3/27/14

அவள் கூந்தலின் பாடல்கள் 18


ஆடாமல் அசையாமலிரு   
காற்று உன் கூந்தலை வரைந்து கொண்டிருக்கிறது

3/24/14

கூலிங் கிளாஸ், ஜீன்ஸ், t ஷர்ட் அணிகிறேன்

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் 
எமது எல்லாமும் 
வஞ்சிக்கபட்டதின், சுரண்டபட்டதின்,
மறுக்கபட்டதின், பறிக்கபட்டதின்,
இழிவுபடுத்தபட்டதின் வலி 
எனது கண்களில் பெருங்கோபமாய் 
நீல நிற தீயென 
கனன்று எரிகிறது

அம்பேத்கரும் மால்க்கம் x'ம்
படித்த என் கண்கள்
எப்போதும் எமது எதிர்கால திட்டத்தை
தன்னுள் சுமந்தேயிருக்கிறது

எதிரிகளை நம்பிக்கையோடும் தோழமையோடும்
பார்க்காமலிருக்க
எனது கண்களுக்கு போர் பயிற்ச்சி
நடந்து கொண்டிருக்கிறது

இவையாவையும் உன்னிடம்
மறைக்கத்தான்
நான் கூலிங் கிளாஸ் அணிந்தேன்

புடம்போட்ட இரும்பென இறுகிய
எமது மார்பு
ஓயாமல் உழைத்திருந்த
எம் மூதாதையரின் D.N.A தந்த வரம்

புரதமும் இரும்பும் நிறைந்த
மாட்டிறைச்சி விருந்துண்டு
எமது தோளும் தசைகளும்
தினவெடுத்திருகின்றன

காடு மேடெல்லாம்
ஓடி களைத்து ஓய்வில்
பறையிசைக்கு ஆடி களிக்கும்
எமது கால்களை கண்டால்
ஸ்பானிய குதிரைகளும் மிரளும்

இவையாவையும் எடுப்பாய்
காட்டத்தான்
நான் ஜீன்சும் t ஷர்ட்டும் அணிந்தேன்

நீ
சாதிக்கு பெற்று
சாதிக்கு வளர்த்த
உன் சாதி பெண்
எனக்கு சக மனுஷி
எனது தாய்
எனது தோழி
எனது காதலி

கண்டா
ஓலி
ஆமாடா
நான் கூலிங் கிளாஸ், ஜீன்ஸ்,
t ஷர்ட் அணிகிறேன்
உன் சாதி பெண்களை கவர
வந்து உன் தெருவில் நிற்கிறேன்.

குறுஞ்செய்திகள்

மேல் நோக்கி நீண்ட 
உன் நெற்றிபொட்டு 
உனது 
எந்த சாலையின் மைல் கல்?
 

3/22/14

அழகு by Partaw Naderi


உனது குரல் பசுமையான தொலைதூர கிராமத்திலிருந்து 
வந்து போகும் ஒரு பெண்ணை போலிருக்கிறது .

உயரமாய் அழகாயிருக்கும் அவள் உடற்கட்டை 
மலைகளிளிருக்கும் பைன் மரங்கள் அறிந்திருகின்றன.

அவள் அந்தியில் நிலவொளியின் குடையில் 
தேவலோகத்தின் நீர் ஊற்றில் தன் உடல் அலம்புகிறாள் 

அவள் வைகறையில் வீட்டிற்க்கு பரிசுத்தமான ஒளியை
குடுவையில் கையில் ஏந்தி வருகிறாள்.

அவள் சூரியனின் நதியை
ஒவ்வொரு மிடறாய் அருந்துபவளாயிருகிறாள்.

உனது குரல் பசுமையான தொலைதூர கிராமத்திலிருந்து
வந்து போகும் ஒரு பெண்ணை போலிருக்கிறது .

அவள் சிற்றோடைகளின் பாடல்களை
பிரதியெடுத்து காற்சலங்கை அணிந்தவள்

அவள் மழையின் முனுமுனப்பை
சுழித்து காதனியாய் அணிந்தவள்

அவள் அருவிகளின் பட்டிழைகளை நெய்து
கழுத்தில் அட்டியல் அணிந்தவள்

இவையாவும் சூரியனின் தோட்டத்தில்
காதலின் வெவ்வேறு வண்ணங்களில் மலர்ந்து அழகாக்குகிறது

ம்ம் நீயும்
உனது குரலுக்கு குறைவில்லாமல் அழகாயிருக்கிறாய்

எத்தனையோ மெட்டுகளில் இளையராஜா என்னை தொட்டதுபோலஒவ்வொரு நிலபரப்புக்கும், ஒவ்வொரு மொழி குழுவினருக்கும் அவர்கள் பேசும் மொழி, உண்ணும் உணவு, வாழும் பூகோளம், அவர்களை சுத்தி தினமும் கேட்கும் சத்தங்கள், அவர்களோடு வாழும் பறவைகள் விலங்குகள், அவர்கள் தினமும் பார்க்கும் வண்ணங்கள் மற்றும் இன்னும் பல புற காரணிகள் கொண்டு அவர்களுக்கு என்று ஒரு தாள கட்டு உருவாகும் போல.

இளையராஜாவின் 80ல் தொடங்கி 90களின் இறுதி வரை அவர் இசையமைத்த பாடல்களில் குறிப்பாக கிராமிய பாடல்களில் உள்ள தாளம் மிகுந்த தனித்துவமானது. ஏன் தனித்துவமானது என்றால் அது பாடல் என்பதை தாண்டி தமிழ் நிலபரப்போடு நம்மை ஒன்ற செய்யும் தன்மை உடையது. அதாவது அந்த பாடல்களை கேட்கும் போது நாம் இயல்பிலேயே ஒரு அழகிய தமிழ் அடையாளம் கொண்ட ஒரு முகத்தையோ ஒரு தமிழ் பிரதேசத்தின் காட்சியையோ அல்லது தமிழ் மக்களோடு தொடர்புடைய ஒரு மகிழ்வான தருனத்தையோ நினைஊட்டுவதாய் இருக்கும். இதை இளையராஜா எப்படி தன் பாடல்களில் நிகழ்த்தி காட்டினார் என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் இளையராஜாவின் பாடல்களை ரசிக்கும் கொண்டாடும் என் போன்றோருக்கு அவரது இசை comfort food போல comfort musicகாக உள்ளது. நான் comfort music என்று ஏன் சொல்கிறேன் என்றால் அவரது இசை இனிமையான மண் சார்ந்த ஞாபகங்களை கிளறி மனதிற்கு ஒரு ஆறுதலும் பாதுகாப்பும் அளிப்பதாக இருக்கிறது.

இளையராஜாவுக்கு அடுத்து வந்த இசை தலைமுறையினர் ரஹ்மான் யுவன் ஹாரிஸ் போன்றோருக்கு இந்த தாளம் கைவரவில்லை அல்லது தெரியவில்லை அல்லது அவர்களுக்கு பிடிக்கவில்லை. மேற்கத்திய துள்ளல் இசை மீது அவர்களுக்கு இருந்த விருப்பமும், நகரத்தில் பிறந்து வளர்ந்த சூழலும், "நவீன" "நாகரீக" இசை மீதான புரிதலும் அவர்களை இளையராஜாவின் இசையில் இருந்த அந்த தாளத்தில் இருந்து அவர்களை வெகுதூரம் விலகி செல்ல வைத்தது. அவர்கள் அற்புதமான பல பல பாடல்களை தந்து இருந்தாலும் அந்த பாடல்கள் நிஜத்தில் தமிழிசை பாடல்கள்தான என்ற உணர்வு எப்பொழுதும் உண்டு.

திடீர் இன்ப அதிர்ச்சியாக இப்பொழுது வந்து இருக்கும் புதியதலைமுறை இசையமைபாளர்கள் பலர் getting back to the roots என்பதை போல திரும்பவும் தமிழ் இசைக்கான தாளத்தை இளையராஜா விட்ட இடத்தில் இருந்து மீட்டு எடுக்க நம்பிக்கை ஊட்டும் விதத்தில் தேட தொடங்கி இருகிறார்கள். குறிப்பாக இமான்(ஒன்னும் புரியல - கும்கி), சந்தோஷ் நாராயணன்(பொட்ட புள்ள - குக்கூ) போன்றோர். எனக்கு இது பெரு மகிழ்ச்சியாக உள்ளது.

இளையராஜாவின் பாடல்களில் உள்ள தாளத்தை இசைரீதியாக இசை தெரியாத என்னால் விளக்க முடியவில்லை. ஆனால் அவர் ரொம்பவும் deliberate ஆக ஆனால் மிக இயல்பாக ஒரு ethnic moodஐ உருவாக்கி அதை பின்னணி இசை சேர்ப்பின் மூலம் மிக விஸ்தாரமாக்கி நிறைய நிரப்ப படாத இடங்களையும் தந்து கேட்பவனுக்கு அவனது கனவுலகத்தில் நுழைய போதுமான வாய்ப்பும் தந்து அடங்கொக்க மக்க..என்னுமோ போங்க. பெருங்கலைஞன் மண்ணின் மைந்தன். ராஜாவின் இசை முழுதாய் புரிந்து கொள்ள தமிழ் பெண்கள் தமிழ் நாட்டின் சூரியின் நிலவு தமிழ் நாட்டின் ஆறுகள் மலைகள் தமிழ் நாட்டின் காடுகள் இதை எல்லாவற்றையும் குறைந்த பட்சம் பார்த்தாவது இருக்க வேண்டும்.

இப்பொழுது இதை எழுத தூண்டிய இரண்டு பாடல்கள்

https://www.youtube.com/watch?v=hrzVfkRQZa0

https://www.youtube.com/watch?v=Z6NA0LxhY6s