2/22/14

போல

உன்மேல் ஈர்க்கபடுவது 
அவ்வளவு இயல்பாகயிருந்தது 

திங்கட்கிழமை காலை 
தபால்காரர் சைக்கிளில் போவதை போல 

பௌன்சருக்கு பின் யார்க்கர் 
வீசபடுவதை போல 

நீ தேநீர் குடிக்கையில்
உன் கன்னம் அசைவதை போல

உன்னை நேசிக்க தொடங்குவது
அவ்வளவு சுலபமாயிருந்தது

ஒன்றாம் வாய்பாட்டை
மனனம் செய்வதை போல

ஒரு ச்சீஸ் கேக்கின்
மேல் கத்தி இறங்குவதை போல

ஒரு பச்சிளங்குழந்தையின் உறிஞ்சலுக்கு
தாயின் முலை பால்செரிவதை போல

எனவே
உன்னை பற்றி கவிதை எழுதுவது
எனக்கு அவ்வளவு தேவையாயிருக்கிறது

உன் காதணிகளுக்கு உயரமான
உன் கழுத்தின்மேல் தொங்கவேண்டும் என்பதை போல

உன் முன்நெற்றி கூந்தலுக்கு
உன் முகத்தில் விழுந்து கிடப்பதை போல

உன் மையிட்ட கண்களுக்கு
என் கனவில் வருவதை போல

ஒருவேளை

ஒரு சிறுமி 
அவள் ஆடையை மடிக்காமல் 
கசக்கி எறிந்தால் 

முக்கொம்பிலமர்ந்து வெகுநேரம் 
காவிரியின் நீர்சுழலை 
பார்த்து கொண்டிருந்தால் 

ஒரு அருவி
கட்டுவிரியன் பாம்பென
சுருண்டு படுத்தால்

எப்படியாவது வான்கோவின்
நட்சத்திரங்கள் நிறைந்த இரவை
உருண்டை பிடித்தால்

ஒருவேளை அவர்கள்
கொண்டையிட்ட அவள் கூந்தலின் அழகில்
ஒரு துளியை அறிந்து கொள்ள கூடும்.

2/21/14

எனக்கு விதிக்கபட்டிருக்கிறது

அந்த மழை இரவில் 
தூங்கி போவதற்க்கு என் கண்ணில் 
போதுமான தூக்கம் இருந்தது 
நான் விழித்திருந்தேன் 

அந்த தெருவின் முனையில் 
வலதுபுறம் திரும்ப 
போதுமான குழப்பம் இருந்தது 
நான் இடதுபுறம் திரும்பினேன்

அந்த பாதாள சுரங்கத்திற்குள்
நுழையாமல் இருக்க
போதுமான பயம் இருந்தது
நான் சிரித்தபடி உள்நுழைந்தேன்

அந்த கவிதையை
படிக்காமல் கடந்து போக
போதுமான சலிப்பு இருந்தது
நான் அதை படித்து திகைத்தேன்

உன்னை தவிர்த்து
மற்றவை பார்க்க
பிரபஞ்சம் பிரமாண்டமாய் முன் நின்றது
நான் உன்னை மட்டும்தான் பார்த்தேன்

நினைத்து பார்க்கையில்
உன்னை வந்தடைவது
எனக்கு விதிக்கபட்டிருக்கிறது
வந்தடைந்தேன்.

2/19/14

கவிதை எழுதுபவள்

சொற்கள் 
செல்லம் கொஞ்சும் நாய் குட்டியைபோல 
அவளது கன்னத்தை நக்கியபடியே இருக்கிறது.

அந்த சொற்களோடு 
என்ன பேசுவது என்று 
அவளுக்கு தெரிந்திருகிறது.

முதல் முதலாய்
சமைக்கையில் கடுகை தாளித்தவளை போல
சொற்களை வைத்து யாரும் செய்யாததை
தன்னியல்பாய் செய்தபடி இருக்கிறாள்.

சொற்களின் ஊரில்
அவளுக்கு எல்லாமும் தெரிந்திருகிறது..
காலையில் இட்லி வாங்கும் இடம் முதல்
இரவு 11.30க்கு வரும் கடைசி பேருந்து வரை.

சொற்களோடு அவளது பார்வைகளையும்
திகைக்க வைக்கும் உவமைகளையும் சேர்த்து
அழகிய கவிதைகளை நிகழ்த்தி காட்டுகிறாள் .

அவளுடைய கவிதைகள்
அவளிடமிருந்தோ
அவள் சொற்களிடமிருந்தோ வருவதில்லை
அது தனக்குத்தானே நீர் செரியும்
ஒரு அரிய
பூச்செடியிலிருந்து வருகிறது.

அரிவையவள் அரியவள்
கவிதை எழுதுபவள்.

2/18/14

பேயாக மாறும் தேவதை

வதங்குகையில் 
சீராக நிறம்மாறும் 
எறால் மீனை போல் 
என் முன் ஒரு தேவதை மெல்ல சீராக 
பேயென குணம் மாறுகிறாள்.

தேவதை கதைகள் கேட்டு தூங்கபோகும் 
என் காதலின் கண் முன் 
பல்லிகள் வாலை துண்டித்து
முன்னகரும் அதே லாவகத்தில்
தேவதை தன் அழகிய சிறகுகளை
வெட்டி எரிந்தபடி நடந்து போகிறாள்.

தேவதை தான் கொண்டிருக்கும்
பரிசுத்தமான கண்கள் என்பது
e bayயில் 12 டாலருக்கு
ஹாங்காங்கிலிருந்து வாங்கிய
4 வகை காண்டக்ட் லென்சுகளில் ஒன்று
என்று நான் கேட்காமலேயே சொல்கிறாள்.

தேவதை தான் வெள்ளை உடைகளை அணிந்திருப்பது
மிக தொந்தரவானது என்றும்
தான் அழுக்கை தாங்கும்
நல்ல ஜீன்சும்
இதயத்தின் ரத்தம் பட்டால்
கரை தெரியாதா நல்ல சிவப்பு t shirtம்
வாங்க விரும்புவதாய் தன் தோழியிடம்
என் காது பட சொல்லி கொண்டு இருக்கிறாள்.

இனி குறுஞ்செய்தி எதுவும்
அனுப்ப மாட்டேன் என்று
பதில் வராத குறுஞ்செய்தியின் கல்லறையில்
நான் சத்தியம் செய்திகொண்டிருக்கும்
நடு இரவில்
தேவதை கூரிய நகங்கள் வளர்ந்திருக்கும்
தன விரல்கள் கொண்டு
எலுமிச்சை பழங்கள், சில தகடுகள்,
ஒரு குழந்தையின் மண்டை ஓடு
எல்லாம் சேர்த்து அடுக்கடுக்கான அடுக்கடுக்கான
அர்த்தம் கொண்ட ஆனால்
நேரடி அர்த்தம் எதுவுமற்ற
ஒரு மந்திரித்த
குறுஞ்செய்தியை எழுதி
என் செல் பேசியின் எண்னை நோக்கி காற்றில் எறிகிறாள்.

அவள் கூந்தலின் பாடல்கள் 16

ஸ்பகெட்டி பாஸ்தா 
உன் கூந்தல்
இத்தாலிய வம்சாவளி 
எனது பார்வை.

அவள் கூந்தலின் பாடல்கள் 15

நைட்ல மவுண்ட்டு ரோடு போல 
அவ முடி நீண்டு கெடக்குது 
மாமா பைக்ல ஒரு 
ரௌண்டு கூட்டிட்டு போனு 
எதுத்தவீடு கொயந்த கேக்குது