3/30/13

அவள் கூந்தலின் பாடல்கள் - 13

முன்பொரு வருடம் 
ஒரு நாளின் மதிய வேளையில் 
என் தாய் இட்ட அன்னத்தில் 
சுருண்டு கிடந்த அந்த முடியை 
இன்று அசைய கண்டேன் உன் காதோரத்தில். 
                                                                                                    - ஜெயசீலன்.

3/25/13

அவள் கூந்தலின் பாடல்கள் - 12

உன் கூந்தலில் மிதக்கும்
தூசை குறித்து உன்னிடம் சொல்கிறேன்...
இடமும் வலதுமாய் 
உன் முகத்தை அசைகிறாய்...
இலையுதிர்கால பழுப்பு இலையென அந்த தூசி 
உன் பாதம் நோக்கி விழ 
வசந்த காலம் வருகிறதா என்று 
முன்னும் பின்னும், இடமும் வலதுமாய் 
நான் தேட தொடங்குகிறேன். - ஜெயசீலன்

3/18/13

பன்னி மேய்பவனை "நல்ல ஆயன்" என்று சொல்லும் மடையன்கள்(1)

பன்னி மேய்பவனை "நல்ல ஆயன்" என்று சொல்லும் மடையன்கள்(1)


 

ஒரு படைப்பு எப்படி நிகழ்கிறது? ஒரு படைப்பாளி தனது வாழ்வில் நிகழ்ந்த,நினைத்த, பார்த்த, மறைத்த விசயங்களை பகிர நினைக்கும் போதும் அல்லது தன் வாழ்வில் இது நிகழ்ந்து இருக்க கூடாதா, நினைத்திருக்க கூடாதா, பார்த்திருக்க கூடாதா, மறைத்திருக்க கூடாதா என்று ஏங்கும் போதும் ஒரு படைப்புக்கான உத்வேகம் கிடைக்கிறது. இதில் பெரும்பான்மையான படைப்பாளிகள் குறிப்பாக திரைப்பட இயக்குனர்கள் அல்லது எழுத்தாளர்கள் இரண்டாம் முறையையே தேர்ந்து எடுப்பார்கள். ஏனென்றால் திரைபடத்தின் மிக பெரும் ஆச்சர்யமே நிகழ மறுத்த/நிகழாத ஒன்றை திரையில் நிகழ்த்தி காட்டுவதுதான்.இங்கு நாம் பேசும் திரைப்படம் என்பது கலை அல்லது இயல்பான அல்லது தீவிரமான திரைப்படங்களை பற்றி. இது போன்ற படங்களை கையாள்வதற்கும் எடுபதற்க்கும் ஒரு அரசியல், சமூக பார்வை தேவை. இது இரண்டும் இல்லாமல் எடுத்தால் படம் எப்படி இருக்கும் என்பதற்கு சமிபத்திய உதாரணம் ஆஸ்"கார்" நாயகன் கமலின் "விஸ்வரூபம்". இதன் அடிப்படையில் தொடர்ந்து அரசியல், சமூக பார்வை அற்று தியட்டரில் வெங்காயம் உரித்து எல்லோரையும் அழ வைத்து வீட்டுக்கு அனுப்பும் பாலாவை நான் எப்படி புரிந்து கொண்டு உள்ளேன் என்று பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் ...

 

மனோதத்துவத்தில் நேர்மறை வலியுறுத்தல்/வலுவூட்டல்"Positive reinforcement" என்று ஒரு பதம் ஒன்று. விலங்கோ மனிதரோ எந்த செய்கைக்கு தொடர்ந்து நேர்மறை விமர்சனங்கள்/பாராட்டுகள் /பரிசுகள்/நல் விளைவுகள் ஏற்படுகிறதோ அந்த செய்கையை செய்ய அவைகளின்/அவர்களின் மூளையால் தூண்டபடுவர்கள் என்பதுதான் அந்த பதத்தின் பின் உள்ள பொருள். இதன் அடிப்படையில் எவரை பாராட்டும் போதும் நாம் எதற்காக அவரை பாராட்டுகிறோம், அவரின் எந்த செய்கை/செயல் நமக்கு பிடித்தது, எதனால் பிடித்தது என்று அவருக்கு புரியுமாறு சொல்லவேண்டியது அவசியம். அப்படி சொன்னால்தான் அவர்கள் அந்தசெயலின் விளைவான நேர்மறை வலியுறுத்தலின்பால் ஈர்க்கப்பட்டு அந்தசெயலை தொடர்ந்து செய்ய முயல்வார்கள். நாம் அவர்களுக்கு புரியாதவன்னம் சொல்லி விட்டால் என்ன நிகழும் என்பதற்கு தமிழ் சினிமாவில் "வாய் இல்லை என்றால் நாய் கூட உங்கள மதிக்காது" என்று சொல்ல தகுந்த வகையில் ஊரை ஏமாற்றி கொண்டு இருக்கும் தமிழ் சினிமா இயக்குனர்கள் சாட்சி.


 

கமலஹாசன் தொடக்க காலத்தில் மாறுவேட கோமாளித்தனங்களில் ஈடுபட்ட போது கமலை போன்ற ஒரு நடிகன் இனிமேல் யானைகளை போல் 21 மாதத்தில் பிறந்து வந்தால் தான் உண்டு என்று சொல்ல போக அது இன்னும் 100 வருடம் ஆனாலும் மறக்க முடியாத "தசாவதாரம்" என்னும் கோமாளித்தனத்தில் வந்து விட்டது. இது தவறான நேர்மறை வலியுறுத்தலால் நிகழ்ந்த அவலம். மொக்கை படங்களை சீரியஸ்சாக எடுத்து கொண்டிருந்த thank you jesus பிரபு சாலமன் "மைனா" எடுத்த போது கோபமும், கோபத்தில் எடுக்கும் முடிவுகளும் இட்டு செல்லும் மோசமான விளைவுகளை தெரிந்தோ தெரியாமலோ நல்ல கதை ஆக்க, அது வெற்றியும் அடைய, விமர்சனங்களில் மிக கடுமையாக உழைத்து அவர் காடுகளிலும் மலைகளிலும் படமாக்கி உள்ளார் என்று சொல்ல போக, பிரபு சாலமன் "மிக கடுமையாக உழைத்து அவர் காடுகளிலும் மலைகளிலும் படமாக்கி உள்ளார்" என்ற ஒரு விமர்சனத்தை மட்டுமே தனது படைப்புக்கான நேர்மறை வலியுறுத்தல் என்று அவர் எடுத்து கொண்டதன் விளைவுதான் அவரது அடுத்த படத்தில் கதை கருவையும், கதையையும் இரண்டாம் பட்சமாக்கிவிட்டு காடுகளையும், மலைகளையும், அருவிகளையும், யானை ஒன்னுக்கு போவதையும் பார்த்து பார்த்து அவர் எடுத்த "கும்கி". இது நேர்மறை வலியுறுத்தல் தவறாக புரிந்து கொள்ள படும்போதும் அல்லது புரியாதவன்னம் சொல்லப்படும் போது நிகழும் அவலம். இப்படி நேர்மறை வலியுறுத்தல் தவறானதாக, புரிந்து கொள்ள முடியாததாக போனதால் நிகழ்ந்த ஒரு முக்கியமான தமிழ் சினிமாவின் சாபம் மற்றும் அவலம் தான் அர்னோல்ட் பாலா.


 

பாலா. இவரை பற்றி விமர்சகர்கள் முக்கியமாக சொல்வது என்ன? அழுத்தமான படங்களை இயக்குபவர் , யாரும் நினைத்து பார்க்காத கதாபாத்திரங்களை தனது படத்தில் உலவ விடுபவர், சமுகத்தில் புறக்கணிக்கபட்ட கடைநிலை மனிதர்களின் வாழ்வை சொல்பவர், வணிக ரீதியாக எந்த சமரசமும் செய்து கொள்ளாத உன்னத கலைஞன். இது எல்லாம் பாலாவிற்கு சேதுவில் தொடங்கி இப்பொழுது வந்து உள்ள "பரதேசி" வரை அவருக்கு கிடைத்துள்ள நேர்மறை வலியுறுத்தல். ஆனால் உண்மையில் பாலா என்ற இயக்குனர் மேல் சொன்ன வரிகளுக்கு தகுதி ஆனவரா என்றால் "கிடையாது" என்பது எனது ஆணிதரமான வாதம்.அவருடைய படங்களின் உள் கருத்துகளை மிக விரிவாக அவை எவ்வளவு பொருக்கிதனத்துடனும் சுத்தமாக அறிவோ பொறுப்புணர்ச்சியோ இல்லாமல் கையாளபட்டுள்ளன என்று ஒரு 100 பக்கம் எழுத ஆசைதான். ஆனால் தமிழ் தட்டச்சு தெரியாமல் கூகுளின் உள்ளீட்டு கருவியின் உதவியுடன் தட்டச்சு செய்வதாலும் நாம் ஊதும் சங்கு யார் காதில் விழ போகிறது என்று நன்றாக தெரிவதாலும் எனக்கு அவருடைய "படைப்பின்" மேல் இருக்கும் முக்கியமான குற்றச்சாட்டுகளை மட்டும் முன் வைக்கிறேன்.


 

நமது தமிழ் சினிமாவில் அழுத்தமான படங்கள் என்று சொல்லப்படும் படங்களின் பொது தன்மை என்ன? ஒன்றே ஒன்றுதான். படம் முடியும் போது பார்வையாளன் அழ வேண்டும். இதுதான் அழுத்தமான சினிமாவிற்கான அடையாளமா என்றால் நிச்சயமாக இல்லை. இதை அளவு கோளாக வைத்து பார்த்தால் "Life is beautiful" போன்ற அதி உன்னத திரை படங்கள் கூட வெறும் நகைச்சுவை படங்கள் என ஆகிவிடும்.அழுத்தமான படம் என்பது பார்வையாளனுக்குள் தீவிரமான கேள்விகளையோ அல்லது தீவிரமான முடிவுகளையோ அல்லது தீவிரமான விவாதத்தையோ அல்லது பெரும் மன நிறைவையோ அளிக்கும். சுருக்கமாக சொன்னால் நீங்கள் பார்த்த அந்த ரெண்டு மணி நேரப்படம் என்பது உங்கள் வாழ்கையின் அறமாக நீங்கள் அதுவரை கொண்டிருந்த நம்பிக்கையில் ஒரு நல்ல சலனத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். பாலாவின் எந்த படமும் என்னை பொறுத்த வரையில் அழுத்தமான படங்கள் கிடையாது. எப்படி ஒரு murder mystery genre படங்களில் திட்டமிட்டு பார்வையாளனை திரைகதை ஆசிரியர் ஏமாற்றி படத்தின் முடிவில் கடலை பொரி வித்து கொண்டிருந்த ஒரு கதாபாத்திரம்தான் கொலையாளி என்று சொல்லி முடியுமோ அதே போல அர்னோல்ட் பாலாவின் எல்லா திரை படங்களும் பார்வையாளனை அழ வைக்க வேண்டும் என்ற ஒரே லட்சிய வெறியோடு நகர்வதை காணலாம். இது ஒரு நிஜ கலைஞனால் ஒரு போதும் செய்யவே முடியாத விரும்பாதா படைப்புக்கு எதிரான துரோகம். இதை விளக்குவதை மிகவும் கடினமானதாக உணர்கிறேன். ஒரு உதாரணம் தருகிறேன் ."முள்ளும் மலரும்" படத்தின் முடிவில் உங்களுக்கு துளிர்க்கும் கண்ணீருக்கும் நீங்கள் "பிதாமகன்" அல்லது "சேது" வின் முடிவில் சிந்திய கண்ணீருக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. முந்தய கண்ணீர்  ஒரு நிஜமான  உன்னத கலைஞன் தன் படைப்புக்கு நேர்மையாக நாம் அதுவரை அதிகம் கவனித்திராத/உணராத/அறியாத நமது ஒரு நுண் உணர்வை தொடும் போது நிகழ்வது. இரண்டாவதாக சிந்திய கண்ணீர் என்பது ஒரு தற்குறி "நல்ல படம் என்பது படம் முடிந்து போபவர்கள் மூக்கை சிந்தி கொண்டு போக வேண்டும்"  என்ற நம்பிக்கையில் ஒரு தேர்ந்த தொடர் கொலைகாரன் கொலையை திட்டமிடுவதை போல் திட்டமிட்டு பார்வையாளனை அழ வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கலையின் எந்த சாத்தியங்களையும் பரிசீலிக்காமல்,ஏற்று கொள்ளாமல் கடைசி இருபது நிமிடங்களை கடத்தி இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அவருடைய ஏதாவது ஒரு படம் முடிந்து வெளியே வந்தவன் தான் கொண்ட நம்பிக்கையில்,அறத்தில் எதாவது ஒரு நல்ல மாற்றத்தை,சலனத்தை,மனிதம் குறித்த நம்பிக்கையை அடைந்து இருப்பான் என்று சொல்ல முடியுமா??? மற்றவர்களுக்காக நான் பேச முடியாது. ஆனால் அவருடைய ஒரு படத்தில் கூட எனக்கு அது நிகழ்ந்ததில்லை. மாறாக பெரும் அயர்ச்சியையும் வெறுப்பையும் தான் விதைத்தது. இது அந்த படைப்பை உருவாக்கியவனின் பெரும் தோல்வி ( அவருடைய படங்களை படைப்பு என்று சொல்வது எனக்கு சங்கடமாக உள்ளது..ஆனால் என்ன செய்வது.நம் ஊரில் புண்ணாக்கு விய்ப்பவன், குண்டூசி விய்ப்பவன் எல்லாம் கலைஞரகள் , படைபாளிகள்..). 


யாரும் நினைத்து பார்க்காத கதாபாத்திரங்களை தனது படத்தில் உலவ விடுபவர், சமுகத்தில் புறக்கணிக்கபட்ட கடைநிலை மனிதர்களின் வாழ்வை சொல்பவர் என்று  "பாராட்டப்படும்"  அர்னோல்ட் பாலாவை பாராட்டி பேசுபவர்கள் பல விசயங்களை தெரிந்தோ தெரியாமலோ கவனிக்க மறுகின்றனர்.

 

அர்னோல்ட் பாலாவின் "சேது" படம் வரும் வரையில் நான் பார்த்த எந்த திரைப்படங்களிலும் கதையின் நாயகன் நாயகியை மிரட்டும் தொனியில் காதலித்து நான்  பார்த்ததில்லை. "சேது"வுக்கு முன் வந்த எல்லா படங்களிலும் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் ஊடல் பின் அது காதலாதல் அல்லது கதாநாயகனை கதாநாயகி துரத்தி துரத்தி காதலிக்க ஒரு கட்டத்தில் கதாநாயகனும் இறுக்கம் தளர்ந்து காதலிக்க தொடங்குதல் அல்லது கதாநாயகன் கதாநாயகியை வெறிதனமாக காதலித்தும் அவள் அதை ஏற்று/ புரிந்து  கொள்ளாமல் போக கதாநாயகன் தண்ணியை போட்டு விட்டு தாடி வளர்த்து கொண்டு இரவில் தூங்கி கொண்டிருக்கும் நாய்களை பாட்டு பாடி தொந்தரவு செய்தல் என்பதை சுற்றியே இருந்தது(சுத்தமாக பெண்களை மதிக்காத, பெண் பார்க்கும் படலம் என்னும் அயோக்கியத்தனம் நடக்கும் நம் சமுகத்தில் வெளிவந்த காதலை பற்றிய படங்களில் பெண்ணின் விருப்பம் பிரதானமாக பார்க்க பட்டத்தின் நல்ல முகைநரனை இங்கு கவனிக்கலாம்).இப்படி இருந்த சூழலில்தான் "சேது" வருகிறது. அர்னோல்ட் பாலாவின் பள்ளி கல்லூரி பருவம் எப்படி இருந்தது என்று எனக்கு தெரியாது. ஆனால் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று அவர் ஆசை பட்டார் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒன்றுக்கும் லாயக்கி இல்லாமல் ஊரை மேய்ந்து கொண்டிருக்கும் ஒருவன் அவனைவிட அழகிய பெண்ணை( கல்லூரி போகும் பெண்ணாய் இருத்தல் நலம்) கன்னத்தில் அப்பி, முடியை பிய்த்து ஆட்டி, எட்டி உதைத்து, குட்டிகரணம் போட சொல்லி லவ் செய்கிறான். இவனது காதலை அந்த பெண்ணும் நாளடைவில் புரிந்து கொண்டு காதலிக்க தொடங்குகிறாள். அல்லது ஐரோப்பியர்களை போல் சிவப்பு கலர் அல்லது மஞ்சள் நிறத்தில் முடியுள்ள,மனிதர்க்கும் தவளைக்கும் பிறந்த ஒரு வினோதமான ஜந்துவை போல இருக்கும் , ஒருவனை ஒரு பெண் "ஐயோ பாவம்" என்று சில்க் ஸ்மிதா போல தனக்குள் சொல்லி கொண்டு காதலிக்க தொடங்குவது. அர்னோல்ட் பாலாவின் எல்லா படத்தில் வந்த காதல் காட்சிகளும் இதை சுற்றியே அமைந்திருப்பதை காணலாம். இது அர்னோல்ட் பாலாவின் வாழ்கையில் நடந்தது கிடையாது. அவர் காண்பிப்பதை போல் பொருக்கி தனம் செய்யும் எவனையும் அவர் காண்பிப்பதை போன்ற பெண்கள் விரும்ப கிட்டத்தட்ட வாய்ப்பே இல்லை என்றே சொல்லலாம் அல்லது அவர்கள் விரும்பவே கூடாது என்று சொல்லலாம் . ஆனால் அர்னோல்ட் பாலா தன் வாழ்கையில் நிகழ மறுத்த அதை( அதாவது ஒரு பொறுக்கியின் காதலை ஒரு பெண்  ஏற்றுக்கொண்டு  அவனை காதலிக்க தொடங்குவது) தனது திரைப்படங்களில் நிகழ்த்தி பார்த்து கொண்டார். இது ஒரு மிக மோசமான விளைவை தமிழ் சினிமாவிலும் தமிழ் சூழலிலும் ஏற்படுத்தியது. "சேது" வரும் வரையில் பெண்களை தொடர்ந்து சென்று காதலிக்குமாறு தொந்தரவு செய்பவன் கெட்டவனாகவும் அவனை தூக்கி போட்டு மிதிப்பவன் நாயகனாகவும் இருந்த template மாற்ற பட்டு ஒரு பெண்ணை தொடர்ந்து சென்று காதலிக்குமாறு தொந்தரவு செய்பவன் நாயகனாகவும் ("புரிஞ்சிக்கோ..மனசு வலிக்குது") அதை தட்டி கேட்பவன் வில்லனாகவும் ஆனது( இந்த template சென்னையை நியூயார்க் மாதிரி காட்டும் அதாவது ஹாலிவுட் பாணியில் படம் எடுக்கும் கவ்தம் ஓனான் சீ மேனன் இயக்கிய "விண்ணை தாண்டி வருவாயா" வில் கூட பார்க்கலாம்). ஏன் ஒரு பெண்ணை தொடர்ந்து சென்று காதலிக்குமாறு மிரட்டுவதை, சீண்டுவதை காண்பித்தால் என்ன தவறு என்று கேட்டால் மாபெரும் தவறு என்பதுதான் பதில்.பெண்களை முலைகள் முளைத்த யோனிகளாய் பார்க்கும் சமுகத்தில் இது போன்ற கருத்தாக்கங்கள் மிக மிக மிக தவறானவை. கே.ஸ்.ரவிக்குமார், பேரரசு போன்றவர்கள் இதை செய்தால் சின்ன பசங்க என்று ஒதுங்கி போகலாம். "பாஸ் அவரு ஒரு கலைஞன் பாஸ்..ஒன்லி உலக சினிமா மட்டும்தான் எடுபாப்ள" என்று சொல்லி கொண்டு இருக்கும் போது அர்னோல்ட் பாலா இது போன்ற சில்பான்ஸ் கில்பான்ஸ் வேலைகளை பண்ணுவதுதான் கோபமூட்டுகிறது. ஏனென்றால் சமிபத்தில் வினோதினியின் மீது ஆசிட் அடித்தவனின் மன நிலையும் இது போன்ற கருத்துகளை  பரப்புவர்களின் மன நிலையும் ஒன்றுதான். அதாவது ஒரு பெண் வேண்டாம் என்று சொன்னால் கூட "அவள் புரிந்து கொள்ளாமல் சொல்கிறாள் அவளுக்கு புரிய வைத்து அவள் வாழ்வில் ஒளியேற்றுவது நமது கடமை" என்று உலகின் எந்த நாட்டிலும் ஆண்களுக்கு தோன்றாத கருத்து இவர்களுக்கு தோன்றுவதும் அதை காதலென்று சொல்வதும் .

 

 

அர்னோல்ட் பாலாவின் திரைப்படங்களில் இழையோடும் மேல் சாதி ஹிந்துத்துவ நுண் அரசியல் மிக நுட்பமானது. "மதுரை வீரன்" திரைபடத்தில் எப்படி நிஜத்தில் அருந்ததியர் சமூகத்தில் பிறந்த  மதுரை வீரன் ,படத்தில் மேல்சாதியில் பிறந்த ஆனால் அருந்ததிய சமூகத்தில் வளர்ந்தவராக காடப்பட்டோரோ அதே போல்தான்  ஐரோப்பியரை ஒத்த நிறத்தில் முடிகொண்ட(ஒருவேளை ஐயர்லாந்தில்  இருந்து  தேனி பக்கம் சுற்றுலா வந்த ஒருவர்தான்  சித்தனின் அப்பாவா என்று அர்னோல்ட் பாலாதான் விளக்க வேண்டும் )  சித்தன் இடுகாட்டை தாண்டி செல்லும் "யாரோ" ஒரு தாயிற்கு பிறந்து வெட்டியானாக மாறுகிறான். அங்கு இருக்கும் பெரியவரும் "தம்பி நீ சிவனின் குழந்தை" என்கிறார் . ஏன் சித்தன் ஒரு வெட்டியான் சாதியில் தான் பிறந்தவர் என்று நேரடியாக சொன்னால் அவருடைய உலகத்தரமான பிதாமகன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு தேர்ந்தெடுக்கபடாது என்ற நெருக்கடியா ? அல்லது சித்தனின் சாதி அடையாளம் தெளிவாக புரியுமாறு வைத்தால் அவன் சிவன் குழந்தை என்று சொல்லும் வசனம் வீழ்ச்சி அடைந்து விடுமா?  இந்த மன்னர்கள் பண்ணையார்கள் ஜமின்தார்களை போன்ற திருட்டு பயல்களை போல் ஜனநாயக,சமத்துவத்திற்கு எதிரானவர்கள் யாரும் இருந்து இருக்க முடியாது. ஏதோ அப்போது இருந்த சமூக சூழலில் இந்த மண்டயன்கள் இருந்து விட்டு போனார்கள் என்று விட்டு தொலைக்கலாம். ஆனால் அர்னோல்ட் பாலா "நந்தா" படத்தில் சுதந்திர இந்தியாவில் மன்னர்களும் ஜமின்தார்களும் நாட்டின் நலன் கருதி தாங்களே முன்வந்து தங்கள் நிலம் சொத்துகளை எல்லாம் நாட்டிற்க்கு அர்பணித்த தியாகிகள்  போலவும், கல்வி சுடர் ஏற்றும் கல்வி தந்தைகள்  போலவும், தமிழ் இன  உணர்வாளர்களாகவும், அகதியாய் வரும் ஈழ தமிழர்களை  எல்லை தாண்டி படகில் போய் மீட்பவர்களாகவும்(பார்ரா) காண்பிப்பதில் உள்ள அயோக்கியத்தனம் மன்னிக்க முடியாதது. ராஜ்கிரண் கதாபாத்திரம் பேசும் வசனங்களும்("நாச்சியா.....") அந்த கதாபாத்திரத்திற்கு  அர்னோல்ட் பாலா முதலில் "நடிகர் திலகம்"  கணேசனை அணுகியதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  -- தொடரும் 


 

பி.கு :

பன்னி மேய்பவனை "நல்ல ஆயன்" என்று சொல்லகூடாதா என்று கேட்பவர்களுக்கு....பன்னி மேய்ப்பதில் எந்த தவறோ இழிவோ கிடையாது...நான் சொல்ல வருவது ஆடுகளை மேய்ச்சல் நிலத்திற்கு அழைத்து சென்று மேய விட்டு நீர் பருகவிட்டு பாதுகாத்து திரும்ப அழைத்து வரும் சிரமம் பன்னி மேய்ப்பதில் இருக்காது...நல்ல குட்டையாக பார்த்து விட்டு விட்டால் பன்றிகளே மற்றவற்றை பார்த்து கொள்ளும்....

 

3/1/13

உன்னை மறப்பதற்கென என்னிடம் உள்ள திட்டங்கள்
மது அருந்தும் போது 
வாந்தி வரும் வரையில் 
எதுவும் பேசாமல் குடித்து விட்டு 
உடனே தூங்கி விடுவது.


புகை பிடிக்கும் போது 
கேன்சரை பற்றி மட்டும் சிந்தித்து கொண்டிருப்பது.


உனது செல்போன் எண்ணை மீண்டும் மீண்டும் 
மூன்றால் பெருக்கி
ஏழால் வகுப்பது.


வழி தவறி கூட 
உனது முக நூல் பக்கம் போகாமல் இருப்பது.


உன் கூந்தலின் நினைவு வரும் பொழுது 
பச்சை நிறத்திலான எதையாவதை
பத்து பதினைந்து நிமிடம் உற்று நோக்குவது.


மூளையில் உனது நினைவுகள் 
படர்ந்துள்ள பகுதிகளை
லேசர் கற்றை கொண்டு பொசுக்குவது.


உனது வாசம் வீசாத 
ஒரு பாலைவனத்திலோ, பனி பொழியும் மலையிலோ
இரவில் நிலவும்,நட்சத்திரங்களும் தெரியாவண்ணம்
பதுங்கு குழி அமைத்து தங்கி விடுவது.


உன்னோடான நாட்கள் புதைந்த 
ஆங்கில காலண்டரை கைவிட்டு
சீனத்து காலண்டரை பின்பற்ற துவங்குவது.


ஒரு கணமும் நீங்காமல் 
என் தாயோடு இருப்பது.


கால எந்திரத்தில் ஏறி 
பின்னோக்கி ஓடி
விந்தனுவாகி பின் புரதமாகி
ஒரு இலையிலோ அல்லது
ஒரு அழகிய கருப்பு முயலின் காதிலோ உறைந்து விடுவது.


எனதிந்த திட்டங்களை 
வரிசையாய் தாளில் எழுதி 
கவிதை என்று சொல்லி 
யாரிடமும் பகிராமல் இருப்பது.


                                             --- ஜெயசீலன்