2/21/14

எனக்கு விதிக்கபட்டிருக்கிறது

அந்த மழை இரவில் 
தூங்கி போவதற்க்கு என் கண்ணில் 
போதுமான தூக்கம் இருந்தது 
நான் விழித்திருந்தேன் 

அந்த தெருவின் முனையில் 
வலதுபுறம் திரும்ப 
போதுமான குழப்பம் இருந்தது 
நான் இடதுபுறம் திரும்பினேன்

அந்த பாதாள சுரங்கத்திற்குள்
நுழையாமல் இருக்க
போதுமான பயம் இருந்தது
நான் சிரித்தபடி உள்நுழைந்தேன்

அந்த கவிதையை
படிக்காமல் கடந்து போக
போதுமான சலிப்பு இருந்தது
நான் அதை படித்து திகைத்தேன்

உன்னை தவிர்த்து
மற்றவை பார்க்க
பிரபஞ்சம் பிரமாண்டமாய் முன் நின்றது
நான் உன்னை மட்டும்தான் பார்த்தேன்

நினைத்து பார்க்கையில்
உன்னை வந்தடைவது
எனக்கு விதிக்கபட்டிருக்கிறது
வந்தடைந்தேன்.

1 comment:

 1. வணக்கம்

  கவிதை அருமை... ரசித்தேன் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete