கா மண்டயன்கள் உணராமல் விட்டது எப்படி என்பது விஸ்வரூபம் படத்தை விட பெரிய சஸ்பென்ஸ் த்ரில்லெர். இப்படி நம்பகத்தன்மை சிறிதும் அற்ற censor board சொல்லி விட்டால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்று எதிர்பார்பதோ கேள்வி கேட்க கூடாது என்று சொல்வதோ சரியாக எனக்கு தோன்றவில்லை. அரசியல் அமைப்பு சட்டத்தை தவிர ஜனநாயகத்தில் அனைத்தையும் கேள்விக்கு உள்ளாக்க மக்களுக்கு குறிப்பாக சிறுபான்மையினருக்கு உரிமை உள்ளது. எனவே censor board சொன்ன பிறகு எதிர்ப்பு தெரிவிப்பது தவறு என்ற வாதம் சரி அல்ல. இந்த பிரச்சனையின் ஊற்றுக்கண் சென்சார் அமைப்பே. இந்த எதிர்ப்பின் தொடக்கம் சென்சார் போர்டின் தொடர்ந்த தோல்வியினால் வந்ததே என்பதை உணர்வது மிக அவசியமானது.
கமலுக்கு கருத்து சுதந்திரம் இல்லையா? இந்தியாவில் கருத்து சொல்ல உரிமை இல்லையா ? என்று கேட்டால் இருக்க வேண்டும் என்பதுதான் பதில்.ஆனால் உண்மையில் இந்தியாவில் கருத்து சுதந்திரம் என்பது "உண்மையானதாக " "பொதுவானதாக " இல்லை என்பதுதான் உண்மை. கருத்து சுதந்திரம் என்பது என்னை பொறுத்த வரையில் ஒரு கருத்து சொல்லபடுவதோடு முடிவது இல்லை. அதை விட முக்கியமாக அந்த கருத்துக்கு எதிர் கருத்து சொல்லும் வாய்ப்பு, உரிமை  திறந்த மனதோடு மற்றவருக்கு அளிக்கப்பட்டதா என்பதுதான். தேவர்மகன் படம் எடுக்க கமலுக்கும், சின்ன கௌண்டெர் எடுக்க உதயகுமாருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது. அதே நேரத்தில் பறையர் மகன் என்றோ அல்லது சின்ன பள்ளர் என்றோ யாரவது அந்த சாதி மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து படம் எடுத்தால் அந்த படம் வெளிவரும் என்று நினைகிறீர்களா ?? அப்படியே வெளிவாந்தால் திரை அரங்கு கிடைக்குமா ? அப்படியே கிடைத்தால் தேவர் மகனை திறந்த மனதோடு சென்று பார்த்த "தமிழர் " பறையர் மகன் படத்தை சென்று பார்பார்களா ?? இந்திய அரசியல் அமைப்பின் தந்தை அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய படம் மம்முட்டிக்கு தேசிய விருது கிடைத்த படம் தமிழகத்தில் வெளியாக 5,6 ஆண்டுகளுக்கு மேலானது என்பதையும் அதை திரையிட பல இயக்கங்கள் போராட வேண்டி இருந்தது என்பதையும் நாம் பார்த்தோம். உண்மையான கருத்து சுதந்திரத்திற்கு உதாரணம் சமிபத்தில் வெளியாகி உள்ள ஹாலிவுட் திரைப்படம் "Django". கருபினத்தவரை அடிமைகளாக நடத்திய காலத்தில் ஒரு கறுப்பின கதாநாயகன் அந்த தீய வெள்ளையர்களை தேடி சென்று மிக கொடூரமாக கொலை செய்வது போன்றபடத்தை ஒரு வெள்ளையின இயக்குனரால் சிந்திக்க, எடுக்க முடிகிறது , முக்கியமான வெள்ளையின நடிகர்களால் நடிக்க முடிகிறது, உலகம் முழுக்க வெளியிட முடிகிறது, வெள்ளையர்கள் அதிகமாக வாழும் அமெரிக்காவில் வசூல் சாதனை செய்ய முடிகிறது, ஆஸ்கார் விருதுக்கு 4,5 பிரிவுகளில் போட்டியிட முடிகிறது. மனசாட்சி உள்ள எல்லாருக்கும் தெரியும் இந்த மாதிரியான சரி சமமான கருத்து சுதந்திரம் இந்தியாவில் உள்ளதா என்று. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக "முஸ்லிம் தீவிரவாதிகள்" என்ற சொற்றொடர் தொடர்ந்து செய்திகளிலும், திரைப்படங்களிலும், விவாதங்களிலும் பயன்படுத்த பட்ட போது சலனமற்று இருந்த இந்தியா ஷிண்டே "ஹிந்து தீவிரவாதம்" என்ற சொல்லை பயன்படுத்திய உடன் எம்பி எம்பி குதிப்பது ஏன் ? இந்த நிலையில் தான் முன்  எப்போதும் இல்லாத அளவிற்கு தலித்துகளும் இஸ்லாமியர்களும் மிகுந்த விழிப்போடும்,அரசியல் அறிவோடும், யாரையும் நம்பாமல் இருக்க வேண்டிய வரலாற்று தேவையை நோக்கி தள்ளபட்டு இருகிறார்கள். அவர்களுக்கு அவர்கள் கருத்தை சொல்வதற்கு சரியான வாய்ப்போ சந்தர்பமோ தராமல் திட்டமிட்டு ஒடுக்கியதின் விளைவாக அவர்கள் பிறர் சொல்லும் கருத்துக்கு எதிரான கலகத்தின் மூலம் தங்கள் கருத்தை சொல்ல முயலுகிறார்கள் என்பதே உண்மை. கருத்து சுதந்திரம் என்ற அடிப்படை உரிமை இந்தியாவில் அனைவருக்கும் குறிப்பாக தலித், சிறுபான்மையினருக்கு கிடைக்கும் வரை இது போன்ற எதிர்பரசியல் நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும், இருக்கும். அது வரையில் "உலக நாயகன்" கமல் போன்றவர்கள் தாங்கள் சூடி உள்ள பட்டத்தில் உள்ள உலகில் பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள், குறிப்பாக சிறுபான்மையினர் இருகிறார்கள் என்று நினைத்து, உணர்ந்து, யோசித்து முஸ்லிம்களே பாராட்டி பிரியாணி போட கூடிய அளவுக்கான அவருடைய மேலான நல்ல கருத்தை ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து படங்களில் சொல்வது நலமாய் அமையும் அவருக்கும் அனைவருக்கும்.
சரி. யாரிந்த உலக நாயகன் ? அவருடைய திரைப்படங்களின் அரசியல் என்ன? அவருடைய திரைப்படங்களில் அரசியல் என்று ஒன்று உள்ளதா ? எனக்கு தெரிந்து "ராஜா பார்வை" படம் வரும் வரையில் அவர் நேத்து ராத்திரி யம்ம்ம்ம்மா தான். ராஜா பார்வை படம் கமலை ஒரு நடிகனை தாண்டிய கலைஞனாக மேட்டுக்குடி பத்திரிக்கைகளால் வடிவம் தரபட்டதாக நான் உணர்கிறேன். நட்சத்திர அந்தஸ்தில் ரஜினியை ஒரு போதும் நெருங்க முடியாது என்று முட்டி மோதி அடிபட்டு ரத்த காயத்தோடு கமல் எடுத்த முடிவுதான் நாயகனில் இருந்து ஒரு கலைஞனாக அறிவு ஜீவியாக தன்னை நிலை நிறுத்தி கொள்ளும் ஆசை. இந்த அறிவுஜீவி பிம்பம் கமலுக்கு தேவை பட்டதில் உள்ள உளவியலை என் பார்வையில் என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. மெத்த படித்த குடும்பத்தில் பிறந்த கமல் தான் பள்ளி படிப்பை தாண்டாமல் போன வருத்தமும் ஏக்கமும் இயல்பாக கொண்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி இருக்கையில் அவரை ஒரு அறிவுஜீவியாக ஊடகம் பிம்பம் தந்த போது அவர் அதில் அடைந்து இருக்க கூடிய மகிழ்ச்சியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் கமல் குறித்தான கலைஞன், அறிவி ஜீவி போன்ற பிம்பங்கள் ஒரு comparative opinion என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். கமலை ரஜினி, விஜயகாந்த் , பிரபு , கார்த்திக் , ராமராஜன் , மோகன் , ராஜ்கிரண் இவர்களோடு நிறுத்தி "பய்யன் ரொம்ப சுட்டியா இருக்கான்டா " என்று சொல்ல ஆரம்பித்தது பின் அந்த ஒப்பீட்டு தத்துவம் மறைந்து இவர் தனி ஆளுமையாகவே ஒரு கலைஞனாக ஒரு அறிவு ஜீவியாக முன்னிறுத்த பட்டார். அதை கமல் எந்த சந்தேகமும் இல்லாமல் "உனக்கு என்னாட ராஜாடா நீ" என்று தனக்கு தானே சொல்லி கொள்ள நம்ப ஆரமபித்ததாகவே நான் நினைக்கிறேன். இப்படி கலைஞன் , அறிவி ஜீவி என்று காக்டெயில் சரக்கை கமல் சப்பி குடித்து கொண்டிருந்த போதுதான் அவர் தலையில் அவரே வைத்து கொண்ட பகுத்தறிவுவாதி பட்டம்.
கடவுளை ஒருவன் மறுத்து விட்டாலே, கடவுளை பற்றி கொஞ்சம் கிண்டல் செய்து விட்டாலே அவர்கள் பகுத்தறிவுவாதிகள் என்று மாங்க மண்டயன்கள் நிரம்பிய இந்தியாவிலும் தமிழகத்திலும் ஒரு கருத்து கட்டமைக்க பட்டு இருக்கிறது. இதை பயன்படுத்திதான்  சத்யராஜ் சிமான் எல்லாம்  பகுத்தறிவுவாதி ஆகிறார்கள். கடவுளை மறுக்க ஒரு 20 பக்கம் இயற்பியலும் விலங்கியலும் படித்தாலே விளங்கி விடும். அதற்க்கு பகுத்தறிவே தேவை இல்லை. கொஞ்சூண்டு தர்க்க அறிவு மட்டும் இருந்தால் போதுமானது. பகுத்தறிவு என்பது புத்தத்தைபோல ஒரு வாழும் முறை. Being a rationalist is a way of life. அதற்க்கு முடிவே இல்லை . இது ஒரு முக்கியமான அடிப்படை கருத்து. இதை அறியாத முட்டாள்கள் கமல் கடவுளை நம்பாதவர் அதனால் அவர் ஒரு பகுத்தறிவுவாதி என்று சொல்ல பரப்ப ஆரம்பித்தார்கள். இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் புத்தத்தை தழுவிய அம்பேத்கரை விட கமல் சிறந்த பகுத்தறிவுவாதி என்று ஆகிவிடும். அது முற்றிலும் தவறு. அப்போ கமல் ஒரு கலைஞனோ, அறிவுஜீவியோ, பகுத்தறிவுவாதியோ இல்லையா என்ற கேள்விக்கு ஒ ஒ ஒ ஒ போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே என்று பாடி கொண்டு கொண்டு தேவர் மகனில் பதில் சொல்லவந்தார் உலக நாயகன்.
தேவர் மகன் வெளியான காலம் தென் தமிழகம் மிக பெரிய சாதி காலவரம் எந்த நேரத்திலும் நிகழும் என்ற very volatile state என்ற நிலையில் இருந்ததாக நாம் அறிகிறோம். இந்த நிலையில்தான் கமல் எழுதிய திரைகதை வசனத்தில் அவரே தயாரித்து நடித்த தேவர் மகன் படம் வெளியானது. மாங்கா மண்டயன்கள் நிரம்பிய சென்சார் போர்டு குறைந்த பட்சம் பெயரை கூட மாற்ற சொல்லாமல் வெளியிட "கருத்து சுதந்திரத்தின்" அடிப்படையில் அனுமதிக்கிறது. இப்பொழுது ஒரு பகுத்தறிவுவாதிக்கு அன்றைய சூழ்நிலையில் தேவர் மகன் படம் கல்வி அறிவு மிக குறைவாக இருந்த இன்றளவும் உள்ள தென் தமிழகத்தில் தவறான விளைவுகளை உண்டாக்கும் என்று தெரியுமா தெரியாதா ? ஒரு பகுத்தறிவுவாதி எப்பொழுதும் ஒடுக்க பட்டோரின் பக்கம்தான் நிற்பான். உதாரணம் பெரியார், அம்பேத்கர், சே குவேர. பகுத்தறிவு கமல் தேவர் மகனில் தேவர் சாதி பக்கம் நின்று சொன்ன மைய கருத்து என்னவென்றால் " வேல் கம்பும் வெட்டருவாலும இருந்த பசங்க மெதுவாகத்தான் வருவாங்க ". அதற்க்கு கமலே ஒரு நல்ல கேள்வியை கேட்டு இருப்பார்." மெதுவான எம்புட்டு மெதுவாய?" என்று . உலகத்தின் ஒப்பற்ற ஈடு இணையற்ற உன்னத  வீரர்களாய் அறியப்படும் சாமுராய்களே இன்று வேல் கம்பும் வெட்டருவாலும் என்பதில் இருந்து மாறி வேறு வேலை  பார்த்துகொண்டு sake குடித்து கொண்டு அமைதியாய் இருக்கையில் கமல் சொல்கிறார் அவர்கள் மெதுவாதான் வருவார்கள் என்று. அவர்கள் மெதுவாதான் வருவார்கள் என்று சொன்ன முட்டாள்தனமான வசனத்திற்கு பதிலான  "எம்புட்டு மெதுவாயா அதுக்குள்ள நான் செத்துருவேன் போல இருக்கே  ?" என்ற நேர்மையான விரக்தியான கேள்விக்கு விதை கொட்ட பழம் என்று பேசி மழுங்கடித்து இருப்பார். கடைசியில் எல்லோரும் போய் படிங்க என்று அறிவொளி இயக்க ஊழியர் போல் கருத்து சொல்லி முடித்திருப்பார். இன்று வரை படம் வன்முறைக்கு எதிரான படம் என்று சங்கடமே இல்லாமல் ஷகீலா படம் கிட்னி பிரச்சனை பற்றிய விழிப்புணர்வு படம் என்று சொல்வதை போல் மனசாட்சியே இல்லாமல் ஊடகங்களும் கமலும் சொல்லி கொண்டு இருகிறார்கள். ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால்  தேவர் மகன் வெளியான பின்பு தங்கள் மீதான ஒடுக்குமுறை புதிய உத்வேகம் பெற்றதாக பாதிக்க பட்ட மக்கள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்து இருகிறார்கள். அப்பறம் ஏன் பகுத்தறிவுவாதி கமல் இப்படி எடுத்தார் என்றால் தசவதாரம் எடுக்க கூடிய கமலின் ஒரு முக்கிய பிரதான அவதாரமான வியாபாரி கமல் பகுத்தறிவுவாதி கமலை பார்த்து "மூடிகிட்டு இரு...இப்படி எடுத்தாதான் நாலு காசு பார்க்க முடியும்" என்று சொல்லி விட்டத்தின் விளைவு தான் கொஞ்சம் கூட சமூக பொறுப்புணர்வு அற்ற தேவர் மகன். தமிழில் காட்சி ஊடகத்தில் தேவர் மகன் அளவிற்கு தலித் மக்களை ஒடுக்குவதற்கும், ஆள்வதற்கும், வழி நடத்துவதற்கும் சட்டத்திற்கு அப்பாற்பட்டு  தங்களுக்கு உரிமை இருப்பாதாக மேல் சாதியினராக அவர்களே நினைத்து கொள்பவர்களுக்கு சொல்லி குடுத்த படம் இன்று வரை இல்லை என்பதுதான் உண்மை. தலித்துக்கள் அரசியல் அறிவு பெரும் போது கமல் என்னும் பெயர் அவர்களால் ஒரு போதும் மன்னிக்கபடாது என்பது  என்னுடைய கருத்து . கமலின் தலித் விரோத அரசியல் கருத்துக்கள் பற்றிய விரிவான கட்டுரைகள் நிறைய இணையத்தில் உள்ளன. எனவே அதை பற்றி அதிகம் பேச விரும்பவில்ல.
கமலின் திரைபடங்களில் குறிப்பாக எழுதி, இயக்கிய திரைப்படங்களில் எப்படி தலித் விரோத அரசியல் கருதுக்கள் தொடர்ந்து பரப்பட்டதோ அதற்க்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் இஸ்லாமிய வெறுப்பு அரசியல் பரப்பபட்டது. ஹேராம் திரைபடத்தில் சாகேத் ராம் ஐயங்கார் விடுமுறையில் தன் வங்காள காதலியை பார்க்க வருகிறார். "சாப்பிடுவதற்க்கு என்னைத்தவிர ஒன்றும் இல்லை" என்று செல்லம் கொஞ்சும் காதலியுடன் சேர்ந்து ஹாலிவுட் பாணியில் ஒன்றாய் சேர்ந்து பியானோ எல்லாம் வாசித்து விட்டு சாப்பாடு வாங்க போகிறார். போற வழியிலேயே நீண்ட கத்திகளோடு துரத்தும் முஸ்லிம்களிடம் இருந்து ஒரு ஹிந்து பெண்ணை காப்பற்றி விட்டு எம்ஜீயார் போல கடமையை தான செஞ்சேன் என்று சொல்லி விட்டு வீட்டுக்கு வருகிறார். அப்பொழுது அவரிடம் வேலை பார்த்த ஒரு முஸ்லிம் நண்பர்களோடு வந்து சாகேத் ராமின் வங்காள காதலியை மிககொடுரமாக இவருடைய கண் முன்னே வன்கலவி செய்து கொன்று விடுகிறார்கள். இப்பொழுது சாகேத் ராம் தீவிரவாதியாக மாறுவானா மாட்டானா? ஆமா அப்பறம் மாறாமல் என்ன செய்வான் என்று கேட்க தோன்றுகிறதா? இவ்வாறு கேட்கும் படியான காட்சியை அமைக்க தோன்றிய கமலுக்கு முஸ்லிம்களுக்கும் காதலிகள் குடும்பம் இருந்து இருக்கும், சிருபான்மையினரான முஸ்லிம்கள் இதை விட கொடுருமான பாதிபுகளுக்கு பிரிவினையின் போது உள்ளானார்கள் என்று தெரிந்து இருந்தும் அதை பற்றி நேர்மையான ஒரு காட்சி கூட வைக்காமல் கடந்து போவதை அன்று முளைக்காமல் இருந்த  சிறபான்மையினரின் அரசியல் விதை பெருந்தன்மையோடு அனுமதித்தது. அப்பட்டமான அரசியல் காழ்புனர்ச்சியோடு சாகேத் ராம் ஐயங்கார் அம்ஜத் கானை கைபர் கால்வாய் வழி வந்தவன் என்று சொன்னது, உன்னுடைய ஜின்னாவின் பாகிஸ்தானுக்கு போ என்று சொன்னது தொடங்கி ஏராளமான வன்மங்கள். நான் பேசிக்கொண்டு இருப்பது பாபர் மசூதி இடிக்க பட்டத்திற்கு பின்பான ஹிந்து முஸ்லிம் நல்லுறவு பெரும் அச்சத்தை சந்தித்து கொண்டிருந்த நிலையிலான இந்தியாவில் வெளியான ஒரு திரைபடத்தில் உள்ள கருத்துக்கள். வழக்கம் போல்  கமல் காந்திய கருத்துகளை பற்றி படம் எடுத்து உள்ளார் என்று பொய் பரப்பப்பட்டது. உண்மையை தழுவி எடுக்கும் போது சில விஷயங்களை பேசினால் என்ன என்று கேட்க  பட்டது. இது முற்றிலும் தவறான வாதம். ஆங்கிலத்தில் கருப்பின Spike Lee இயக்கிய Denzel Washington என்ற கருபினத்தவர்  நடித்த Malcolm x என்ற கருப்பின தலைவரை பற்றிய படம் இந்த விஷயத்தில் மிக சிறந்த உதாரணம். Malcolm X மிக தீவிர வெள்ளை இன எதிர்ப்பாளராக தன் அரசியலை தொடங்கிய ஒரு மாபெரும் போராளி. வெள்ளையர்களை பூமியில் வாழும் பேய்கள் என்று சொல்லும் அளவிற்கு அவருடைய தொடக்க கால அரசியல் இருந்தது. அப்படிபட்டவரின் வாழ்க்கையை படம் ஆக்கும் போது கூட இயக்குனர் எவ்வளவு கவனமாக தற்கால அரசியல் சூழலை கருத்தில் கொண்டு வெள்ளையரை காயபடுத்தாத வகையில் படம் ஆக்கி இருப்பார் என்று  படம் பார்த்தவர்களுக்கு தெரியும்.இதுதான் பகுத்துஅறிவு உள்ள நல்ல கலைஞர்கள் செய்வார்கள். கமலிடம் இது ரெண்டையும் எதிர் பார்ப்பது தவறு. அவர் என்ன வச்சிகிட்ட வஞ்சனை பண்ணுகிறார் ? anyway கமலுக்கும் பகுத்தறிவுக்கும், நல்ல கலைஞன், சமூக பொறுப்பு போன்ற வார்த்தைகளுக்கும் சமந்தம் இல்லை என்பது எனது உறுதியான கருத்து.சரி கமலுக்கு என்று அரசியல் கருத்து என்று ஒன்று  உள்ளதா என்று கேட்டால் "தெரியலயேப்பா" என்று நாயகன் கமலை போன்றுதான் சொல்ல தோன்றுகிறது. கமலை பொறுத்த வரைக்கும் ஒகேனக்கல் போராட்டத்தில் பேசியதை போன்று அவருக்கு " குல்ஸாரும் வேண்டும் கும்ளேயும் வேண்டும்". இது சினிமாவுக்கு வெளியேயான அரசியல் நிலைப்பாடு என்று கொள்ளலாம். அவரது சினிமாவில் எதாவது அரசியல் இருகிறதா என்று கேட்டால் "அட போங்க தம்பி ..புள்ள குட்டிய படிக்க வைங்க " என்றுதான் சொல்ல தோன்றுகிறது. ஒரு உண்மையான சித்தாந்த ரீதியான அரசியல் நிலைப்பாடு என்பது உங்கள் வாழ்கையின் ஒவ்வொன்றையும் உங்கள் முடிவுகளையும் தீர்மானிக்க கூடியது. அது போன்றதொரு அரசியலை தமிழ் சினிமாவில் கருணாநிதியை போன்று சிலர் தவிர்த்து கமல் உட்பட யாருமே முன்னெடுக்க துணிந்ததும்  இல்லை அதற்கான அரசியல் அறிவும் இல்லை என்பதுதான் எனக்கு தெரிந்த வரைக்குமான உண்மை. கமல் எழுதி இயக்கிய படங்களை மட்டுமே பார்த்தாலும் ஓவொன்றும் ஒவ்வொரு அரசியலை, வெவ்வேறு கருத்துகளை கொண்ட படங்கள். அன்பே சிவம் ஆந்திரா ஸ்டைல் மாங்கா ஊறுகாய் என்றால் விருமாண்டி என்பது குடல் கறி  குழம்பு. அதாவது ரெண்டுக்கும் அரசியல் கருத்து ரீதியாக எந்த சம்மந்தமும் இல்லை. அட  போங்க  ரெண்டும் வேறு வேறு subject matterஐ கையாளும் படங்கள் என்று சொல்லலாம். இருந்தாலும் அரசியல் நிலைப்பாடு உடைய ஒருவர் வெவ்வேறு subject கையாண்டாலும் அவர்களது மைய கருத்து அவர்களின் அரசியல் நிலைபாட்டை மீராததாக இருக்கும். உதாரணம் kim ki duk எடுத்த எல்லா படங்களிலும் மைய கருத்து புத்த தத்துவங்கள் சார்ந்தே எல்லா subject matter அனுகபடுவதை பார்க்கலாம். ஏனென்றால் அவர் சொந்தமாக தனக்கு உள்ள அரசியல் நிலைபாடு சார்ந்து ஒரு படத்தை தானே யோசித்து எடுக்கிறார். இது ஒரு அரசியல் நிலைபாடு உள்ள கலைஞனின் நிலை. ஆனால் கமல் போன்று அரசியல் நிலைப்பாடே இல்லாத dvdயில் பார்க்கும் ஹாலிவுட் படங்களினால் உந்தப்பட்ட வியாபாரிகளின் படங்கள் எப்படி இருக்கும் என்பதற்குத்தான் வெவ்வேறு அரசியலை மாற்றி மாற்றி ஒவ்வொரு subject matterகும் முன்னிறுத்தும் கமலின் படங்கள் உதாரணம். காரணம் அரசியல் நிலைப்பாடு என்று எப்படி பேரரசுக்கு ஒன்று கிடையாதோ அதே போன்றுதான் கமலுக்கும் கிடையாது . அப்பறம் ஏன்தான் கமல் இந்த மாதிரி எடுக்கிறார் என்றால் கமல் என்னை பொறுத்த வரையிலும் உயரத்தில் தொங்கும் ஹாலிவுட் வாய்ப்பை வாயில் உமிழ்நீர் ஒழுக பார்த்து கொண்டிருக்கும் ஒரு பரிதாபத்துக்கு உரிய ஓநாய். கமல் மட்டும்தான் தமிழ் சினிமாவுக்கு கஞ்சியோ கூழோ ஊற்றி காப்பாற்ற வேண்டும் என்று திட்டமிட்டு கட்டமைக்க பட்ட பொய்யான பிம்பம் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் உடைய ஆரம்பித்திருகிறது. கமல் செய்த அவ்வை சண்முகி உள்ளான மாறுவேட கோமாளி தனங்களை நடிப்பின் உச்சம் என்று புளுகிய நம் ஊடகங்களின் கேனைதனங்கள் பலருக்கும் விளங்க ஆரம்பித்து இருக்கிறது. இந்நிலையில் தான் அவர் எடுக்ககூடிய சிறந்த அவதாரங்களில் ஒன்றான வியாபாரி கமல் வெளியே வருகிறார். இப்போ ஹாலிவுட் ஸ்டைல் என்ன? ஈரான், ஈராக் , ஆப்கானிஸ்தான் போரில் வீரமாக போரிடும் அமெரிக்க வீரன் இல்லன முஸ்லிம் தீவிரவாதிகளின் சதி அதை முறி அடிக்கும் நல்ல தங்கமான அமெரிக்க C.I.A நாயகன். வியாபாரி கமல் இது போன்றதொரு கதையை ஆங்கிலத்தில் எடுத்து வெளியிட்டால் அவரே போய் பார்க்க மாட்டார். அப்படி என்றால் என்ன செய்வது? இருக்கவே இருகிறார்கள் இந்திய தலித்துகளும் சிறுபான்மையினரும் என்ன சொன்னாலும் முளைக்காத விதைகளாய் அரசியல் எதிர்ப்பை காட்ட திராணியற்று. முஸ்லிம் தீவிரவாதத்தை " கக்கூசில் இருக்கும் கரப்பான் பூச்சியை அடித்து கொள்வதில்லையா" என்று எப்படி கையாள வேண்டும் என்று அதன் எந்தபின்னனியும் பார்க்காமல் விளக்காமல் வசனம் வைத்த போதே பேசாமல் இருந்தவர்கள் இப்பொழுது என்ன செய்ய போகிறார்கள் என்று எடுத்துள்ள படம்தான் விஸ்வரூபம் என்பது எனது குற்றச்சாட்டு .கமலின் ஹாலிவுட் அரிப்பை சொரிந்து கொள்ள முன்பே சொன்னதை போல் தமிழ் சினிமா கம்மர்சியல் சிக்ஸர் அடித்து கொண்டிருந்த முஸ்லிம் தீவரவாதிகள் என்னும் பேட்டை வைத்து இந்த முறை விளையாட முயல அது உடைந்து விட்டது.  "உன் பின்னால் இருக்கும் கூட்டம் சினிமா பார்த்து வளர்ந்த பலகீனமான கூட்டம்" என்று குருதிப்புனலில் கமல் எழுதிய வசனத்தை போல  ஒரு கூட்டம் தற்பொழுது இந்த பிரச்சனையின் எல்லா பரிமாணத்தையும் அணுகாமல் சென்சார் சொல்லிட்ட கேட்டுக்கணும், கருத்து  சுதந்திரத்தை தடுக்க கூடாது, கமல் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெருமை அது இல்லாம அவரு பகுத்தறிவுவாதி வேற அதனால அவரு சொல்றத நம்பனும் , முஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை கிடையாது என்று தட்டையான எந்த விதமான பரிமானங்களையும் உள்வாங்காமல் சொல்லி கொண்டு இருகிறார்கள். நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் "விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் சுயரூபம்" என்ற விஸ்வரூப பாடல் வரிகளை போல் ஒடுக்க பட்டோரின் அரசியல் முதிர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் தற்சமயத்தில் இது போன்ற எதிர்பரசியல் தவிர்க்க முடியாததாகிறது. " ஒரு போர் எங்கு தொடுங்குகிறது ? ஒரு புன்னகை மறுக்கபடும் போது " என்று கமலின் குரலில் விஸ்வரூபம் ட்ரைலரில் ஒலிக்கும் அற்புதமான வரிகளை போல  ஆயிரகணக்கான ஆண்டுகளாய் இந்தியாவில் புன்னகை மறுக்கபட்ட தலித்துகளும் சிறுபான்மையினரும் ஒரு போரை தொடங்காவண்ணம் நேர்மையான ஜனநாயகத்தோடு செயல்பட வேண்டியது கமல் மட்டும் அல்ல மனிததிலும் அன்பிலும் நமிக்கை உள்ள எல்லோரின் கடமை.



1/4/13

பாப்லோ நெருடா sonnet 1


பாப்லோ நெருடா sonnet 1

மடில்டே என்பது 
ஒரு தாவரத்தின், அல்லது ஒரு தொன்ம பாறையின், அல்லது திராட்சை மதுவின்,
பூமியில் பிறந்து அழிவற்று இருப்பவைகளின் பெயர்:
அந்த வார்த்தையில்தான் காலை சூரியனின் முதல் கற்றை விழுகிறது 
அதன் கோடை வெளிச்சத்தில்தான்  எலுமிச்சை பூக்கிறது.

மரகலன்கள் அந்த பெயரின் மீது மிதந்து செல்கின்றன
தீப்பற்றி  எரியும் நீல அலைகள் அதை சூழ்ந்து கொள்கின்றன.
அந்த பெயரில் உள்ள எழுத்துக்கள் நதியின் நீரென 
எனது வறண்ட இதயத்தில் கொட்டுகிறது.

அந்த பெயர் அடர்ந்து படர்ந்த கொடிகளுக்கிடையில் கண்டடையபடாமல் உள்ளது 
உலகின் நறுமணத்தை நோக்கி செல்லும் 
ரகசிய பாதாள சுரங்கத்தின்  வாயிலை  போல.

உனது வெம்மையான வாயை கொண்டு என்மீது போர் தொடு; உனது இரவு கண்களால் 
என்னை விசாரணை செய், நீ விரும்பினால் மட்டும் 
என்னை ஒரு கப்பலென உனது பெயரின் மீது நீந்த  விடு; 
அங்கேயே என்னை ஓய்வெடுக்க விடு.
                                                        - மொழிபெயர்ப்பு ஜெயசீலன்