3/1/13

உன்னை மறப்பதற்கென என்னிடம் உள்ள திட்டங்கள்
மது அருந்தும் போது 
வாந்தி வரும் வரையில் 
எதுவும் பேசாமல் குடித்து விட்டு 
உடனே தூங்கி விடுவது.


புகை பிடிக்கும் போது 
கேன்சரை பற்றி மட்டும் சிந்தித்து கொண்டிருப்பது.


உனது செல்போன் எண்ணை மீண்டும் மீண்டும் 
மூன்றால் பெருக்கி
ஏழால் வகுப்பது.


வழி தவறி கூட 
உனது முக நூல் பக்கம் போகாமல் இருப்பது.


உன் கூந்தலின் நினைவு வரும் பொழுது 
பச்சை நிறத்திலான எதையாவதை
பத்து பதினைந்து நிமிடம் உற்று நோக்குவது.


மூளையில் உனது நினைவுகள் 
படர்ந்துள்ள பகுதிகளை
லேசர் கற்றை கொண்டு பொசுக்குவது.


உனது வாசம் வீசாத 
ஒரு பாலைவனத்திலோ, பனி பொழியும் மலையிலோ
இரவில் நிலவும்,நட்சத்திரங்களும் தெரியாவண்ணம்
பதுங்கு குழி அமைத்து தங்கி விடுவது.


உன்னோடான நாட்கள் புதைந்த 
ஆங்கில காலண்டரை கைவிட்டு
சீனத்து காலண்டரை பின்பற்ற துவங்குவது.


ஒரு கணமும் நீங்காமல் 
என் தாயோடு இருப்பது.


கால எந்திரத்தில் ஏறி 
பின்னோக்கி ஓடி
விந்தனுவாகி பின் புரதமாகி
ஒரு இலையிலோ அல்லது
ஒரு அழகிய கருப்பு முயலின் காதிலோ உறைந்து விடுவது.


எனதிந்த திட்டங்களை 
வரிசையாய் தாளில் எழுதி 
கவிதை என்று சொல்லி 
யாரிடமும் பகிராமல் இருப்பது.


                                             --- ஜெயசீலன்

2 comments: