4/4/14

எங்களின் கோமாதா

தேவருக்கு தீராமல்
அமுது படைக்கும் 
உனது கோமாதா போல் அல்லாமல் 
தலித்துகள் எங்களுக்கு தானே உணவாகிறாள் 
எங்களின் கோமாதா 

உழைக்காமல் 
அடுத்தவன் உழைப்பை
காலம் காலமாய் சுரண்டி 
தின்று கொழித்த உனக்கு 
பாலும் நெய்யும் தேவையா என்று 
என்றுமே கேட்டதில்லை எம் மக்கள் 

கஞ்சியும் கூழும் குடித்து 
சான் வயிற்றில் கால் வயிற்ரை ரப்பி 
கூலிக்கு மாரடித்து மாரடித்து 
வறுமையில் மார் எலும்பு புடைத்த எம்மக்கள் 
250 ரூபா போட்டு 
ஒரு கிலோ கறியெடுத்து சமச்சி 
ஆசயா கோமாதா துண்டொன்ன 
வாயில் வைக்க போவயில 
தாயோளி நீ மூடிகிட்டு இரு.

4/3/14

மறாநாளு எங்க சேரி பக்கம் வா

உங்க ஆளுல 
4,5 பேரு சாக்கட அடப்பெடுக்க 
சாக்கட குழியில இறங்கி 
மூச்சடச்சு சாவட்டும் 

பஸ்ஸ்டாண்டு ரயில்வே ஸ்டேஷனு 
மூத்திர சந்து எல்லாம் 
தின கூலிக்கு 
கண்டதையும் கைய வச்சு அள்ளட்டும்
கூட்டி பெருக்கட்டும்

அடிச்சு பேசி
கொறச்சு குடத்த காசுக்கு
ரா பூரா உக்காந்து
சுடுகாட்டுல பொணம் வேக வைக்கட்டும்

குடுக்குற பிச்ச காசு 30 ரூவாக்கு
முடி வெட்டி முடிச்சப்பறம்
மயிராண்டி
அக்குள தூக்கி காட்டுனா
அக்குள் முடிய செரைகட்டும்

எங்க பிஞ்ச செருப்ப தெக்கட்டும்
அழுக்கு துணிய வெளுக்கட்டும்

நீங்க சாவுக்கு அடிக்கிறத
எங்க சபால வந்து வாசின்னு சொல்லட்டும்
அவங்க சபால வாசிக்கிறத தூக்கினு வந்து
எங்க தெருல சாவு விழுந்தாஅடிக்கட்டும்

இது எல்லாம் நடந்தா
மறாநாளு எங்க சேரி பக்கம் வா
சாவுகாசமா துன்னுட்டு
ஒக்காந்து பேசலாம் மயிரு இடஒதுக்கீடு
வேணுமா வேணாமானு 

அவள் கூந்தலின் பாடல்கள் 20

உன் கூந்தலை
நீி கொண்டையிட்ட பிறகு  
அந்த மர்மத்தின் முடிச்சு 
அவிழாமலே போனால்தான் என்ன 

உன் கூந்தலை 
நீ பின்னலிட்ட பிறகு 
நான் எவ்வளவு ஆழத்தில் 
குதித்தால் தான் என்ன 

உன் கூந்தலை 
நீ விரித்து விட்டபிறகு 
தொலைந்து போய் 
கண்டுபிடிக்கபடாமலே போனால்தான் என்ன 

அவள் கூந்தலின் பாடல்கள் 19

நீ ஆயிரம்தான் சொல் 
உன் கூந்தலென்பது 
வெறும் கூந்தல் மட்டும்தான் 
என்று நான் எப்படி நம்புவது?

அம்பேத்கரின் சிலையை உடை

அம்பேத்கரின் சிலையை 
உடை, சிதை 

காலணிகளை கோர்த்து 
மாலையாக்கி அதன் மீது இடு

கழிவுகளை கரைத்து அதன் 
மீது ஊற்று 

இவையாவையும் மீண்டும் மீண்டும் 
நீ செய் 

எமது தலைவன் யாரென்று 
எம்மக்களுக்கு விரைந்து புரியட்டும்
எம் விடுதலைப்புரட்சியின் கோபம் 
வந்து ஒரு நாள் 
உன் வீட்டு கதவை தட்டட்டும்.

3/27/14

அவள் கூந்தலின் பாடல்கள் 18


ஆடாமல் அசையாமலிரு   
காற்று உன் கூந்தலை வரைந்து கொண்டிருக்கிறது

3/24/14

கூலிங் கிளாஸ், ஜீன்ஸ், t ஷர்ட் அணிகிறேன்

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் 
எமது எல்லாமும் 
வஞ்சிக்கபட்டதின், சுரண்டபட்டதின்,
மறுக்கபட்டதின், பறிக்கபட்டதின்,
இழிவுபடுத்தபட்டதின் வலி 
எனது கண்களில் பெருங்கோபமாய் 
நீல நிற தீயென 
கனன்று எரிகிறது

அம்பேத்கரும் மால்க்கம் x'ம்
படித்த என் கண்கள்
எப்போதும் எமது எதிர்கால திட்டத்தை
தன்னுள் சுமந்தேயிருக்கிறது

எதிரிகளை நம்பிக்கையோடும் தோழமையோடும்
பார்க்காமலிருக்க
எனது கண்களுக்கு போர் பயிற்ச்சி
நடந்து கொண்டிருக்கிறது

இவையாவையும் உன்னிடம்
மறைக்கத்தான்
நான் கூலிங் கிளாஸ் அணிந்தேன்

புடம்போட்ட இரும்பென இறுகிய
எமது மார்பு
ஓயாமல் உழைத்திருந்த
எம் மூதாதையரின் D.N.A தந்த வரம்

புரதமும் இரும்பும் நிறைந்த
மாட்டிறைச்சி விருந்துண்டு
எமது தோளும் தசைகளும்
தினவெடுத்திருகின்றன

காடு மேடெல்லாம்
ஓடி களைத்து ஓய்வில்
பறையிசைக்கு ஆடி களிக்கும்
எமது கால்களை கண்டால்
ஸ்பானிய குதிரைகளும் மிரளும்

இவையாவையும் எடுப்பாய்
காட்டத்தான்
நான் ஜீன்சும் t ஷர்ட்டும் அணிந்தேன்

நீ
சாதிக்கு பெற்று
சாதிக்கு வளர்த்த
உன் சாதி பெண்
எனக்கு சக மனுஷி
எனது தாய்
எனது தோழி
எனது காதலி

கண்டா
ஓலி
ஆமாடா
நான் கூலிங் கிளாஸ், ஜீன்ஸ்,
t ஷர்ட் அணிகிறேன்
உன் சாதி பெண்களை கவர
வந்து உன் தெருவில் நிற்கிறேன்.

குறுஞ்செய்திகள்

மேல் நோக்கி நீண்ட 
உன் நெற்றிபொட்டு 
உனது 
எந்த சாலையின் மைல் கல்?
 

3/22/14

அழகு by Partaw Naderi


உனது குரல் பசுமையான தொலைதூர கிராமத்திலிருந்து 
வந்து போகும் ஒரு பெண்ணை போலிருக்கிறது .

உயரமாய் அழகாயிருக்கும் அவள் உடற்கட்டை 
மலைகளிளிருக்கும் பைன் மரங்கள் அறிந்திருகின்றன.

அவள் அந்தியில் நிலவொளியின் குடையில் 
தேவலோகத்தின் நீர் ஊற்றில் தன் உடல் அலம்புகிறாள் 

அவள் வைகறையில் வீட்டிற்க்கு பரிசுத்தமான ஒளியை
குடுவையில் கையில் ஏந்தி வருகிறாள்.

அவள் சூரியனின் நதியை
ஒவ்வொரு மிடறாய் அருந்துபவளாயிருகிறாள்.

உனது குரல் பசுமையான தொலைதூர கிராமத்திலிருந்து
வந்து போகும் ஒரு பெண்ணை போலிருக்கிறது .

அவள் சிற்றோடைகளின் பாடல்களை
பிரதியெடுத்து காற்சலங்கை அணிந்தவள்

அவள் மழையின் முனுமுனப்பை
சுழித்து காதனியாய் அணிந்தவள்

அவள் அருவிகளின் பட்டிழைகளை நெய்து
கழுத்தில் அட்டியல் அணிந்தவள்

இவையாவும் சூரியனின் தோட்டத்தில்
காதலின் வெவ்வேறு வண்ணங்களில் மலர்ந்து அழகாக்குகிறது

ம்ம் நீயும்
உனது குரலுக்கு குறைவில்லாமல் அழகாயிருக்கிறாய்

எத்தனையோ மெட்டுகளில் இளையராஜா என்னை தொட்டதுபோலஒவ்வொரு நிலபரப்புக்கும், ஒவ்வொரு மொழி குழுவினருக்கும் அவர்கள் பேசும் மொழி, உண்ணும் உணவு, வாழும் பூகோளம், அவர்களை சுத்தி தினமும் கேட்கும் சத்தங்கள், அவர்களோடு வாழும் பறவைகள் விலங்குகள், அவர்கள் தினமும் பார்க்கும் வண்ணங்கள் மற்றும் இன்னும் பல புற காரணிகள் கொண்டு அவர்களுக்கு என்று ஒரு தாள கட்டு உருவாகும் போல.

இளையராஜாவின் 80ல் தொடங்கி 90களின் இறுதி வரை அவர் இசையமைத்த பாடல்களில் குறிப்பாக கிராமிய பாடல்களில் உள்ள தாளம் மிகுந்த தனித்துவமானது. ஏன் தனித்துவமானது என்றால் அது பாடல் என்பதை தாண்டி தமிழ் நிலபரப்போடு நம்மை ஒன்ற செய்யும் தன்மை உடையது. அதாவது அந்த பாடல்களை கேட்கும் போது நாம் இயல்பிலேயே ஒரு அழகிய தமிழ் அடையாளம் கொண்ட ஒரு முகத்தையோ ஒரு தமிழ் பிரதேசத்தின் காட்சியையோ அல்லது தமிழ் மக்களோடு தொடர்புடைய ஒரு மகிழ்வான தருனத்தையோ நினைஊட்டுவதாய் இருக்கும். இதை இளையராஜா எப்படி தன் பாடல்களில் நிகழ்த்தி காட்டினார் என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் இளையராஜாவின் பாடல்களை ரசிக்கும் கொண்டாடும் என் போன்றோருக்கு அவரது இசை comfort food போல comfort musicகாக உள்ளது. நான் comfort music என்று ஏன் சொல்கிறேன் என்றால் அவரது இசை இனிமையான மண் சார்ந்த ஞாபகங்களை கிளறி மனதிற்கு ஒரு ஆறுதலும் பாதுகாப்பும் அளிப்பதாக இருக்கிறது.

இளையராஜாவுக்கு அடுத்து வந்த இசை தலைமுறையினர் ரஹ்மான் யுவன் ஹாரிஸ் போன்றோருக்கு இந்த தாளம் கைவரவில்லை அல்லது தெரியவில்லை அல்லது அவர்களுக்கு பிடிக்கவில்லை. மேற்கத்திய துள்ளல் இசை மீது அவர்களுக்கு இருந்த விருப்பமும், நகரத்தில் பிறந்து வளர்ந்த சூழலும், "நவீன" "நாகரீக" இசை மீதான புரிதலும் அவர்களை இளையராஜாவின் இசையில் இருந்த அந்த தாளத்தில் இருந்து அவர்களை வெகுதூரம் விலகி செல்ல வைத்தது. அவர்கள் அற்புதமான பல பல பாடல்களை தந்து இருந்தாலும் அந்த பாடல்கள் நிஜத்தில் தமிழிசை பாடல்கள்தான என்ற உணர்வு எப்பொழுதும் உண்டு.

திடீர் இன்ப அதிர்ச்சியாக இப்பொழுது வந்து இருக்கும் புதியதலைமுறை இசையமைபாளர்கள் பலர் getting back to the roots என்பதை போல திரும்பவும் தமிழ் இசைக்கான தாளத்தை இளையராஜா விட்ட இடத்தில் இருந்து மீட்டு எடுக்க நம்பிக்கை ஊட்டும் விதத்தில் தேட தொடங்கி இருகிறார்கள். குறிப்பாக இமான்(ஒன்னும் புரியல - கும்கி), சந்தோஷ் நாராயணன்(பொட்ட புள்ள - குக்கூ) போன்றோர். எனக்கு இது பெரு மகிழ்ச்சியாக உள்ளது.

இளையராஜாவின் பாடல்களில் உள்ள தாளத்தை இசைரீதியாக இசை தெரியாத என்னால் விளக்க முடியவில்லை. ஆனால் அவர் ரொம்பவும் deliberate ஆக ஆனால் மிக இயல்பாக ஒரு ethnic moodஐ உருவாக்கி அதை பின்னணி இசை சேர்ப்பின் மூலம் மிக விஸ்தாரமாக்கி நிறைய நிரப்ப படாத இடங்களையும் தந்து கேட்பவனுக்கு அவனது கனவுலகத்தில் நுழைய போதுமான வாய்ப்பும் தந்து அடங்கொக்க மக்க..என்னுமோ போங்க. பெருங்கலைஞன் மண்ணின் மைந்தன். ராஜாவின் இசை முழுதாய் புரிந்து கொள்ள தமிழ் பெண்கள் தமிழ் நாட்டின் சூரியின் நிலவு தமிழ் நாட்டின் ஆறுகள் மலைகள் தமிழ் நாட்டின் காடுகள் இதை எல்லாவற்றையும் குறைந்த பட்சம் பார்த்தாவது இருக்க வேண்டும்.

இப்பொழுது இதை எழுத தூண்டிய இரண்டு பாடல்கள்

https://www.youtube.com/watch?v=hrzVfkRQZa0

https://www.youtube.com/watch?v=Z6NA0LxhY6s

2/22/14

போல

உன்மேல் ஈர்க்கபடுவது 
அவ்வளவு இயல்பாகயிருந்தது 

திங்கட்கிழமை காலை 
தபால்காரர் சைக்கிளில் போவதை போல 

பௌன்சருக்கு பின் யார்க்கர் 
வீசபடுவதை போல 

நீ தேநீர் குடிக்கையில்
உன் கன்னம் அசைவதை போல

உன்னை நேசிக்க தொடங்குவது
அவ்வளவு சுலபமாயிருந்தது

ஒன்றாம் வாய்பாட்டை
மனனம் செய்வதை போல

ஒரு ச்சீஸ் கேக்கின்
மேல் கத்தி இறங்குவதை போல

ஒரு பச்சிளங்குழந்தையின் உறிஞ்சலுக்கு
தாயின் முலை பால்செரிவதை போல

எனவே
உன்னை பற்றி கவிதை எழுதுவது
எனக்கு அவ்வளவு தேவையாயிருக்கிறது

உன் காதணிகளுக்கு உயரமான
உன் கழுத்தின்மேல் தொங்கவேண்டும் என்பதை போல

உன் முன்நெற்றி கூந்தலுக்கு
உன் முகத்தில் விழுந்து கிடப்பதை போல

உன் மையிட்ட கண்களுக்கு
என் கனவில் வருவதை போல

ஒருவேளை

ஒரு சிறுமி 
அவள் ஆடையை மடிக்காமல் 
கசக்கி எறிந்தால் 

முக்கொம்பிலமர்ந்து வெகுநேரம் 
காவிரியின் நீர்சுழலை 
பார்த்து கொண்டிருந்தால் 

ஒரு அருவி
கட்டுவிரியன் பாம்பென
சுருண்டு படுத்தால்

எப்படியாவது வான்கோவின்
நட்சத்திரங்கள் நிறைந்த இரவை
உருண்டை பிடித்தால்

ஒருவேளை அவர்கள்
கொண்டையிட்ட அவள் கூந்தலின் அழகில்
ஒரு துளியை அறிந்து கொள்ள கூடும்.

2/21/14

எனக்கு விதிக்கபட்டிருக்கிறது

அந்த மழை இரவில் 
தூங்கி போவதற்க்கு என் கண்ணில் 
போதுமான தூக்கம் இருந்தது 
நான் விழித்திருந்தேன் 

அந்த தெருவின் முனையில் 
வலதுபுறம் திரும்ப 
போதுமான குழப்பம் இருந்தது 
நான் இடதுபுறம் திரும்பினேன்

அந்த பாதாள சுரங்கத்திற்குள்
நுழையாமல் இருக்க
போதுமான பயம் இருந்தது
நான் சிரித்தபடி உள்நுழைந்தேன்

அந்த கவிதையை
படிக்காமல் கடந்து போக
போதுமான சலிப்பு இருந்தது
நான் அதை படித்து திகைத்தேன்

உன்னை தவிர்த்து
மற்றவை பார்க்க
பிரபஞ்சம் பிரமாண்டமாய் முன் நின்றது
நான் உன்னை மட்டும்தான் பார்த்தேன்

நினைத்து பார்க்கையில்
உன்னை வந்தடைவது
எனக்கு விதிக்கபட்டிருக்கிறது
வந்தடைந்தேன்.

2/19/14

கவிதை எழுதுபவள்

சொற்கள் 
செல்லம் கொஞ்சும் நாய் குட்டியைபோல 
அவளது கன்னத்தை நக்கியபடியே இருக்கிறது.

அந்த சொற்களோடு 
என்ன பேசுவது என்று 
அவளுக்கு தெரிந்திருகிறது.

முதல் முதலாய்
சமைக்கையில் கடுகை தாளித்தவளை போல
சொற்களை வைத்து யாரும் செய்யாததை
தன்னியல்பாய் செய்தபடி இருக்கிறாள்.

சொற்களின் ஊரில்
அவளுக்கு எல்லாமும் தெரிந்திருகிறது..
காலையில் இட்லி வாங்கும் இடம் முதல்
இரவு 11.30க்கு வரும் கடைசி பேருந்து வரை.

சொற்களோடு அவளது பார்வைகளையும்
திகைக்க வைக்கும் உவமைகளையும் சேர்த்து
அழகிய கவிதைகளை நிகழ்த்தி காட்டுகிறாள் .

அவளுடைய கவிதைகள்
அவளிடமிருந்தோ
அவள் சொற்களிடமிருந்தோ வருவதில்லை
அது தனக்குத்தானே நீர் செரியும்
ஒரு அரிய
பூச்செடியிலிருந்து வருகிறது.

அரிவையவள் அரியவள்
கவிதை எழுதுபவள்.

2/18/14

பேயாக மாறும் தேவதை

வதங்குகையில் 
சீராக நிறம்மாறும் 
எறால் மீனை போல் 
என் முன் ஒரு தேவதை மெல்ல சீராக 
பேயென குணம் மாறுகிறாள்.

தேவதை கதைகள் கேட்டு தூங்கபோகும் 
என் காதலின் கண் முன் 
பல்லிகள் வாலை துண்டித்து
முன்னகரும் அதே லாவகத்தில்
தேவதை தன் அழகிய சிறகுகளை
வெட்டி எரிந்தபடி நடந்து போகிறாள்.

தேவதை தான் கொண்டிருக்கும்
பரிசுத்தமான கண்கள் என்பது
e bayயில் 12 டாலருக்கு
ஹாங்காங்கிலிருந்து வாங்கிய
4 வகை காண்டக்ட் லென்சுகளில் ஒன்று
என்று நான் கேட்காமலேயே சொல்கிறாள்.

தேவதை தான் வெள்ளை உடைகளை அணிந்திருப்பது
மிக தொந்தரவானது என்றும்
தான் அழுக்கை தாங்கும்
நல்ல ஜீன்சும்
இதயத்தின் ரத்தம் பட்டால்
கரை தெரியாதா நல்ல சிவப்பு t shirtம்
வாங்க விரும்புவதாய் தன் தோழியிடம்
என் காது பட சொல்லி கொண்டு இருக்கிறாள்.

இனி குறுஞ்செய்தி எதுவும்
அனுப்ப மாட்டேன் என்று
பதில் வராத குறுஞ்செய்தியின் கல்லறையில்
நான் சத்தியம் செய்திகொண்டிருக்கும்
நடு இரவில்
தேவதை கூரிய நகங்கள் வளர்ந்திருக்கும்
தன விரல்கள் கொண்டு
எலுமிச்சை பழங்கள், சில தகடுகள்,
ஒரு குழந்தையின் மண்டை ஓடு
எல்லாம் சேர்த்து அடுக்கடுக்கான அடுக்கடுக்கான
அர்த்தம் கொண்ட ஆனால்
நேரடி அர்த்தம் எதுவுமற்ற
ஒரு மந்திரித்த
குறுஞ்செய்தியை எழுதி
என் செல் பேசியின் எண்னை நோக்கி காற்றில் எறிகிறாள்.

அவள் கூந்தலின் பாடல்கள் 16

ஸ்பகெட்டி பாஸ்தா 
உன் கூந்தல்
இத்தாலிய வம்சாவளி 
எனது பார்வை.

அவள் கூந்தலின் பாடல்கள் 15

நைட்ல மவுண்ட்டு ரோடு போல 
அவ முடி நீண்டு கெடக்குது 
மாமா பைக்ல ஒரு 
ரௌண்டு கூட்டிட்டு போனு 
எதுத்தவீடு கொயந்த கேக்குது