2/18/14

பேயாக மாறும் தேவதை

வதங்குகையில் 
சீராக நிறம்மாறும் 
எறால் மீனை போல் 
என் முன் ஒரு தேவதை மெல்ல சீராக 
பேயென குணம் மாறுகிறாள்.

தேவதை கதைகள் கேட்டு தூங்கபோகும் 
என் காதலின் கண் முன் 
பல்லிகள் வாலை துண்டித்து
முன்னகரும் அதே லாவகத்தில்
தேவதை தன் அழகிய சிறகுகளை
வெட்டி எரிந்தபடி நடந்து போகிறாள்.

தேவதை தான் கொண்டிருக்கும்
பரிசுத்தமான கண்கள் என்பது
e bayயில் 12 டாலருக்கு
ஹாங்காங்கிலிருந்து வாங்கிய
4 வகை காண்டக்ட் லென்சுகளில் ஒன்று
என்று நான் கேட்காமலேயே சொல்கிறாள்.

தேவதை தான் வெள்ளை உடைகளை அணிந்திருப்பது
மிக தொந்தரவானது என்றும்
தான் அழுக்கை தாங்கும்
நல்ல ஜீன்சும்
இதயத்தின் ரத்தம் பட்டால்
கரை தெரியாதா நல்ல சிவப்பு t shirtம்
வாங்க விரும்புவதாய் தன் தோழியிடம்
என் காது பட சொல்லி கொண்டு இருக்கிறாள்.

இனி குறுஞ்செய்தி எதுவும்
அனுப்ப மாட்டேன் என்று
பதில் வராத குறுஞ்செய்தியின் கல்லறையில்
நான் சத்தியம் செய்திகொண்டிருக்கும்
நடு இரவில்
தேவதை கூரிய நகங்கள் வளர்ந்திருக்கும்
தன விரல்கள் கொண்டு
எலுமிச்சை பழங்கள், சில தகடுகள்,
ஒரு குழந்தையின் மண்டை ஓடு
எல்லாம் சேர்த்து அடுக்கடுக்கான அடுக்கடுக்கான
அர்த்தம் கொண்ட ஆனால்
நேரடி அர்த்தம் எதுவுமற்ற
ஒரு மந்திரித்த
குறுஞ்செய்தியை எழுதி
என் செல் பேசியின் எண்னை நோக்கி காற்றில் எறிகிறாள்.

No comments:

Post a Comment